கனவு வீதி

அந்த இடத்திற்குச் செல்ல இப்படியே நேரே சென்றால் குறுக்கு வழி.. எனக்காக சிலர் அங்கே காத்திருக்கிறார்கள்.

போகும் வழியில் இது என்ன புது வேலி..? ஆனாலும் ஆள் தாராளமாக் நுழையும் அளவுக்கு வேலியில் இடை வெளி.. உள்ளே நுழைய, அங்கே எதோ கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்தது... சவுக்குக் கம்புகள் பலவற்றை இருபுறமும் கூறாக்கி வைத்திருந்தார்கள்... மிகவும் கவனமாக அவற்றைத் தாண்டி மறுபுறம் வந்தால் அங்கே வேலி இடைவெளி இல்லாமல் நெருக்கமாக இருந்தது.. எப்படி அந்தப் பக்கம் செல்வது என்று எண்ணும் போதே திறந்திருந்த அந்த கேட் வரவேற்றது.. அதன் வழி வெளிவர, ஓடி வந்த வாயில்காப்போன், "சார் இந்தப் பக்கம் போகக் கூடாது" என்று தடுத்தார்... அருகில் இருந்த உயர் அதிகாரி, "சார் போகட்டும்..." என வழிவிட, வெளிவந்து விட்டேன்..

அதையும் தாண்டி நேர் கோடில் செல்ல வேண்டும்.. ஆனால் வழி மறைத்து பெரிய பெரிய கட்டிடங்கள், தொழிற்சாலைகள் போல்.. வலது பக்கம் திரும்பி சிறிது தூரம் சென்று இடது பக்கமாகத் திரும்பலாம் என்று பயணிக்க... ஏதோ ஒரு தொழிற்சாலைக்குள் நடப்பது போல் இருந்தது... சிலர் அப்பொழுதுதான் பணிக்கு வந்து கொண்டிருந்தனர்...

திடீரன்று என்னைப் பார்த்து ஓடி வந்தாள் அவள்.. தாமரைப் பூ நிற சேலையில், அன்றலர்ந்த பூ போல் முல்லைப் பல் மிளிர, முகம் மலர,

"என்ன இங்க..."

"சும்மாத்தான்.. வா சிறிது நேரம் பேசலாம்.."

"ஐய்யய்யோ... நிறைய வேலை இருக்கு.." கையில் மடித்திருந்த குறுக்கெழுத்து நோட்டை அப்பொழுதுதான் கவனித்தேன்.."

"நான் போகணும்..." என்று சொல்லி வேகமாக சென்று விட்டாள்..

'ச்சே" என்று திட்டி, 'இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன...' என்று கடுப்பில் காலை உதற, அருகில் இருந்த ஏதோ ஒன்றில் கால் இடிக்க, 'ஆ...' வலித்தது.. கடந்து சென்ற இரண்டு பெண்கள் களுக்கென்று சிரித்தனர்...

தூரத்தில் TMS-PBS கோம்போவில்
'விண்ணோடு விளையாடும்
பெண் அந்தப் பெண் அல்லவோ..
சென்றேன்...
கண்டேன்...
வந்தேன்...

கேட்டது... ம்... ம்.... ம்.... ஹம்மிங்க் விட்டுப் போயிருந்தது...

மனதுக்குள் ஹம்மிக்கொண்டே கடக்க, வழியில் விகார முகங்களும் வக்கர சிந்தனைகளும் உள்ள சிலர், நமுட்டுச் சிரிப்பு சிரித்து... "சார் என்ன இந்தப் பக்கம்...."

வேக வேக மாக நடக்க வழி நெடுக, பெரிய பெரிய இயந்திரங்கள், உலோகக் கம்பிகள், பாலங்கள் அமைக்கும் கர்டர்கள், என இரைந்து கிடக்க, டார்பாலினால் சில பிணங்களை மூடி வைத்திருந்தனர்... நாத்தம் மூக்கைத் துளைக்க ஓடி வர, மதுரவாயில் பைபாஸ் அருகில் நிற்கிறேன்... பைபாஸ் சாலையின் இருமறுங்கும் பச்சைப் பசேல் என வயல்கள்..

நான் எப்படி இங்கே வந்தேன்.. நான் சைதாப்பேட்டை அல்லவா செல்ல வேண்டும்... அங்கே எனக்காக சிலர் காத்திருக்கிறார்கள்...

வலுக்கட்டாயமாக அந்தக் கனவிலிருந்து விடுபட்டு விழித்துக் கொள்ள, என்ன மணி என்று தெரியவில்லை... ஜன்னல்கள் சூரியன் வந்த அறிகுறியைக் காட்டவில்லை.. நிச்சயம் நடு நிசி அருகில்தான் இருக்கும்.. தொப்பலாக வேர்த்து இருந்தது...

கால் மாட்டில் இருந்த ஏசி ஸ்விட்சை எழுந்து போட்டு, மீண்டும் ஒரு தூக்கத்திற்கு முயற்சிக்க, அதில் யார் வருவார்களோ...?

கனவுகள் கட்டுப் பாடற்றுத் திரிகின்றன....

---முரளி

எழுதியவர் : முரளி (2-Jun-17, 9:12 am)
Tanglish : kanavu viidhi
பார்வை : 284

சிறந்த கட்டுரைகள்

மேலே