என் வானிலை மாறுதே

....என் வானிலை மாறுதே....


"என்னை மலரச் செய்திடும்
உன் புன்னகையில்..
என்னை உருகச் செய்திடும்
உன் வார்த்தைகளில்..
என்னை சிவக்கச் செய்திடும்
உன் பார்வைகளில்..

என்னை மறந்து உன்னிடம்
மயங்கி நிற்கும் அத்தனை
பொழுதுகளிலும்..
என்னை அறியாமலேயே
என் வானிலை மாறுதடா..."


யாருமற்ற சாலை..நிலவின் வெளிச்சம் மட்டுமே பட்டுத் தெறித்துக் கொண்டிருந்த அந்த அழகிய நேரத்தில் அவனும் நானும் மட்டுமே அருகருகே நடந்து சென்று கொண்டிருந்தோம்....சில்லென்று வீசிக் கொண்டிருந்த தென்றலில் ஒருவரை ஒருவர் மறந்து சிறிது நேரம் மௌனமாகவே சென்று கொண்டிருந்தோம்...என் மனம் அவனுக்கும் எனக்கும் மட்டுமே சொந்தமான பழைய நினைவுகளை மீட்டிப் பார்க்கத் தொடங்கியது..

இரண்டு வருடங்களிற்கு முன் அவனும் நானும் முதன் முதலாக சந்தித்துக் கொண்டது ஒரு சூப்பர் மார்க்கெட்டில்தான்...அன்று மோதலில் ஆரம்பித்த எமது சந்திப்பு அதன் பின் வந்த நாட்களில் எனக்கும் அவனுக்குமான உறவு நல்ல நட்போடு தொடங்கி தொடர்கதையாக இன்றுவரை தொடர்கிறது...

என்னருகே அவன் இருக்கும் ஒவ்வொரு மணித்துளிகளிளும் என் வானிலையில் புதிய மாற்றங்களை அவன் உருவாக்கிக் கொண்டிருந்தான்...எனக்கு அவனை ஏன் எதற்காக பிடித்தது என்பதற்கான காரணங்களை இதுவரையில் நான் அறிந்திருக்கவில்லை...அவனை அவனுக்காக மட்டுமே பிடித்திருந்தது...ஆனாலும் அவனிடம் என் காதலை சொல்வதில்தான் தயக்கம்...மிகப்பெரிய விளம்பர நிறுவனத்திற்கு உரிமையாளனாகவும் பல கோடி பெறுமதியான சொத்துக்களுக்கு சொந்தக்காரனாகவும் இருக்கும் அவனிடம் என் காதலை எப்படிச் சொல்வதென்று தெரியாத தவிப்போடே இந்த இரண்டு வருடங்களும் ஓடி விட்டன...

ஆரம்பத்தில் அவன் இவ்வளவு பெரிய பணக்காரன் என்று அறிந்திருந்தால் விலகியிருப்பேன்...ஆனால் என் மனதை அவன் நெருங்கிய பின்னால் அனைத்தும் அறிந்தும் என்னால் விலகிச் செல்லவும் முடியாமல் என் நேசத்தை அவனிடம் சொல்லவும் முடியாமல்...மனதிற்குள் காதலை வைத்துக் கொண்டு வெளியில் அவனிடம் நட்பாக பழகுவதென்பது இஷ்டத்திலும் கஷ்டமானதொன்றாகிவிட்டது எனக்கு...அதனால் இன்று என்ன நடந்தாலும்... அவன் என்னைப்பற்றி தவறாக எண்ணிணாலும் பரவாயில்லை என்று என் காதலை அவனிடம் சொல்லிவிடலாம் என்ற முடிவோடே என் நண்பியின் திருமண வரவேற்பில் கலந்து கொள்ளவதற்காய் வந்திருந்தேன்...

அவனும் அங்கே மாப்பிள்ளையின் உறவாக வந்திருந்தான்...என்னை அவனே வீட்டில் கொண்டு விடுவதாக முதலே கேட்டிருந்ததால்தான்... இன்று கிடைக்கும் தனிமையில் என் மனதை அவனுக்கு உணர்த்தி விடலாம் என்று நினைத்தேன்...வரும் வழியில் கார் பிரேக் டவுன் ஆனது வேறு எனக்கு வசதியாகப் போய்விட்டது...30 நிமிட நடையில் என் வீட்டை அடைந்துவிடலாம் என்பதால் அவன் நடந்தே செல்வோமென்றான்..இன்னும் இருபது நிமிடத்தில் எனது வீடும் வந்துவிடும்...ஆனால் எப்படி எங்கிருந்து ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை...இதையே யோசித்தவாறு இருந்ததில் அவனோடு நான் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை....

இப்படியே மௌனமாகவே சென்று கொண்டிருந்த பயணத்தை முதலில் கலைத்தது அவன்தான்...

"என்ன மேடம் ரொம்ப சைலன்டாவே வாறீங்க..??.."

"ஏன் நீங்க கூடத்தான் அமைதியாவே வாறீங்க..??."

"என்ன பதிலுக்கு பதிலா..?"

"இல்லையே..கேள்விக்கு பதில்.."என்றவாறே எனக்குள் நானே லேசாக புன்னகைத்துக் கொண்டேன்.."

"அது சரி...அப்புறம் உங்களுக்கு எப்போ கல்யாணம்..??"

"என்ன திடீர்ன்னு இப்படியொரு கேள்வி..?"எனும் போதே எனக்குள் ஒரு படபடப்பு...

"இல்லை..இப்போ உங்க ப்ரண்டோட திருமண வரவேற்புக்குதானே போயிட்டு வாறோம் அதான் உங்களுக்கு எப்போன்னு கேட்டேன்.."

"ம்ம்...மாப்பிள்ளை சேர் ரெடின்னா...உடனே பண்ணிக்க வேண்டியதுதான்..."என்றவாறே அவனை ஓரக்கண்ணால் நோட்டமிட்டேன்...

"ம்ம்...மேடம் சொல்றதை பார்த்தா..பொண்ணு எப்பவோ ரெடி போலயே...?"

"ம்ம்...அப்படியும் சொல்லலாம்...என்னோட கல்யாணம் இருக்கட்டும்...உங்க கல்யாணம் எப்போ சேர்..?"

"ம்ம்...என் கல்யாணம் பெப்ரவரியில 30 ஆம் திகதி வந்தா தான் நடக்கும் போல...என் பக்கம்தான் காத்தே வீச மாட்டேன் என்குதே..."என்றவாறே பெரிய பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டான்..

"ஹா...ஹா...நான் வேணும்னா அந்த காத்தை பிடிச்சு உங்க கையில தந்திடட்டுமா...?"

"ம்ம்...தாங்களேன்...பார்ப்போம்..."என்றவாறே என்னைப் பார்த்து தலையை லேசாக சாய்த்தவாறே புன்னகைத்தான்...

இருளும் வெளிச்சமும் கலவையாக கலந்திருந்த அந்த நேரத்தில் அவனின் இந்த மாயப்புன்னகை என் மனக்கதவுகளை படபடவென்று தட்டத் தொடங்கியது..என் உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்கள் எதையும் அவனிடம் காட்டிக் கொள்ளாமல் அவனோடு சகஜமாக கதைக்கவே நான் படாத பாடு பட வேண்டியதாகிப் போயிற்று...

"சம்யுக்தா...நான் ஒன்னு கேட்பேன் நீங்க அதுக்கு உண்மையா பதில் சொல்லனும்...ஓகேயா...??

அவன் இப்படிக் கேட்டதும் ஏற்கனவே அவனிடத்தில் மயங்கிப் போயிருந்த என் இருதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது...ஆனாலும் வெளியில் சாதாரணமாகவே காட்டிக் கொண்டு...

"ம்ம்...கேளுங்க ப்ருத்வி.."

"என்னோட குடும்பத்தில இருக்கிற எல்லோரையும் உங்களுக்கு தெரியும்...அவங்க எல்லோரையும் உங்களுக்கு பிடிக்குமா யுகி...??"

"அவங்களை எப்படி எனக்கு பிடிக்காம போகும்...உங்க அப்பா...அம்மா...அக்கா...எல்லாரையுமே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்..."என்று உதடுகள் சொல்லும் போதே அவனுக்கு சொந்தமானவர்களை எனக்கு பிடிக்காமல் போனால்தான் ஆச்சரியமென்று என் மனது எண்ணிக் கொண்டது...

"ம்ம்...அப்போ என்னோட அப்பா,அம்மா,அக்கா எல்லோரையும் உங்களுக்கு பிடிச்சிருக்கு...?"

"ம்ம்...ஆமா..."

"அப்போ என்னை...என்னையும் உங்களுக்கு பிடிக்குமா யுகி..??"

அவனது அந்தக் கேள்வியில் நான் அப்படியே நின்றுவிட்டேன்...என்னிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே என்னை திரும்பிப் பார்த்தவன் என்னருகே வந்தான்...

"என்னாச்சு யுகி...என்னை உங்களுக்கு பிடிக்கலையா...??"

என் காதுகள் சரியாகத்தான் கேட்கின்றனவா...இல்லை இவன் இதை சாதாரணமாகத்தான் கேட்கின்றானா..?என்ன சொல்வதென்று தெரியாமல் அவனையே பார்த்தவாறு நின்றேன்...

அவனும் என்னையே சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் என்னை விட்டு விலகி நடக்கத் தொடங்கினான்..

அப்போது எனக்கு எங்கிருந்துதான் அவ்வளவு தைரியம் வந்ததோ...அவன் கரத்தினை பிடித்து அவனை தடுத்த நான் அவன் கண்களை நேராகப் பார்த்தவாறே...

"இந்த உலகத்திலேயே நான் உங்களை நேசிக்கிற அளவுக்கு வேற யாராலையும் உங்களை காதலிக்க முடியாது....எனக்கு உங்களை....உங்களை மட்டும்தான்...உங்களுக்காகவே பிடிச்சிருக்கு ப்ருத்வி...ஐ லவ் யூ..."

அதன் பின் என்ன நடந்தது என்பது என் நினைவிற்கு எட்டவில்லை...என் விழிகளைத் திறந்து நான் பார்க்கும் போது அவன் அணைப்பினில் நான் அடைக்கலமாகியிருந்தேன்...என் கரங்கள் அவனை இறுக்கமாக பற்றியிருந்தன..முதன் முறையாக அவனது வாசத்தை அவனுக்கருகேயிருந்து சுவாசித்துக் கொண்டது என் மனது...

தீடிரென ஒலித்த இடியின் சத்தத்திலே என் உணர்வுக்கு வந்த நான் அவனிடமிருந்து விலகி நின்றேன்...அவனை என்னால் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை...என் கன்னங்கள் கூட சிவக்குமென்பதை அன்றுதான் உணர்ந்து கொண்டேன் நானும்...என்னை நோக்கி அவன் அருகே வந்து கொண்டிருப்பதை உணர்ந்த நான் மெது மெதுவாக பின்னோக்கி நகரத் தொடங்கினேன்...பாதையிலிருந்து சற்றுத்தள்ளியிருந்த மரத்தோடு நான் அவனிடம் விருப்பத்தோடே சிறைப்பட்டுக் கொண்டேன்...

குனிந்திருந்த என் தலையினை நிமிர்த்தி என் கண்களை உற்று நோக்கியவன்..,

"என்னை உனக்கு அவ்வளவு பிடிக்குமா யுகி..?"

அவனது கேள்விக்கு நான் பதிலைச் சொல்லவில்லை...அவன் தோளில் லேசாக சாய்ந்தவாறே அவனை அணைத்துக் கொண்டேன்..

தூறலாய் பெய்யத் தொடங்கியிருந்த மழையில் எவ்வளவு நேரம் அப்படியே நின்றோம் என்று இருவருமே அறிந்திருக்கவில்லை...முதலில் அவனிடமிருந்து விலகிய எனக்கு அவன் மனதிலுள்ளதையும் அவன் வாய் மூலமாக கேட்க வேண்டுமென்ற ஆவல் எழுந்தது...அவனும் என் மனதை புரிந்து கொண்டவனாக அவனது காதலைச் சொல்லத் தொடங்கினான்..

"உன்னை முதன் முதலா சந்திச்சப்பவே என்னோட உள்ளுணர்வு சொல்லிச்சு உனக்கானவ இவதான்னு...முதல் சந்திப்பு நமக்குள்ள மோதல ஏற்படுத்தி இருந்தாலும்...நீ என்கிட்ட அன்னைக்கு கதைச்ச விதம்...ஆர்ப்பாட்டமில்லாத உன்னோட அழகு...நேர்மையான உன்னோட திமிரு...இப்படி எல்லாமே என்னை உன் பக்கமா இழுக்கத் தொடங்கிச்சு..."

"அதுக்குப் பிறகு எப்போ எந்த நிமிசம் உன்னை நான் காதலிக்க ஆரம்பிச்சேன்னு தெரியல...என்னை மறந்து என்னோட மனம் உன்னை மட்டுமே பார்த்திட்டு இருக்கும்...காதல் என்ற உணர்வை எனக்குள்ள முதன் முதலா மலரச் செய்தது நீ மட்டும்தான் யுகி...என்னோட முதலும் இறுதியுமான காதல் உன்னோட மட்டும்தான்...என்னோட வாழ்க்கையில இனி நான் கடக்கவிருக்கிற ஒவ்வொரு நொடியையும் உன்னோட சேர்ந்து வாழனும்னு ஆசைப்படுறேன்....என்னை கல்யாணம் பண்ணிக்குவியா யுகி...??"என்றவாறே அவனது கரத்தை என் முன்னே நீட்டினான்...

எனக்கு வார்த்தைகளே வரவில்லை...என் கண்கள் முதன் முறையாக ஆனந்தத்தில் கலங்கின....சம்மதம் என்பதற்கு அறிகுறியாய் என் தலையை அசைத்தவாறே அவன் கரத்தினை இறுக்கமாக பற்றிக் கொண்டேன்....

என்னை விடவும் என் கரத்தினை அவன் இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்....இதுவரை நேரமும் அவன் வார்த்தைகளில் கூறியதை விட அந்த இறுக்கம் என் மீதான அவனது காதலை எனக்குள் அழகாக உணர்த்தியது...

ஒருவர் கரத்தை ஒருவர் பிடித்தவாறே மீண்டும் சாலையில் இறங்கி என் வீட்டை நோக்கிய பயணத்தை தொடர்ந்தோம்...அழகாய் மாறியிருந்த அந்த வானிலையில் என் மனம் வரைந்து கொண்டது அவன் மீதான காதல் வானவில்லை...அதன் பின் நாங்களிருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை...காரணம் எங்களிருவரின் உள்ளங்களும் அங்கே ரகசியமாய் காதல் பண்ணத் தொடங்கியிருந்தன...


இனி எல்லாம் வசந்தமே....

எழுதியவர் : அன்புடன் சகி (30-Aug-17, 6:32 pm)
பார்வை : 668

மேலே