பெண்ணிலாமல் வாழ்வதாயின்

*****************************************************
அன்பிலாத மாந்தரோடு அன்பிலாட லாகுமோ
அஞ்சிடாத நீசரோடு அன்றிலாக லாகுமோ
தன்மைமாறி வீசுகாற்று தென்றலான தாகுமா
தடுக்கிவீழ்ந்து எழுந்திடாமல் தலைவனாக லாகுமா
மென்மையோடு வன்மைகூடி மேன்மையாக லாகுமா
மின்னலோடு கண்ணிரண்டை மேயவிட லாகுமா
கன்றிடாத காணியோடு காய்கறிக ளாகுமோ
கண்படாத கன்னிமீது காதலென்ப தாகுமோ
**
குன்றிலேறி நின்றிடாமல் கொடியுமேற்ற லாகுமோ?
கொட்டுமேளங் கொட்டிடாமல் குடும்பமாத லாகுமோ?
வென்றிடாது மாலைசூடி வீரனாக லாகுமோ
வெட்டியாகப் பேசிநேரம் வீணடிக்க லாகுமோ
பன்றியோடு சேர்ந்துவுண்ணும் பசுவுமாக லாகுமா
பண்புறாத நெஞ்சினோடு பாசநேச மாகுமா
நன்றிலாத தீமையாகி நாறுமென்ப தாகியே
நன்றியற்று வாலையாட்டும் நாயுமாதா லாகுமோ
*
இன்றிலாமல் நாளையென்ப திங்கிருக்க லானதோ
இன்புறாமல் சோலைசென்று எந்தவண்டு போனதோ
அன்றிலாத தொன்றுவந்து ஆட்டிவைத்த தானதோ
அந்தவொன்று என்னவென்று அறிந்திடாமல் போவதோ
சென்றிடாமல் நின்றிருந்த சேதியென்ற தானதோ
சேரந்திடாமல் வாழ்வதற்குச் சேர்த்துவைத்த தாகுமோ
பின்வராத பேர்களோடு பேச்சுவார்த்தை வேதமா
பெண்ணிலாத வாழ்வதாயின் பெருமையேது மாகுமா
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (16-Jun-24, 1:36 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 39

சிறந்த கவிதைகள்

மேலே