கரைசேரா கடிதங்கள்
சுவாலையாய் உன் பார்வை
என் நெஞ்சை தகிக்கிறது..
நா பிறழாமல் நீ பேசும் மொழியழகில்
என் எண்ணமெல்லாம் உறைகிறது..
உன்னை சீண்ட நினைக்கும் தென்றலது
உன் கூந்தல் முடிகளை கோதி முகத்தில் விழச்செய்ய
உன் மலர்க்கரம் கொண்டு, கனமான கூந்தல் முடிகளை, நயமாக ஒதுக்கி காதோரம் சேர்ப்பித்தாய்..
உன் விழியசைவை என்ன சொல்ல
நொடிமுள்ளாய் சுழலும் பார்வை
நாளும் பின்பற்றுகிறேன் மணிக்கணக்காய்..
பேருந்தின் இருக்கையில் உன்னை அமர்த்தி, உன் பார்வையை வெளியில் செலுத்தினாய்..
வீதியோர மரங்களை விழி கொஞ்ச நீ பார்க்கிறாய் ..
பேருந்து புறப்பட அறிகுறியாக கருமேகம் போல புகைமண்டலம் கிளம்பியது..
உன்னிடம் சேர்ப்பிக்காத காதல் கடிதத்தோடு நான் நிற்கிறேன் மரமாக..
நிரப்பப்படாத இடைவெளியில் நான் தெரிவிக்காத காதலும், உன்னிடம் நெருங்க விடாத கூச்சமும் என்னை அவஸ்தையுறச் செய்கின்றன..
என் பார்வையின் மறைவில் பேருந்து உன்னை ஏந்திச் செல்கின்றது..
சொல்லாத காதலோடு, இன்றும் வெற்று இதயத்தோடு தான் வீடு செல்கிறேன்...
"கோபிக்காதே கடிதமே" என்றேனும் ஒருநாள் நிச்சயம் நீ அவள் கரம் சேருவாய்...