ஆண்டவை

காளி என்னைக் காப்பாற்றிய காட்சியை முன்னர் பதிந்திருந்தேன் ! அதற்கு முன்னம் நானிருந்தது எப்படி ?

கால வனத்திடையே - தனியோர்
. காட்டு மரநிழலில்
பாலன் வசித்திருந்தேன் - உறவாய்ப்
. பற்பல கொண்டிருந்தேன் !
மூலையில் கொள்கையெனும் - நரிகள்
. முந்தித் திரிந்ததங்கே
வாலடித் தாணவத்தின் - அரிகள்
. வாழ்ந்து வளர்ந்ததங்கே !

என்றன் அருகினிலே - பயமாம்
. ஏற்றமில் லாகரிதான்
நின்று வளர்ந்ததுவே - வயதை
. நீட்டிச் சென்றதிவை !
ஒன்றும் அறிதற்கில்லா - சிறியன்
. ஊமை பாலகன்நான்
நன்றென் றிதையெண்ணியே - பரிவாய்
. நாளும் வளர்த்துவந்தேன் !

அச்சமெ னுங்கரிதான் - எனையும்
. அங்கத்தி லேசுமக்கும் !
மிச்ச உறவுகளோ - பெயரை
. மீட்டியே பின்தொடரும் !
துச்ச மெனுங்காட்டில் - அடியேன்
. தோற்றத் தரசெனவே
இச்சை வளர்த்துக்கொண்டேன் - தொடரும்
. இன்னல்களை அறியேன் !

சிறுபி ராயத்திலே - எனது
. சிந்தனைக் கொப்பியவை
நறுமலர் வாசமென்றே - மனத்தில்
. நாளும் மணந்தனவே !
உறுவய தேறிடவே - சிறிதாய்
. ஊடல் உறவுக்குள்ளே
பிறந்ததை நானறிந்தேன் - உறவில்
. பிரிவுண் டென்றமர்ந்தேன் !

நானும் இயக்கிவைத்த - யாவையும்
. நாளாகிப் போனபின்னே
தானும் எனையியக்கும் - பழக்கம்
. தங்கிடக் கண்டுகொண்டேன் !
மானப் பெருங்கரியோ - செயல்கள்
. மறுத்து பயங்கொடுத்தே
ஈனச் செயல்களுக்கே - எனைத்தான்
. ஈடுப டுத்தியதே !

ஆணவச் சிங்கங்களோ - புகழை
. அற்புத மென்றுநம்பி
வீணென என்னுழைப்பை - மறக்கும்
. வித்தகம் சொல்லினவே !
பூணுங் கொள்கைநரிகள் - செவியில்
. புதுப்புது சாத்திரங்கள் !
வேணுமென் றேயொலித்து - பொழுதை
. வெறுக்க வைத்தனவே !

எட்டுத் திசையதிரச் - சிதறி
. ஏவிய தோடுமென்றே
விட்டுத் தொலைகவென்றே - கதறி
. வீறுடன் கத்திநின்றேன் !
ஒட்டிய அத்தனையும் - பகையாய்
. ஒன்றித் திரண்டனவே !
பட்டது போதுமென்றே - வனத்தைப்
. பாலன் பிரியவந்தேன் !

ஆளில்லாக் காடல்லவோ ! - வழியை
. அறிதற் கெளிதாமோ ?
நாளெலாம் காட்டினிலே - கதியை
. நாடித் தவித்திருந்தேன் !
கோளும் எனையலைக்க - இதுநாள்
. கொண்ட வலிமைவிழக்
காளியை வேண்டிநின்றேன் - அதுதான்
. கண்ட வொருவழியே !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (4-Jun-17, 2:35 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 66

மேலே