திரு கார்த்திகேய சிவசேனாதிபதி” -அவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்

மிச்சிகன் தமிழ் சங்கத்தின் மூலம் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

இந்த நிகழ்ச்சிக்கு அரங்கம் நிரம்பிய கூட்டம்.நம் மக்கள் தம் குழந்தைகளுடன் வந்து பங்கேற்றனர்.

அவரை இதற்கு முன் சந்தித்து பேசியிருந்தாலும் , மறுபடியும் கலந்து கொள்ளலாம் என்ற ஆவலில் கலந்து கொண்டேன். ஜல்லிக்கட்டு என்றவுடன் , எல்லாரும் போல நாங்களும் ஒரு சிறு போராட்டத்தை மிச்சிகன் aburn hills பகுதியில் அரங்கேற்றினோம் ஆனால் அதனால் என்ன பயன் என்று தெரியாமல் இருந்தது . என் புருசனும் சந்தைக்கு போனான் கணக்கு என்று நினைத்துக் கொண்டிருந்தேன் . விடை இதில் தெரிய வந்தது.

வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு நன்றி சொல்லி தொடங்கினார் . ஒவ்வொரு நாளும் மத்திய அரசாங்கத்திடம் உளவுத்துறை அறிக்கை சமர்பிக்குமாம் . அதில் தவறாமல் இடம் பெற்றவை , வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் நடத்திய போராட்டம் . இது மிகப் பெரிய அழுத்தத்தை அரசாங்கத்திற்கு கொடுத்தது என்ற தகவலை கூறினார் . ஏதோ நாமும் ஒரு சிறு பங்களித்தோம் என்று மனதின் ஓரத்தில் ஒரு திருப்தி வந்தது .( வரலாறு முக்கியம் அல்லவா ? )

அதன் மூலம் மத்திய அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஏற்பட்ட அழுத்தம், தடை நீங்க எடுக்கப்பட்ட முயற்சிகள் , தமிழகத்தின் இன்றைய அரசியில் சூழ்நிலை , அதனால் ஏற்படும் ஆதங்கம் ,மாட்டு அரசியில், தம் அமைப்பின் மூலம் செய்து வரும் பணிகள் , உணவுப் பொருட்களின் மீது நடைபெறும் வணிக வன்முறையை
அவர் விவரிக்கும் போது இனி தொழிற்சாலைகளில் நாம் உண்ணும் பழவகைகள் முதற்கொண்டு தயாரிக்கப்படுமோ என்று அச்சமாக இருந்தது .

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரால் விவசாயிகள் சந்திக்கும் அடக்குமுறை , அதனால் ஏற்படும் விளைவுகள் முதலியவற்றை விரிவாகவும் தெளிவாகவும் விளக்கினார்.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனம் ஆக்காமல் விட மாட்டார்கள் போல . உணவை இழந்துவிட்டு , தண்ணீரை மாசுபடுத்தி விட்டு வளர்ச்சியை வைத்து என்ன செய்வது ? ஏன் தமிழகத்துக்கு மட்டும் இவை வருகின்றன ? காவிரியில் மீத்தேன் இருந்தால் கங்கையில் இருக்காதா என்ன ? ஏன் அங்கே போகவில்லை என்ற சிந்தனைகள் கிளை பரப்பி என்னுள் ஒடத் தொடங்கின.

#saveTamilnaduFarmer அமைப்பின் மூலம் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு செய்து வரும் பணிகள் எடுத்துரைக்கப்பட்டது. அந்த குடும்பங்களை விசாரித்து கண்டறிந்து அவர்களுக்கு தேவையான வாழ்வாதார பணிகளுக்கும் , அக்குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்விக்கும் இவர்கள் உதவி புரிந்து வருகிறார்கள் .

நடிகர்கள் சித்தார்த் மற்றும் பாலாஜி இவர்களுக்கு உறுதுணையாக இருந்து உதவி புரிகின்றனர். நல்ல முயற்சி . நம் மக்கள் ஆர்வமுடன் இந்த அமைப்பிற்கு நன்கொடை வழங்கினர்

பின் கேள்வி பதில் . விவசாயம் செய்ய போகிறேன் . மாடு வளர்த்தலாம் என்று ஆசை என்ன மாடுகளை வளர்த்தலாம் என ஒரு தம்பதி கேட்ட கேள்விக்கு , நான் சும்மா சொல்லிட்டு போயிடலாங்க ஆனா நிலைமை சரியில்லை , இங்கே இருந்தாவது நீங்கள் அங்கே இருப்பவர்களுக்கு உதவி செய்யலாம் , அங்கே வந்து விவசாயம் செய்தால் உங்களை காப்பாற்ற நீங்கள் போராட வேண்டி இருக்கும் , தேவைகளை குறைத்து முழுமையாக ஈடுபட்டால் மட்டுமே முடியும் என்று மனதில் இருந்து பதில் கூறினார் .

.தமிழ் சங்கத்தின் நன்றி உரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

அரசாங்கங்கள் , அதிகாரவர்க்கம் , செயல் இழந்து போன இன்றைய நிலையில் , தன்னார்வலர்கள் நமது மொழி, மக்கள் என்று உள்ளுணர்வால் உந்தப்பட்டு செய்யும் சேவைகளே தமிழ்நாட்டை இனி காப்பாற்றும் . நமக்கான அரசியிலை இனி நாம்தான் செய்ய வேண்டும் போல . தலைவர்களை , கட்சிகளை நம்பி இருந்தது போதும் .

ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் தொடர்ந்து தன்னாலான உதவிகளை செய்கிறார்கள் . இன்னும் ஐந்து அல்லது பத்து வருடத்தில் இவர்கள் சிறிது சிறிதாக உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றி பெரிய அமைப்பாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது . பார்க்கலாம் .

எழுதியவர் : பாவி (18-Aug-17, 11:44 pm)
சேர்த்தது : பாவி
பார்வை : 351

மேலே