பள்ளிப்படிப்பு
![](https://eluthu.com/images/loading.gif)
பள்ளிப்படிப்பு . . .
கவலை ரேகை ஊடாத
கனவுக்காலத்தே
வானை அளந்துழுகும்
வசந்த காலப் பறவைகளாய் . . .
சூதும் வாதும் ஏதும் சூழாத
களிப்புடன் நாட்கழித்தோம்
பசும் விதையின் இளம் குருத்தாய் . . .
சாதியும் மதங்களும்
கால்சங்கிலியிட்டு நிர்மலமாய்
நட்பின் செங்கோலில் நாம்
நர்த்தமனமாடிய நாட்களவை . . . .
வெற்றியோ தோல்வியோ
தன் அர்த்தத்தை தோளிறக்கி
வெறும் வார்த்தை வடிவங்களாய்
வேடிக்கை பார்த்துநின்ற
விளையாட்டு காலமது . . . .
அண்ணனுக்கு வாங்கித் தந்த
அட்டையிலாப் பழம் புத்தகமோ
தன் பக்கத்தை இழந்தாலும்
தன்படிப்பினை சொல்ல மறக்கவில்லை . . .
அப்பா வாங்கித் தந்த
அரை குயர் நோட்டின் தாள்கள்
கப்பலாய் உருவெடுத்து
மழைநின்ற பின்னாளில்
மகிழ்ச்சியாய் மிதந்தோடும் . . . . .
சவ்வு மிட்டாய் ஓசை கேட்டு
சட்டைபையில் ஒளித்துவைத்த
சில்லறை காசோடு
சிந்தையும் சிணுங்கி அழ
சீறிப்பாயும் காலிரண்டுக்கு
சிறுத்தையும் பின் தானே
ஆண்டுக்கு ஓர்நாளை
ஆண்டெல்லாம் எதிர்பார்த்து
பொங்கலுக்குப் பூட்டுவித்த
புத்தாடை தனைபூண்டு
அள்ளித் தெளித்துவைத்த
வானவில்லின் வண்ணங்களாய்
ஓராண்டின் களிப்புதனை
ஓர்நாளில் கழித்திட்டோம் . . .
அம்மா கதை சொல்லி
தூங்க வைத்த தூக்கத்தை
நண்பனின் பூதக்கதை
நடுநிசியில் விரட்டிநிற்கும் . . .
பொய்யான வலிகளுக்கு
போகாத பள்ளிநேரம்
முந்தானைச் சேலை ஓரம்
முகம்மூட கைபிடித்து
அம்மா அரவணைப்பில்
பள்ளிகடந்த ஞாபகங்கள் . . .
சு.உமாதேவி