மகன்போல் ஒருத்தனுக்கு

மகன் போல் ஒருத்தனுக்கு,

உழவன் மகனே
உள்ளம் வருந்தாதே
ஊருக்கே சோறிடும் உன்தந்தை
உனக்கு மட்டும் தந்தையல்ல
உண்போர் அனைவருக்கும் தான்
நீ
உழவன் மகன் என்பதாலா
உனை ஒருத்தி வெறுக்கின்றாள்
அரசபணி செய்தும் கூட
மணக்க உன்னை மறுக்கின்றாள்
நாட்டின் தலைவர்களே
உழவன் மகன் என்பதை
உளம்மகிழ்ந்து கூறும்போது
வீட்டின் தலைவிக்கு
விவசாயி மகனென்ற
விலாசம் பிடிக்காததேன்
ஆகாயத்தில் இருந்துதான்
வந்தவளா அந்தவளும்
ஆகாரம் உண்ணாமல்
வாழலாமா எந்தவளும்
விவசாயி பெற்றவனை
விரும்பவில்லை போகட்டும் - அவன்
விளைவிக்கும் ஆகாரம்
விரும்பி உண்பதேன் மட்டும்
என்ன நியாயம்
இது என்னஅநியாயம்
விந்தை உலகில் இன்று...
விவசாயம் சிலருக்கு
விபச்சாரம் போலாச்சு
அபச்சாரம் அபச்சாரம்
அவளுடன் நீ வாழுவது
எறும்புக்கும்கூட
இன்னாது செய்யா உந்தன்
இதயத்தை உடைத்து விட்டாளே
துரும்புக்கும் இடமின்றி
மணப் பேச்சை
துப்புரவாய்த் துடைத்து விட்டாளே
தர்சனே நீ
உழவன் மகன் என்பதை
உரத்துச் சொல்லு
புரிந்த ஒருத்தி
பூமாலையுடன் வருவாள்
குறுகிய மனத்தாளோடு
குடித்தனம் சரி வராது
உன்
உருகிய மனதுக்கு
ஒத்தடம் அது தராது
கேவலம்
அப்பாவின் தொழிலை வைத்து
அன்பை அளந்து பார்க்கிறாளே
நீ தப்பித்தாய் மகனே
தலை முழுகு இன்றே போய்
தந்தையின் தொழிலை
தராதரமாய்க் கொள்வோளை
தாரமாய் நீ ஏற்றால்
பாரமாய்த்தான் போகும் வாழ்க்கை
நல்ல வேளை
பேச்சுடன் மட்டும்அது
பெயர்ந்து போய் விட்டது
இல்லையேல்
மூச்சுள்ள வரை நீயும்
முணு முணுப்புக் கேட்க வேண்டும்
விவாகம் என்றால் நிறம்தீட்டும்
விளையாட்டில் ஒரு வகையா
விவசாயத்தால் அதன்
சாயம் மாறிப் போவதற்கு
உக்கிரமாய் யோசிக்காதே
வக்கிர மனம் கொண்டோள்
வாழ்ந்து விட்டுப் போகட்டும்
உனக்கென்று ஒருத்தி
உலகில் பிறந்திருப்பாள்
அதை எண்ணி நீயும்
ஆறுதல் கொள் மகனே

எழுதியவர் : ஏ.ஆர். பைசல் (15-Jun-17, 11:40 am)
சேர்த்தது : ஏஆர் பைசால்
பார்வை : 66

மேலே