முதல் பிரிவு

................முதல் பிரிவு............

ஹாசினிக்கு அவளது வேலைகள் எதுவுமே சரியாக ஓடவில்லை.நேற்று வந்ததிலிருந்து அவளது மனம் ஹரியை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தது.அவள் இங்கு எதற்காக வந்தாலோ அந்த வேலையில் அவளது கவனம் செல்லவே மறுத்தது...

ஹாசினி எம்.சி.ஆர் சொவ்ட்வெயார் கம்பனியில் பிரொஜெக்ட் மனேஜராக பணி புரிகிறாள்.அவளது கம்பனி சார்பான ஒப்பந்தமொன்றினை முடித்துக் கொடுப்பதற்காகவே இங்கு வந்திருந்தாள்.அவளது வேலையில் இவ்வாறான வெளியூர் பயணங்கள் அடிக்கடி நிகழ்வது தான்..ஆனால் இது போல் என்றும் அவளுக்கு இருந்ததில்லை...அவளது மனம் ஹரியை மட்டுமே தேடிக் கொண்டிருந்தது...

அவர்களிடையே நடந்த அந்த வாக்குவாதத்தின் பின் ஹரியும் ஹாசினியும் பேசிக் கொள்வதில்லை...தவறு இருவர் மேலும் உள்ளது என்று தெரிந்தாலும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வதற்கு இருவருக்குமே ஈகோ இடம் தரவில்லை...இப்படியாக ஒரு மாதம் கடந்த நிலையில் தான் ஹாசினியின் வெளியூர்ப் பயணமும் வந்தது...

கல்யாணமானதிலிருந்து அவர்களுக்கிடையே சண்டையே வந்ததில்லை என்று சொல்லிவிடமுடியாது..சின்னச் சின்ன சண்டைகள்,சண்டை முடிந்த பின் செல்லமான சீண்டல்கள்,அவள் வெட்கத்தை தட்டி எழுப்பும் அவனின் மென்மையான தீண்டல்கள்,இறுகிய அணைப்பில் இதழ்கள் இணைய அவர்களின் சண்டைகள் எல்லாம் ஓர் நொடியில் கரைந்துவிடும்...இதுவே அவர்களுக்கிடையில் ஏற்பட்ட முதல் பிரிவு...எப்போது ஹாசினி வெளியூர் பயணங்களுக்கென கிளம்பினாலும் ஹரி தனது செல்லச் சேட்டைகள் அனைத்தையும் முடித்த பின்னே அவளை அனுப்பி வைப்பான்...

முதல் முறையாக அவனது விலகலை சந்தித்தவளுக்கு ஒரு விடயம் மட்டும் தெளிவாகப் புரிந்தது...ஹரியை அவள் எந்தளவிற்கு நேசிக்கிறாள் என்பதை புரிந்து கொண்டாள்...இனி ஒருபோதும் அவனை விட்டுப் பிரியவே கூடாது என எண்ணிக் கொண்டவள் நாளை செய்ய வேண்டிய பிரசன்டேசனுக்கான தயார்ப்படுத்தலில் இறங்கினாள்...

இங்கே ஹரியின் நிலைமையோ அவளை விடவும் மோசமாக இருந்தது...அவள் இல்லாத வீடே அவனுக்கு வெறுமையாக இருந்தது...இந்த ஒரு மாதமும் அவளை விட்டு விலகியிருக்கவே அவன் பட்ட பாடு அவனுக்கு மட்டுமே தெரியும்...ஆனாலும் அவனால் அவனது ஈகோவை விட்டு அவளிடம் பேச மனம் இடம் கொடுக்கவில்லை...அவளே வந்து பேசட்டும் என்று வைராக்கியமாக இருந்தவனுக்கு அவள் இல்லாத தனிமை நரகமாகத் தோன்றியது...அவள் வேலை முடித்து வந்ததும் ஒரு மாதப் பிரிவையும் ஈடுகட்டும் அளவிற்கு அவளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டுமென எண்ணிக் கொண்டவன் அவளது போட்டோவை அணைத்தவாறே உறங்கிப் போனான்...

மறு நாளைக்கான அனைத்து வேலைகளையும் முடித்த ஹாசினியும் அவனது நினைவுகள் தந்த புன்னகையோடே உறங்கிப் போனாள்...அடுத்த நாள் அவள் வந்த வேலைகள் அனைத்தும் நினைத்ததை விடவும் சிறப்பாகவே முடிந்தது.அது தொடர்பான தகவல்கள் அனைத்தையும் தயார் செய்து எம்.டி க்கு மெயில் பண்ணியதுமே அங்கிருந்து கிளம்பிவிட்டாள்....வரும் வழி முழுதும் ஹரியை எப்படியெல்லாம் சமாதானப்படுத்தலாம் என யோசித்தவாறே இருந்தாள்....சுமார் 15 மணி நேரப் பயணத்தின் பின் வீட்டை வந்தடைந்தவளுக்கு வீடு பூட்டியிருந்தது மிகவும் ஏமாற்றமாக இருந்தது...

"இந்த இரவு நேரத்தில எங்க போய் தொலைஞ்சான்,நாம இவன பார்க்கன்னு ஓடோடி வந்தா...நம்மள காக்க வைக்கிறதே இவனுக்கு வேலையாப் போச்சு..."அவனைச் செல்லமாக மனதிற்குள் திட்டியவள் வெளியே இருந்த ஊஞ்சலில் அமர்ந்தவாறே அவனுக்காக காத்திருக்கத் தொடங்கினாள்...

அவள் இல்லாத வீட்டில் இருக்கப் பிடிக்காமல் வெளியில் சென்றிருந்த ஹரி தாமதமாகவே வீட்டிற்கு வந்தான்....நாளை காலையே ஹாசினி வருவாள் என்று எதிர்பார்த்து இருந்தவனுக்கு ஊஞ்சலில் அவள் சாய்ந்தவாறே உறங்கியிருந்ததைக் கண்டதும் இது கனவா இல்லை நனவா என்பதை அறிய தன்னையே ஒரு தடவை கிள்ளிப் பார்த்துக் கொண்டான்....

அவளது உறக்கம் கலையாமலிருக்க சத்தமின்றியே நடந்து வந்தவன் அவளைப் பார்த்தவாறே அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்....தன் முன் ஏதோ நிழலாடுவதை உணர்ந்து லேசாகக் கண்விழித்தவள் ஹரி அவளையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் கண்ணை கசக்கியவாறு எழும்பி அமர்ந்தாள்...

இருவரின் பார்வைகள் மட்டுமே அங்கு பல கதைகள் பேச வார்த்தைகள் அவர்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கின...ஹாசினிக்கு அவனது தோற்றத்தை பார்க்கவே வேதனையாக இருந்தது...தன் விரல்களால் அவனது தலையை கலைத்து விளையாடியவள் அவனை அப்படியே மடியில் தாங்கிக் கொண்டாள்...மௌனமாய் சில நேரங்கள் தங்கள் ஒரு மாத பிரிவினையும் கண்ணீரால் கரைத்தவர்கள் ஒருவரை ஒருவர் இறுக்கமாய் அணைத்துக் கொண்டார்கள்...

அங்கே பேசுவதற்கு வார்த்தைகள் இருக்கவில்லை...மனதோடு மனது மட்டுமே காதல் மொழிகளை பரிமாறிக் கொண்டிருக்க,உதடுகள் மௌனமாய் காதல் அத்தியாயத்தை கவிதையாய் வரைந்து கொண்டிருந்தன...இதமான தென்றல் காற்றும் அவர்களை மெதுவாய் வாழ்த்தியே விடை பெற...மழைத்தூறல்கள் அவர்களை ஆசீர்வதிக்க வானிறங்கி வந்து கொண்டிருந்தன...நாங்களும் அவர்களை வாழ்த்தியவாறே இனிதாய் விடைபெறுவோம்..!



.....இனி எல்லாம் வசந்தமே.....

எழுதியவர் : அன்புடன் சகி (14-Jun-17, 6:30 am)
Tanglish : muthal pirivu
பார்வை : 1437

மேலே