வார்குழல்

இன்று காலை தாயுமான சுவாமி மட்டுவார் குழலம்மை தரிசனம்....பாடலோடு !

வார்குழல் - மட்டு வார்குழல்
வணங்கும் மனமெங்கும் ஆர்கழல் !

யாரிவள் ? - நெஞ்சத் தேரிவள்
. யாண்டும் முகிழ்ந்திடும் பூவிவள் !
சீரிவள் - மழைக் காரிவள்
. சீறிடும் வீரத்தின் பேரிவள் !

நேசத் தோடொரு பாசத்தின் பாவம்
. நெஞ்சிடைக் காட்டிடும் நேர்த்தியினாள் !
நேரில் தாக்கிடும் தீமையின் கோர
. நெறிதனை மாய்த்திடும் சேர்க்கையினாள் !
வீசும் காற்றினில் விரிந்திடும் பூவாய்
. விந்தையின் தோற்றம் காட்டிடுவாள்
வித்யை நல்கிடும் விசித்திர மாவாள்
. வீணையென் றேயெனை மீட்டிடுவாள் !

காலைச் சுடரெனக் கண்களில் நிற்பாள் !
. கவிதையில் கனலாய்ப் பூத்திருப்பாள்
கன்னி உருவினில் காட்சிக்கு வருவாள்
. காட்டினில் ஒளியாய்த் துணைபுரிவாள் !
ஜ்வாலை உருவெனத் திரியினில் வளர்வாள் !
. சாற்றிடும் மறையில் விளங்கிடுவாள் !
சாகும் உடலுயிர் மனத்தினைத் தாளில்
. சார்த்திட நம்மைக் காத்தருள்வாள் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (4-Jun-17, 2:38 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 94

மேலே