மனிதனைக் காணோம்

மனிதனைக் காணோம்

பூமிப் பந்து
புதுமையாய் சுழல்கிறதா
இல்லை இல்லை
இல்லவே இல்லை
மனித செயற்பாடுதான்
மாற்றி அதைச் சுழற்றுகிறது
சாதனையில் மனிதன்
சரித்திரம் படைத்துவிட்டான்
ஆனால்
சரித்திரத்தால் மனிதனை
சந்திக்க முடியவில்லை

எங்கெல்லாம் தேடி
ஏமாந்து போய் விட்டது
மனிதா
மற்றனைத்தை கண்டாலும்
மாநிலத்தில்
மனிதத்தை காண்பது நாம்
யாரிடத்தில்
சமகால உலகில்
சமூகப் பரப்பில்
அறிவாற்றல் ஆளுமை
அனைத்தும்தான் கண்டன வளர்ச்சி
மனிதம் மாத்திரம் தான்
வர வர ஏன் தளர்ச்சி

நேயத்தை இப்போது
நேசிப்போர் யாருமில்லை
காயப் படுத்துவோர்தான்
காத்துக் கொண்டிருக்கிறார்கள்
நாம் இங்கே .....
இளமாணி முதுமாணி
ஈடில்லா விஞ்ஞானி
கரை கண்ட மெய்ஞானி என
கண்டு கொண்டே இருக்கின்றோம்
ஆனாலும்
மனிதத்தை மாத்திரம்
மனிதர்களில் காணோமே

பொருள் வாதக் குழிக்குள்
புதையுண்டதால் மனிதன்
புனிதத்தை காணவில்லை
மனிதத்தையும் காணவில்லை

ஆம்
ஜடவாதம் அவனை
சாறாய்ப் பிழிகிறது
பிடிவாதம் அவனை
பேயாக மாற்றுகிறது
ஆதலால்தான் என்னவோ
ஆறறிவு விலங்காய்
அடையாளப் படும் வகையில்
மனிதன் உலவுகிறான்
மனிதத்தை தொலைத்து விட்டு
பணவாதச் செயற்பாடு
பகுத்தறிவைக் கொன்று விட்டது
இனவாதச் சிந்தனை
இதயத்தை தின்றுவிட்டது
பணத்துக்காக அவன்
பாவம் செய்யத் துணிந்து விட்டான்
வசதி வாய்ப்புக்காக
வரம்பு மீறத் தொடங்கிவிட்டான்
அகங்காரம் உறைந்ததனால்
அகங்கள் காரமாய்ப் போய்விட்டன
முகங்கள் எல்லாமே
மூர்க்கமாய்ப் போய்விட்டன

ஈனமே இல்லாத
ஆணவப் பாத்திரம்
அவனை
அஃறிணைப் பாத்திரமாக்கி விட்டது
மானமே இல்லாதவனுக்கு
மனிதம் எங்கே இருக்கப் போகிறது
மதவாதச் சாயம்
மனதைக் கறுப்பாக்கி விட்டது
மொழிவாத அமிலம்
மூளையைச் சலவை செய்து விட்டது
அறுபதை இருபது
ஆற்றுப் படுத்துவதும்
பெறுமதி புரியாமல்
பித்தலாட்டம் பண்ணுவதும்
மனிதத்தை தொலைத்த
மனிதர்களின் நிலைப்பாடே

பொய்யும் புரட்டும்
புத்தி என நினைத்துக் கொண்டு
மெய்யைத் தொலைத்து
மிருகங்களாகினரே
ஆக
மனிதர்களுக்குள் இருந்தால்
அறியாமை
மனிதங்கள் காணுமா
மேலாண்மை

இறக்காமத்து வானம்பாடி
ஏ.ஆர். பைசல்

எழுதியவர் : இறக்காமத்து வானப்பாடி ஏ.ஆ (15-Jun-17, 12:24 pm)
சேர்த்தது : ஏஆர் பைசால்
பார்வை : 138

மேலே