நிலவுக்கு ஒளி கொடுக்க மின்மினிப்பூச்சியால் முடியாது

வானத்து உச்சியில்
வந்து பார்க்கும் வண்ண நிலவே ....
இந்த மின்மினிப் பூச்சியின்
சின்னச் சின்ன வாழ்த்துக்கள் ,

உனக்கு ஒளி கொடுக்க
சூரியனால் மட்டுமே முடியும் ,
காதல் , அந்தக் கதிரை
என்னையும் உற்பத்தி செய்ய வைக்கும் என
எண்ணியது என் தவறு தான் ....

விளக்கோடு முத்தமிட்டு
செத்து விடும் விட்டிலுக்கு
வெண்ணிலவோடு வாழ்க்கை என்பது
வெற்றுக் கற்பனைதான்...

நீ ...
வடமலை மீது வளர்ந்த
வண்ணக் குறிஞ்சி மலர்...
குடிசை யோரத்து குப்பையில் பூத்த
உன்மத்தம் நான் ...
உனக்கும் எனக்குமான
மகரந்த சேர்க்கையானது
மனமிருந்தாலும் மார்க்கமில்லாதது.

அந்த கோவை வீதிகளில்
இரவெல்லாம் உற்பத்தி சாலைகளில் உறக்கம் மறந்து
பகலெல்லாம் உன்னோடு
நடந்து திரிந்த தடம்
எண்ணிப் பார்க்கையில் என்
மூளையில் ஒரு நரம்பு
இப்போதும் துடிக்குதடி...

பையெல்லாம் பணம் சிரிக்கும்
பணக்காரன் பெற்ற மகள்
என் மீது கொண்ட அன்பில்
என்னுடலில் ஒட்டிக் கொண்டிருக்கும்
எல்லாம் நீ ...
வாங்கித் தந்தது ,
உனக்கு நான் திருப்பித் தர
உயிரைத் தவிர வேறேது ...?

புத்தகம் முதல்
புத்தம் புது ஆடை வரை
எல்லாமே நீ தந்தாய் ,
என்னையே நான் தந்தேன் ,

அன்றைய தினத்தின் மகத்துவ காதலாய்
கொங்குச் சீமையெல்லாம்
ஒன்றாய்ச் சுற்றினோம் ,

ஒரு பொழுது - உன்
பணக்கார வாழ்வு பற்றி
பல்தவறி விழுந்த வார்த்தை
கல்லெறிந்து கொன்ற தடி- என்
காதல் இதயத்தை..!

பொய்யில்லை நீ சொன்னது
வெயில் கூட தொடாத
வீட்டுக்குள் நீ பிறந்தாய் ...
வாசல் வழி மட்டுமல்ல
வான்வழி கூட
வெயிலோடு மழையும் காற்றும்
வந்து விருந்துண்டு
இளைப்பாறிப் போகும்
இல்லத்தில் நான் வளர்ந்தேன் ,

உதகை ரோசாப்பூ
உச்சி நத்தத்தில் சிரிக்குமா ....?
என்னோடு உன்னை
வாழ்வில் இணைத்துக் கொண்டால்
வாடிப் போவாயடி வாடா மலரே ...?

அணை போட்டு அன்பை தடுக்க முடியாது ,
அன்பு ஒரு போதும் அழிவைத் தராது
என்னோடு சேர்ந்தால்
இன்னல் படுவாயேயென
எண்ணும் போதே இதயம் வலித்தது ,

வேண்டாம் நிறுத்திக் கொள்வோம்
வெறுத்தது போல் நடித்தேன் ,
மன்னிப்புக் கேட்டாய்
மறு தூது விட்டாய்

தாய் மடியில் தூங்கும் வரை
தாய்ப்பாலை மறக்காது குழந்தை
தூர தேசம் நோக்கி
சுமைகளோடு.. சிறகை விரித்தேன்

இன்று தான் என்
காது வந்து சேர்ந்தது - உன்
கல்யாணச் செய்தி .... :

வானத்து உச்சியில்
வந்து பார்க்கும் வண்ணநிலவே - இந்த
மின்மினிப் பூச்சியின்
சின்னச் சின்ன வாழ்த்துக்கள்

எழுதியவர் : ந.இராஜ்குமார் (20-Jul-17, 1:06 am)
பார்வை : 473

மேலே