தந்தை
********
கொட்டும் மழைக்குக் குடையாகி நின்றவர்
வெட்டும்மின் னல்முன் விழிகாத்தே - பட்ட
அனுபவத்தை பாடமாய் ஆக்கியெமை கற்க
அனுப்பிவைத்தக் கர்ணன் அவர்
*
அவர்கண்ணில் கண்ணீர் அரும்பியது காணோம்
சுவராய் எமைக்காத்த சொர்க்கம் - தவறாய்
நடப்பாரும் நேராய் நடப்பதற் கென்று
சுவடா யிருந்தவெம் சொத்து
*
சொத்ததிகம் சேர்க்கவில்லை சொந்தக் குழந்தைகள்
புத்தகத்தை தொட்டாலே போதுமென்பார் - வித்தகர்,
வித்திட்டு மண்ணில் விவசாயம் செய்தெமையும்
வித்தாக்கி விட்டார் விதைத்து
*
விதைத்தப் பயனை விரைந்து பெறமுன்
பதைக்கவிட்டுப் போனார் பறந்து - சிதைக்கு
நெருப்பிட்டப் பின்னும் நினைவுகளாய் நெஞ்சில்
இருக்கின்ற தெய்வம் எமக்கு
*
எமக்கொரு தூணாய் இருந்தெமைத் தூக்கிச்
சுமந்தவர் வாழ்க்கைச் சுமையை - சமப்படுத்த
முன்நிற்கு முன்னே முடிவெழுதி போனவர்
தன்மானம் மிக்கத் தகை
*