நிலத்தில் வீற்றிருக்கும் மானம்-சிறுகதை - சந்தோஷ்

“ இன்பா..! நம்ம தாத்தாவோடு வீட்டில ஒரு பாதியை பெரிய மாமா விற்கப் போறாங்களாம்.விவசாய நிலத்தையும் விக்கப்போறாங்களாம் அண்ணா.ஆயா கிட்ட கையெழுத்து கேட்டு மாமாக்கள் ரொம்ப டார்ச்சர் பண்றாங்களாம் ” கோவையிலிருக்கும் தங்கை தீபா மிகுந்த ஆதங்கத்துடன் அலைப்பேசியில் சொல்லிக்கொண்டிருக்க.. எனக்கு அதிர்ச்சி,ஆச்சரியம்,கவலை கலந்த உணர்வு ஏற்பட்டது. என்றாலும் தங்கையின் ஆதங்கத்தை தீர்க்க

“ சரி விடுடா குட்டிம்மா.. தாத்தாவே செத்து போயிட்டார்.வீடா பெரிய விசயம்.? “

“ என்ன இன்பா நீ பேசுற ? , ஆயா இருக்காங்கல ? அவங்க எங்க இருப்பாங்கன்னு யோசிச்சியா.? . தாத்தா வாழ்ந்த வீட்டுல அவங்க கடைசி வரைக்கும் இருக்கனுமுன்னு ஆயாவுக்கு ஆசை இருக்கு. அந்த ஆசை நிறைவேறாம தடுக்கிறாங்கல.. இது புரியலயா உனக்கு ?. “ தீபாவின் கேள்வியில் நியாயமிருக்கிறது. இருந்தாலும் , எங்கள் தாய்மாமன்களின் உரிமையில் தலையிட எங்களுக்கு என்ன தார்மீகம் இருக்கிறது ?. அவர்கள் சொத்து. அவர்கள் பிரித்துக்கொண்டு விற்கிறார்கள் என எதை எதையோ பேசி தீபாவை சமாதானம் செய்ய முயன்றாலும் அவள் சமாதானம் ஆகவில்லை.

”இன்பாண்ணா.. அது வெறும் வீடு இல்லண்ணா.... நம்ம தாத்தாவின் உணர்ச்சி.. பாசம்.. ஆசை எல்லாம் அதுல இருக்கு. நாம ஓடியாடி விளையாடிய வீடு அண்ணா அது . ஒனக்கு அந்த படிக்கட்டுகள் ஞாபகமிருக்கா? .. கடைசி காலம் வரைக்கும் நம்ம தாத்தாவுக்கு அதுதான் நாற்காலி. தாத்தா அதுலதான் உக்கார்ந்து கம்பீரமா மீசை முறுக்கி பேரன் பேத்தி நம்ம எல்லாருக்கும் திண்பண்டத்த. ஊட்டிவிடுவார். அந்த படிக்கட்டுலதானே நாம தாத்தாவோட கொஞ்சி விளையாடிட்டு இருந்தோம். அந்த படிக்கட்டுல உக்கார்ந்தே தான் தாத்தா பல பேருக்கு பஞ்சாயத்து பேசி பிரச்சினை தீர்த்து வச்சாங்க. சரி அதைவிடு, . .தாத்தாவின் வீட்டில் ஆயா கடைசி வரை வசிக்கனும். அப்போ அப்போ போயிட்டு வர எனக்கே இவ்வளவு ஆதங்கம்ன்னா.. தாத்தாவோட 60 வருஷமா வாழ்ந்தா ஆயாவுக்கு எப்படி மனசு வேதனைப்பட்டிருக்கும் ? அதோட இல்லாம நிலத்தையும் விக்கிறதுன்னு சொல்றாங்க. நிலத்த வித்துட்டா தாத்தா கனவுலாம் பாழா போயிடும். ஆயா காலத்திற்கு அப்புறம் அவங்க விக்கிற பத்தி யோசிக்கட்டும். நாம கேட்கலாம் இன்பா. நம்ம அம்மாவுக்கு அந்த சொத்துல உரிமை இருக்குன்னு உனக்கு தெரியும் தானே. நான் அவருகிட்ட சொல்லிட்டு இப்போவே சாக்காங்குடி போகறேன்.அம்மா அப்பாலாம் அப்புறமா வரசொல்லிப்போம் சரியா.. நீயும் சென்னையிலிருந்து அங்க வந்திடு. ” பிடிவாதக்காரி தீபா எப்போதும் இப்படித்தான் ஒரு முடிவை எடுத்தால் அதிலிருந்து பின் வாங்கமாட்டாள். ஆனால் இந்த விஷயத்தில் தீபாவின் பிடிவாதத்தில் ஒரு அர்த்தமிருந்தது. நியாயமிருந்தது.

--
சென்னை எழும்பூரிலிருந்து மூலம் சிதம்பரம் நோக்கி அதிவிரைவாக நகருகிறது நான் செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் இரயில். செல்லும் வழியெல்லாம் காய்ந்துப் போன விவசாய நிலங்கள்.
“ காரு கம்பெனிக்கு முதலீடு போடுற மாதிரி.. படிச்ச பசங்க நீங்கலாம் விவசாயத்திலும் முதலீடு போடுங்க பேராண்டி ” தாத்தா அடிக்கடி என்னிடம் சொல்லும் வார்த்தைகள் என் செவியில் இப்போதும் ஒலிக்கிறது. என் நினைவுகள் எனது சிறுவயதுக்கு பின்னோக்கி நகருகிறது.

சிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு வழியாக விருத்தாச்சலம் செல்லும் வழியில் சாக்காங்குடி எனும் கிராமம் தான் எனது தாத்தாவின் ஊர்.
நினைவு தெரிந்த நாளிலிருந்து எனக்கும் தீபாவுக்கும் சாக்காங்குடி என்று நினைத்தாலே போதும் அவ்வளவு குஷியும் சந்தோஷமும் வரும். பள்ளிக்கூடத்தில் சொல்லித்தரும் நீதிக்கதைகளிலுள்ள ஓவியங்களில் இருப்பதை போல ஊருக்குச் செல்லும் வழியில் கொள்ளிடம் ஆற்றுத்தண்ணீர் ஒரு கிளையாக பிரிந்து ஊருக்குள் பாயும் வாய்க்கால் ,அது போகும் பாதை ஒட்டி செல்லும் சாலையே சாக்காங்குடி கிராமத்திற்கு செல்லும் வழி. ஊருக்குள் செல்லும் போதே அந்த சிறு சாலை இருமருங்கும் பச்சைப்பசேலென வயல்வெளியும்.. வாய்க்காலில் மீன்கள் சுறுசுறுப்பாய் நீந்துவதும்.. அதை இரையாக்க நாரை, கொக்குகளும் நீந்தும் அழகும், சாலையில் ஜலக் ஜலக் என வைக்கோல் சுமந்து செல்லும் இரட்டை மாட்டுவண்டிகளும், ஆடு, மாடுகளின் சப்தங்களும்.. கிராமத்திற்கென இருக்கும் மண்வாசனையும் எங்களுக்கு பெரும் சந்தோஷத்தை தரும். சற்று தொலைவுச்சென்று சாலையின் வளைவில் ஒரு முருகன் கோவில். கோவிலுக்கு அருகில் தாமரை மலருடன் அழகான குளம். குளக்கரை அருகில் ஒரு நடுநிலைப்பள்ளி இந்த அடையாளங்கள் தான்.. கிராமத்தின் நுழைவுவாயில். அங்கிருந்து சற்று நடந்துச்சென்றால் ஒரு ஐயப்பன் கோயில்.. கோயிலுக்கு எதிரே ஒரு டீக்கடை.. அந்த டீக்கடைதான் எங்கள் தாத்தாவின் டீ கடை. ஜாதிகளுக்கு ஏற்றவாறு இருந்த இரு குவளை முறையை அந்த கிராமத்தில் ஒழித்த முதல் டீ கடை அது என பெருமிதமாக சொல்லலாம். டீ கடைக்கு பின்புறமிருக்கும் அழகான வீடுதான் என் தாத்தாவின் வீடு.

அப்போதெல்லாம் நான் பத்தாம்வகுப்பு படிக்கும் போது வருடந்தோறும் பங்குனி உத்திரம், கோயில் திருவிழா, பள்ளிவிடுமுறை நாட்கள், தீபாவளி, பொங்கல் என எந்த ஒரு விஷேத்திற்கும் நானும் என் தங்கை தீபாவும் பெற்றோர்களோடு அங்கு ஆஜராகிவிடுவோம். கிராமத்தின் மண்வாசனையோடு..கிராமத்திலிருக்கும் சொந்த பந்தங்களின் பாசமும்.. உபசரிப்பும் பெரும் உற்சாகத்தை தரும். இவற்றை எல்லாம் விட பெரிய அழகான சந்தனக்கட்டை வீரப்பன் போல முறுக்கு வெள்ளை மீசையோடு.. கட்டுமஸ்தான தேகத்தோடு எங்கள் வரவை திருவிழாவாகவே நினைக்கும் எங்கள் தாத்தாவின் அன்பும் பாசமும் எங்களுக்கு எல்லையில்லா சொர்க்கத்தை காட்டும் என்றால் மிகையல்ல. டீக்கடை கணேசன் , குஸ்தி வாத்தியார் கணேசன், பஞ்சாயத்து தலைவர் கணேசன் என்று எதையாவது ஒன்று சொன்னாலே போதும் அந்த ஊரிலுள்ள புழு பூச்சிக்கூட எங்கள் தாத்தாவின் வீட்டிற்கு அழைத்துச்செல்லும். ஆனால் இப்போது தாத்தாவும் இல்லை. ஊருக்கு போயிட்டு வந்தா ரோடு வரை வந்து தாத்தா போல டாட்டா காட்டவும் யாருமில்ல.

காலம் மாறியது போல காட்சிகளும் மாறியிருந்தது . மெயின் ரோட்டில் இருந்து சாக்காங்குடி போக 1 கிலோ மீட்டருன்னு திசைக்காட்டி பலகை ஒன்று இருக்கும். அப்போ எல்லாம் ஏதோ இரண்டு கட்சிகளின் கொடி கம்பம் மட்டுமிருக்கும். ஆனா இப்போ கூடுதலா பல கட்சி கொடிகம்பங்களும், கூடவே ஜாதி சங்க கொடிகம்பங்களும் இருக்கு. நாங்கள் சின்னவயதிலிருக்கும் போது கீழத்தெரு , மேலத்தெருன்னு ஜாதிகளுக்கு ஏற்றவாறு தெரு இருந்தாலும் ஜாதி சண்டையெல்லாம் வந்தது இல்லை. ஆனால் இப்போது ஜாதி மோதல்கள் அடிக்கடி வருகிறது. கட்சிகாரர்களின் மோதலும் வருகிறது.

எங்கள் சிறுவயதில் அப்பா மத்திய அரசு துறையில் அலுவலராக இருந்தார். பெரிய மாமாவும் எங்களோடு ஒரே குடும்பமாக தங்கி தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றினார். .பிறகு பெரிய மாமாவிற்கு திருமணம் ஆனதால் தனி குடும்பமாக சென்றுவிட்டார். அதிலிருந்தே பெரிய மாமா எங்களிடமிருந்து சற்று விலகி போனதாகவே தோன்றியது. சாக்காங்குடி கிராமத்தில் சின்ன மாமா தாத்தாவின் டீக்கடையை தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தார்.எப்போதெல்லாம் நாங்கள் சாக்காங்குடி செல்கிறோமோ அப்போதெல்லாம் சிதம்பரம் இரயில் நிலையத்திற்கே வந்து அழைத்துச் செல்வது சின்ன மாமாவின் வழக்கம். வழக்கம் என்பதைவிட எங்கள் மீது அவர் வைத்திருந்த பாசம். பெரிய மாமாவும் சரி, சின்ன மாமாவும் சரி என் மீதும் தங்கை தீபா மீதும் பாசத்தை பொழிவதில் பாரி வள்ளல்கள்தான் அவர்களுக்கென்று ஒரு குடும்பமாகும் வரை.

ம்ம்ம்ம் தனக்கென ஒரு குடும்பம் என வந்துவிட்டால் எந்த ஒரு மனிதனுக்கும் இரத்தப் பாசம் கொஞ்சம் குறையதான் செய்யும். சுயநலம் கூடத்தான் செய்யும். தன் மனைவி..தன் மக்களென அவர்களின் உறவு வட்டத்தை சுருக்கிக் கொண்டாலும் பரவாயில்லை ஆனால் பெரும்பாலும் தங்களின் பெற்றோர்களிடமிருந்து விலகி அந்நியமாகி, மாமியார் வீட்டின் செல்லப்பிள்ளைகளாக மாமியார் சொத்துகளின் பாதுகாவலானாக மாறிவிடுகிறார்கள் சில ஆண்மகன்கள். மனைவியின் பெற்றோருக்கும் ஒரு மகனாக இருப்பதில் தவறு ஒன்றுமில்லை ஆனால் தன் பெற்றோர்களை தனிமைப்படுத்தி , வேதனைப்படுத்தி மாமியார் மாமானார்களின் சொல்படி நடக்கும் கிளிப்பேச்சு பிள்ளையாக இருப்பது எந்த விதத்தில் ஆண்மையோ ? இது நவீன காலத்தில் எழுதப்படா விதி போலிருக்கு.
இந்த எழுதப்படா விதியால் மெல்ல மெல்ல ஆயா தாத்தாவிடமிருந்தும் எங்களிடமிருந்தும் எங்கள் மாமன்களை பிரிக்கத் தொடங்கினார்கள் மாமன்களின் மனைவிகள். கள்ளம் கபடமில்லாது போல இருந்தாலும் தங்களின் புருஷன்மார்களை தன் வழிக்கு கொண்டு வருவதில் இரண்டு அத்தைகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.
தாத்தாவிற்கென ஊரிலிருந்த மதிப்பு மரியாதை கெளரவம் அந்தஸ்து எல்லாம் எங்கள் அத்தைமார்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை அலட்டிக்கொள்ளவும் இல்லை. அவர்களுக்கு தேவை சொத்து பிரிவினை . தாத்தா வாழும் காலத்திலே பிரிக்கவேண்டுமென மாமன்களின் மூலமாகவே முயற்சி எடுத்தார்கள். ஆனால் தாத்தா தன் காலத்தில் விவசாய நிலங்கள், வீடு , தோட்டம் உட்பட எந்த ஒரு சொத்தும் பிரிப்பதில்லை என்பதில் முடிவோடு இருந்தார்.

சேலம் மாநகரத்தில் வீடு கட்டி செட்டிலாகிவிட நினைக்கும் பெரிய மாமா அப்போதே தன் பங்கு சொத்துகளை விற்றுவிடுவார் என்றொரு அச்சம் தாத்தாவின் மனதில் இருந்திருக்கிறது. நிச்சயமாக பெரிய மாமா தன் பங்கு சொத்துகளை சின்ன மாமாவிற்கு விற்கவும் மாட்டார். அதை வாங்குமளவிற்கு சின்னமாமாவிற்கும் பொருளாதார வசதியும் இல்லை. கிராமத்தில் ஒரு பஞ்சாயத்து தலைவர் தான் வாழும் காலத்திலே தன் சரிபாதி சொத்துகளை விற்றுவிட்டாரென எந்த ஒரு ஏளன பேச்சும் வரக்கூடாது என்பதாக இருந்தது தாத்தாவின் எண்ணம். கிராமங்களில் வீடு இல்லாவிட்டாலும் விவசாய நிலம் இல்லாதவனை செத்த பிணத்திற்கு சமமாக பார்ப்பார்கள். அறுவடை செய்து இந்த உலகிற்கு தானியங்களை படியளக்கும் எந்த ஒரு விவசாயியும் தன் நிலத்தை விற்று வெறும் கையோடு இருக்க தன் இறுதிமூச்சு வரை நினைத்துக்கூட பார்க்கமாட்டார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது தாத்தா தன் முதுமை முற்றிய வயதில் ..வீட்டிலுள்ள அந்த சிவப்பு நிற சிமெண்ட் படிக்கட்டில் அமர்ந்திருக்கும் போது பெரிய மாமாவும் சின்னமாமாவும் சொத்துகள் பிரிக்க வேண்டுமென வலியுறுத்துவது போல தாத்தாவை மிரட்டிக்கொண்டிருந்தார்கள்.

“ அப்பா உனக்குதான் வயசு ஆகிடுச்சில ? இன்னும் நீ பாடுபட்டு என்னத்த பெருசா நிலத்தில சம்பாதிக்க போற ? சின்னவனுக்கு வீட்டையும் நிலத்தயும் பிரிச்சி கொடுத்தா அவன் இஷ்டத்திற்கு அவன் பாகத்தில எதாவது விளையவச்சி பொழிச்சிப்பான்ல “ பெரிய மாமா

“ பெரியவனே..பிரிச்சிதான் ஏர் ஓட்ட முடியுமா?. நீங்க ரெண்டு பேரும் ஒன்னா பயிர் வையுங்க. பயிரை வித்து காசு பாருங்கடா. நான் வேணான்னா சொல்றேன். நீ டவுன்ல இருந்தாலும் ஆள் வச்சி பாரு. இல்ல சின்னவன் கிட்டயே சொல்லி பார்க்க சொல்லு.. அவனுக்கு வேண்டிய காசை கொடுத்திடு. வர வருமானத்தை பிரிச்சிக்கோங்கடா. ஆனா உன் பாட்டன் பூட்டன் சொத்த நான் காப்பாத்தி அதுலிருந்து சம்பாதிச்சி வாங்குன நிலத்தயும் இந்த வீட்டையும் நீ விக்க மாட்டேன்னு என்ன டா நிச்சயம்.? ஒரு நெல்லு முளைக்க நூறு துளி வேர்வை சிந்தி உழைச்சாதான் சோறு. அப்படி பட்ட உழைப்புல வாழ்ந்த உடம்புடா இந்த உடம்பு... பெரியவனே..! நீயும்தானே சின்ன வயசுல விவசாயம் செஞ்சிருக்க.”

“ என்னத்த பெருசா வருமானம் வருது... பாட்டன் சொத்து. பாடுப்பட்ட சொத்துன்னு இப்படியே வீண் ஜம்பம் பேசிட்டே காலம் பூரா இருக்கவேண்டியதுதான். காலம் மாறிடுச்சில. நாலு காசு பணம் பார்க்க வேணாமா.?. பெரியவர் சொல்ற மாதிரி சொத்த பிரிச்சி கொடுத்தாதான் என்ன..? .. பெரியவரு டவுன்ல பேங்க் வேலையில இருக்காரு.நல்லா சம்பாதிக்கிறாரு ஆனா நாங்க டீ கடை வருமானத்த நம்பிதான் இருக்கோம். எம் புள்ளைங்க படிக்கிற செலவுலாம் அதிமாகிட்டே போகுது. சொத்த பிரிச்சிக் கொடுத்தா நாங்க அடமானம் கிடமானம் வச்சி பொழச்சிப்போம்ல.” சின்ன மாமாவின் சார்பாக சின்ன அத்தையார் தான் இப்படி விட்டேத்தியாகவும்.. பொருளதார ரீதியாகவும் சொன்னது. ஆனால் சின்னமாமாவும் விவசாயம் செய்து பிழைப்பதில் ஆர்வமில்லை என தாத்தாவிற்கு அப்போதுதான் தெரிந்தது.

தாத்தா தன் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு அவர் அமர்ந்திருந்த படிக்கட்டிலிருந்து கையூன்றாமலே எழுந்து சொன்னார். “ டேய் சின்னவனே.. பெரியவனே இத கேளுங்கடா.. 82 வயசு ஆச்சு எனக்கு. இப்போவும் ஒரு மூட்டை நெல்லை தூக்கும் என் தலை. .. உடம்புல தெம்பு இருக்குடா. நான் இருக்கிற வரைக்கும் மட்டுமில்ல.. உன் அம்மா இருக்கிற வரைக்கும் சொத்து கித்துன்னு எம் முன்னாடி வந்து நிக்காதீங்க. பெத்த புள்ளைங்க காப்பாத்தாட்டியும்.. விதை நெல்லு என்னை காப்பாத்தும். போங்கடா.. போங்க. உழைச்சி சம்பாதிக்க பாருங்கடா. விவாசாய சொத்த அழிச்சி சம்பாதிக்காதீங்க. அது தீட்டு ரொம்ப தீட்டு..! நான், உன் சித்தப்பன் , பெரியப்பன் எல்லாரும் என் அப்பன்கிட்ட இருந்து சொத்து பிரிச்சி வாங்கல. வீட்டையும் நிலத்தையும் ஒதுக்கி கொடுத்தாரு. அதுல தான் நாங்க வாழுறோம். அதுலதான் நாங்க ஒன்னா விவசாயம் செய்றோம் . உன் தாத்தன் சாகுற வரைக்கும் பாகப் பிரிவினை பண்ணிக்காமலே இருந்தோம். அதுமாதிரிதான் நீங்களும் இருப்பிங்கன்னு நம்பினேன் சின்ன மருவளே.. குருவிக்கூட்டை கலைக்க வந்திட்டுங்கல. நடத்துங்க நடத்துங்க ”என்றாவாறே என் கைப்பிடித்து ” கிழக்குவெளிக்கு போலமா பேராண்டி” அவர் விவசாயம் செய்யும் நிலத்திற்கு எனை அழைத்துச் சென்றார்.


பல ஏக்கர் பரப்புள்ள நிலம். தொடுவானத்தில்..மாலை நேர சூரியன் தன் வயல்வெளிக்குள் குடிபுகுகிறது என்றே தாத்தா அடிக்கடி வர்ணிப்பார். தாத்தாவிற்கு படிப்பறிவு இல்லையென்றாலும் ..இயற்கையான கவிதையறிவு இருந்திருக்கிறது.

”பேராண்டி.. டவுன்ல படிக்கிறீங்க..நாகரீகமா இருக்கீங்க. இங்கிலீஷ்லாம் பேசி கத்துகிட்டிங்க. எல்லாம் சந்தோஷம் தான் கிராமத்திலயே கிடக்காம.. டவுன்லயே இருக்கலாமுன்னு எனக்கும் ஆச இல்லாம இல்ல பேராண்டி. ஆனா என்னை மாதிரி எல்லாரும் கிராமத்து விட்டு வந்துட்டா .. சோறு பொங்க வைக்க அரிசி எங்கிருந்து கிடைக்குமுன்னு யோசிக்கறோம். நீங்களும் யோசிங்க. டவுன்ல சம்பாதிக்கிற காசுல.. கொஞ்சம் விவசாயத்திலும் முதலீடு போடுங்க பேராண்டி. காரு உற்பத்தி கம்பெனி தொழில் போல.. விவசாயம் செய்றதும் ஒரு உற்பத்தி கம்பெனினு நினைச்சி முதலு போட்டு... அரிசி அள்ளுங்க. உங்க பசிக்கு அரிசியை கையேந்தி காசுகொடுத்து வாங்காம.. ஊருக்கும் ஏழைக்கும் படியளந்து கொடுங்க. பேராண்டி.. நாகரீகமா .. காலம் மாறலாம் பேராண்டி.. அரிசி சோறு தின்னு பழகிய வவுரு மாறிடுமா.. நாளைக்கு சோத்துக்கு பதிலா கல்லையும் மண்ணையுமா திங்க போறீங்க.? ” மிகவும் அழுத்தமாக என் மனதில் பதிய வைத்தவாறே வரப்புகளை ம்ம்முட்டியால் வெட்டி வாய்க்கால் தண்ணீரை நிலத்திற்கு பாய வைத்து... நீண்டு வளரத்துடிக்கும் நெற்கதிர்களை வாஞ்சையோடு தடவி முத்தம் பதித்து கண் கலங்கினார் தாத்தா. பிறகு என் கைப்பிடித்தவாறே தான் வாழ்ந்த காலங்களை மிகுந்த ஆர்வத்தோடு வழி நெடுகிலும் பேசிக்கொண்டே என்னோடு வீட்டிற்கு வந்தார். மிகவும் சோர்வாக அந்த படிக்கட்டுகளில் அமர்ந்து
“ ஏன்கிறேன் என்ன குழம்பு இன்னிக்கு ? “ தாத்தா ஆயாவிடம் பேசும் போது ஏன்கிறேன் எனும் காதல் சொல் இடம்பெறாமல் இருக்காது.
”கருவாட்டுக் கொழம்புதான். ஏன் சாப்பிடுறீங்களா ? கொண்டுவரட்டுமா ? ”
“ ம்ம் கொழும்பு ஊத்தி ..அதுல நல்லெண்ண ஊத்தி கொண்டு வா. பேராண்டி காரம் தாங்கமாட்டான்... “ தாத்தா எப்போதும் தான் மட்டும் தனியாக சாப்பிடமாட்டார். எங்களின் வயது என்ன ஆனாலும் எனக்கும் என் தங்கைக்கும் மற்ற பேரப்பிள்ளைகளுக்கும் ஒரு வாய் ஊட்டி விட்டே சாப்பிடுவார்.
அன்றுதான் கடைசியாக தாத்தாவின் கையில் நான் சாப்பிட்ட கடைசி உருண்டை. முதுமையினாலும்.. மாமாக்கள் விவாசயம் செய்யப்போவதில்லையோ என எண்ணிய மனம் பாரத்தினாலும் அன்று உயிர்மூச்சை விட்டார்.

அதன் பிறகு, ஆயாவை மாமன்கள் சரியாக கவனிக்கமாட்டார்கள் என தெரிந்து சேலத்திற்கு அழைத்தார் அப்பா. ஆனால் ஆயா தாத்தா வாழ்ந்த வீட்டையும் கிராமத்தையும் விட்டு வரமாட்டேன் பிடிவாதம் செய்துவிட்டார். வாரம் ஒரு முறை சின்ன அத்தையின் அலைப்பேசிக்கு அழைத்து அம்மா ஆயாவின் நலம் விசாரித்துக்கொண்டிருப்பார். நானும் தீபாவும் முன்பு போல சாக்காங்குடி செல்ல முடியாத சூழ்நிலை . தாத்தாவை விட்டு வந்த நான் மீண்டும் இப்போதுதான் ஊருக்கு செல்கிறேன்.
நான் செல்வதற்கு முன்னரே தங்கை தீபா சென்றுவிட்டாள். பெரிய மாமாவிடமும் சின்னமாமாவிடம் மல்லுக்கு நின்று வாயாடிக்கொண்டிருந்தப்போது நான் தாத்தாவின் வீட்டிற்கு சென்றடைந்தேன். சென்றதும் அதிர்ச்சி.

தீபா.. ஓடிவந்து என் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள். “ இன்பா.. பாரு.. தாத்தா இருந்த வீடு.. எப்படி இருக்குன்னு பாரு... பணம்.. சொத்து சொத்துன்னு அலையுற இந்த மாமன்கள என்ன பண்ணலாம்? சொல்லுண்ணா.“

தாத்தாவின் ஞாபகச் சின்னமாக இருந்த சிவப்பு சிமெண்ட் படிக்கட்டைத் தவிர.. வீட்டின் கூரைகளும் சுவர்களும் பாழடைந்து கிடந்தது.

“ என்ன மாமா... தாத்தா மேல கொஞ்சம் கூட பாசமே இல்லயா உங்களுக்கு? நீங்களும் பொறந்த வாழ்ந்த வீடு. நானும் பொறந்த வீடு இதுதான். மூனு நாலு தலைமுறை தாங்கின வீட்டை இப்படியா பாழடைய விடுவீங்க ?. இந்த வீட்டை இப்படியா இடியுற அளவுக்கு விடுவிங்க “ பெரிய மாமாவிடம் தான் கேட்டேன்.

“ வீடுன்னா இடியத்தான் செய்யும்.. இதுக்குலாம் ஏன் டா செண்டிமெண்ட்டா பீல் பண்ற? “ மாமாவின் பேச்சில் அக்கறையின்மை தெரிந்தது மட்டுமல்ல. தாத்தாவின் மீதான மரியாதையும், ஆயா மீதான அக்கறையும் இல்லாம இருந்தது.
சின்ன மாமாவிற்கு டீக்கடையோடு சேர்த்து வீடு இருப்பதால் தாத்தா வாழ்ந்த.. ஆயா வாழும் இந்த வீட்டை பற்றி கவலைபப்டவில்லை. மாமாக்கள் இருவருக்கும் தேவை வீடு இருக்கும் நிலமும் விவசாயம் செய்யும் நிலமும் தான்.

“ அண்ணா.. . வீட்டை இந்தளவுக்கு இடியுற அளவுக்கு விட்டவங்க. நிலத்துல என்ன பயிரை விளைவிச்சிருப்பாங்கன்னு பாரு. சொத்து பங்கு போடாதனால ஆளுக்கு ஆளு போட்டி போட்டு..5 வருசமா நிலத்த மலடா போட்டு வச்சிட்டாங்களாம் ஆயா வந்து உடனே ரொம்ப கவலயோடு சொல்றாங்க வீடு நிலத்தையே கவனிக்காத இவங்க .ஆயாவை எந்தளவுக்கு பார்த்திருப்பாங்கன்னு யோசிச்சி பாருண்ணா. “

“ அதெல்லாம் நேரா நேரத்திற்கு சோறு போடுறோம்” சின்ன அத்தைதான் மிக அசால்டான பாவனையில். பெரிய அத்தைக்கோ எப்போதும் ஆயாவை கண்டாலே ஆகாது என இருப்பவர்.
“ சோறு போட்டா போதுமா... நிம்மதி ? “ தீபா கேட்ட கேள்வியின் சாரம் வீரியம் அவர்களுக்கு புரியவில்லை போல.

“ம்ம் புருஷன் வாழ்ந்த வீட்டை பாழடைய வச்சிட்டா.. அங்க ஆயாவ இருக்க வழி இல்லாம பண்ணிட்டா நொந்து போயி.செத்திடுவாங்க. அப்புறமா சொத்து பங்குபோடலாமுன்னு ப்ளான் பண்ணியிருக்கீங்க இல்ல . எப்படி அத்தைகள் மாமாக்கள் எல்லாரும் டிவி சீரியல் கணக்கா வில்லத்தனமா யோசிக்கிறாங்க பாரு இன்பா.“

இதை கேட்டு பெரிய மாமா ஆவேசமாக பொங்க ஆரம்பிக்க.. சின்ன மாமாவும் இணைந்து பொங்க பாரளுமன்றம் அளவிற்கு கூச்சல் குழப்பம் ஆகிவிட்டது அந்த சூழ்நிலை.

இதையெல்லாம் ஆயா விழியில் கண்ணீரை தேக்கியவாறு வேடிக்கை பார்ப்பதுமாக தாத்தாவின் படத்தை பார்ப்பதுமாக இருந்தார். ஆயாவின் நிலையைக் கண்டு பரிதவித்த தீபா என்னிடம் ஒரு முடிவை சொன்னாள். முடியாத சூழ்நிலை என்றாலும் முயற்சிப்போம் என சொன்னேன். தீபா ஆயாவிடம் தனியாக பேசிவிட்டு...
தாத்தாவின் நாற்காலியான அதே சிவப்பு சிமெண்ட் பூசப்பட்ட படிக்கட்டில் அமர்ந்துக்கொண்டாவாறே சின்ன மாமாவிடமும் பெரிய மாமாவிடமும் தீபா பேச ஆரம்பித்தாள்.

“ இங்க பாருங்க மாமாஸ்... இந்த சொத்துல என் அம்மாவுக்கும் பங்குண்டு. அம்மா சொத்துல பங்கு வேணான்னு சொன்னாலும் தார்மீகமாக நீங்க கொடுத்தே ஆகணும். “

“ அதான் உங்க அம்மா அப்பாக்கு கல்யாணம் ஆகும்போது சீர்வரிசையா கொடுத்தாச்சே. இப்போ வந்து என்ன பங்கு.. ஆமா முதல்ல சொத்து பிரிக்கிற பத்தி நீ யாரு புள்ள பஞ்சாயத்து பேச.” பெரிய மாமாவின் மனைவியார் நுணுக்கமாய் குறுக்கீடு செய்தார்.

“ ஓ அப்படியா அத்தை. அப்படின்னா சொத்து பிரச்சினையை கோர்ட்டுக்கு கொண்டு போகலாமா..? ஜட்ஜ் அய்யா கேட்பாரு. அம்மாக்கு கல்யாணம் ஆனப்ப என்ன என்ன போட்டிங்க. எவ்வளவு போட்டிங்கன்னும். இப்போ இருக்கிற சொத்து மதிப்பும் கேட்பாரு,கேஸ் இழுத்து அடிச்சா.. உங்களுக்கு வயசாகிடும். பரவாயில்லயா.?. நானும் சட்ட படிச்சவதான். நான் சொல்றபடி கேளுங்க சரியா ? “

சின்னமாமாவும் பெரியமாமாவும். கொஞ்சம் அதிர்ச்சிதான் அடைந்தார்கள்.
”உங்க சொத்துலாம் எங்களுக்கு வேணாம். இந்த வீடு... விவசாய நிலமெல்லாம் உங்களுக்கு வேணுமா. இல்ல.. வித்துட்டு பணமாதான் வேணுமா ? சின்ன மாமா நீங்க உள்ளுர்ல இருக்கிங்க எப்படி வசதி.. ? “
” பணமா கிடைச்சா நல்லது .. சேம்பரத்துல வீடுவாங்கி போயிடுவோம்.” சின்னமாமா
“ ம்ம் பெரிய மாமா உங்களுக்கு பணம்தான் தேவை இல்லையா ? “
“ ம்ம் ஆமா ஆமா “ என்றார் பெரிய மாமா. சின்ன பெண்ணின் கேள்விக்கு பதில் சொல்வதில் அவருக்கு அவ்வளவு வெறுப்பு.

” சரி .. ஆயாகிட்ட கேட்டுட்டோம். அப்பா அம்மாகிட்டயும் கேட்டுட்டோம். உங்க ரெண்டு பேருக்கும் நானும் இன்பாவும் பணமா கொடுத்திடுறோம். டீல் ஓகேன்னா சொல்லுங்க அடுத்த மாசம் கிரயம் பண்ணிடலாம். “

நான் தீபாவுக்கு அருகிலே ஆயாவுடன் அமர்ந்துக்கொண்டு என் தங்கை தீபா செய்யும் நாட்டாமை தனத்தை ரசித்துக்கொண்டிருந்தேன்.

இரு மாமாக்களும் தத்தம் மனைவியுடன் ஆலோசனை செய்தார்கள். பிறகு சம்மதம் தெரிவித்து அதிக விலையொன்றை சொன்னார்கள்.

“ம்ம் சரி நீங்க சொன்ன தொகைக்கு ஒத்துக்கிறோம். ஆனா...சின்ன மாமா... பெரிய மாமா... உங்கள பெத்த அம்மாவ என்ன செய்ய போறீங்க.?”

“ சின்னவன் வீட்டிலேயே இருக்கட்டும் நான் வேணுமுன்னா மாசா மாசம் செலவுக்கு பணம் அனுப்பிடுறேன் “ பெரிய மாமா இப்படி பேச..
“ ஏன் பெரியவர் வீட்டுல இடமில்லையோ...” சின்ன மாமாவின் மனைவியார் எதிர்கேள்வி பேச.. தீபா குறுக்கிட்டாள்.

“ அட ச்சே... பாகப்பிரிவினை போல.. அன்னை பிரிவினை செய்ய முடிஞ்சா எப்படி இருந்திருக்கும் இல்ல மாமா.. ? ம்ம்ம் நீங்க யாரும் ஒரு ம---ம் புடுங்க வேணாம். ஆயாவ நான் பார்த்துகிறேன் .இன்பாவும் நானும் பார்த்துப்போம். பெத்து வளர்த்து ஆளாக்கின தாய் வேண்டாம்.. சோறு போட்ட விவசாய நிலம் வேணாம். கோடி கோடியா பணம் மட்டும் வேணும். இல்ல.. எப்படி மாமாக்களே நாளைக்கு பசிச்சா பணத்தையா சாப்பிடுவீங்க.? ஏன் அத்தை மார்களே உங்க அம்மாவ இருந்தா இப்படி விட்டுவிடுவீங்களா ? நீஙகளும் அம்மாக்கள் தானே நாளைக்கு உங்க பிள்ளைங்க உங்கள தவிக்கவிட்டு சொத்து சொத்துன்னு அலைஞ்சா எப்படி தவிப்பீங்க. ? “

தீபா ..தாத்தா அமர்ந்த படிக்கட்டில் அமர்ந்து சராமரியாக கேள்விகள் தொடுத்துக்கொண்டே இருந்தாள். மூச்சு விடும் சத்தம் கூட போடாமல் மெளனமாக தலை குணிந்துக்கொண்டிருந்தார்கள் மாமாக்களும் அத்தைகளும். ஆயா தன் பேத்தியின் நாட்டாமை தன்மையினை ரசித்தவாறே யாருக்கும் பாரமில்லாமல் தாத்தா அமர்ந்த அதே சிவப்பு சிமெண்ட் படிகட்டில் உயிர் விட துவங்கினார்.


***
-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (14-Aug-17, 6:15 am)
பார்வை : 424

மேலே