பாசமலரே ராஜகுமாரா

ராஜகுமாரா .....!!!!
**************************

மறைந்தேநீ போனாலும் மறந்திடவே இல்லையடா
உறைந்துவிட்டாய் உள்ளத்தில் உயிருருகித் துடிக்குதடா
இறைநிலையை எட்டிவிட்டாய் இரவுபகல் துணையிருப்பாய்
குறையின்றிக் காத்திடுவாய் குலம்விளங்கச் செய்திடுவாய் !

ஆண்டொன்று போனாலும் ஆறுதலே இல்லையடா
காண்பதெல்லாம் உன்னுருவாய்க் கண்முன்னே தோன்றுதடா
தூண்போலத் தாங்கிநின்றாய் துயரின்றி மகிழ்ந்திருந்தேன்
மீண்டுமுனைத் தரிசிக்க விழியிரண்டும் ஏங்குதடா !

நீயில்லா உலகத்தில் நெஞ்சத்தில் அமைதியில்லை
கோயிலுக்கும் செல்லவில்லை கொண்டாட்டம் ஏதுமில்லை
தீயிடையே மெழுகினைப்போல் தினந்தினமும் உருகுகின்றேன்
வாயிருந்தும் பேச்சுவர மறுப்பதைநீ அறியாயோ ?

சமைத்தாலும் ருசிக்கவில்லை சாப்பிடவும் மனமில்லை
இமைக்கதவை மூடிடினும் இதமான உறக்கமில்லை
சுமையான பயணத்தில் சுரத்தின்றித் தவிக்கின்றேன்
அமைதியினை அளித்திடவே அருவமாயென் அருகிருப்பாய் !

வற்றாத கருணையுடன் வள்ளலைப்போல் வாழ்ந்தவனே
சற்றேனும் இளகாயோ தைரியத்தை வழங்காயோ
பெற்றவளென் துயர்கண்டால் பிரிவுக்கும் அழுகைவரும்
பற்றதிகம் வைத்ததனால் பரிதவித்துக் கிடக்கின்றேன் !

உற்றாரோ(டு) உறவினரும் உனைநினையா நாளில்லை
கற்பிப்பாய் மேலிருந்தே கடமைகளை ஆற்றிடவே
நற்றமிழால் வாழுகிறேன் நனைந்தவுளம் தேறுகிறேன்
மற்றெதுவும் வேண்டுகிலேன் வழிகாட்டு கண்மணியே ....!!!

அம்மா
சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (7-Jul-17, 1:09 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 45

மேலே