நீல நிற தோள்பை
பேய் மழை காற்றின் துணையோடு சோவென்று பெய்துகொண்டிருக்க, கடலூரின் அரசு மத்திய மருத்துவமனையில் டெங்கு ஜுரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிறையபேர் அங்கும் இங்கும் காத்துக்கொண்டிருக்க, ஏதோ ஒரு மனப்போராட்டத்தில் தன்னை இழந்தவளாய் வெளியே வந்துகொண்டிருந்தாள் அமுதா. கையில் குடை இருந்தும் நனைந்துகொணடே பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தாள். தோளில் தொங்கிக்கொண்டிருந்த நீல நிற தோள்பையுடன் ஏதோ நினைவில் ஓடவிட்டவாறு நடக்கலானாள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு.......
"டாக்டர், ஒரு வாரமா கழுத்து வீங்கி இருக்கு. பீவரிஷா இருக்கு. பசி எடுக்கல. வாமிட்டிங் பீலிங் இருக்கு. தைராய்டா இருக்குமான்னு டவுட்டா இருக்கு." அமுதா கூற.....
"எந்த ஊரு நீங்க?" டாக்டர் கேட்டார்.
"நான் நாகப்பட்டினம் மேடம்" என்றாள் அமுதா.
"இங்க என்னம்மா பண்றீங்க. அப்பா அம்மா எல்லாரும் எங்கே இருக்காங்க?" டாக்டர் ஸ்டெதஸ்க்கோப்பை வைத்து பரிசோதித்துக்கொண்டே கேட்டார்.
"அப்பா அம்மா தம்பி எல்லாரும் சுனாமி ல இறந்துபோய்ட்டாங்க மேடம். நான் இந்த கடலூர் சுனாமி மறுவாழ்வு மையத்துல இருந்து படிச்சு இப்போ சிப்காட்ல ஒரு கம்பெனில எச்.ஆர் ல ஜூனியர் ஆஃபீசரா வேலை பாக்கறேன்." என்றாள் அமுதா.
"ஓ அப்படியா. சாரிம்மா. சரி...இப்போ சீசன் கொஞ்சம் சரி இல்ல. சோ, நாம ஒரு பிளட் டெஸ்ட் எடுத்துடலாம். நீங்க லேப் ல பிளட் சாம்பிளை கொடுத்துட்டு ரெண்டு நாள் கழிச்சு வாங்க." டாக்டர் அட்வைஸ் கொடுத்து அனுப்பினார்.
இன்று......
மழையில் கண்ணீர் தெரியாது தான். ஆனால் அமுதாவின் முகம் ஒருவித சோகத்தை சுமந்துகொண்டே சென்றது. மழையில் முழுவதும் நனைந்துவிட்டாள் அமுதா. நீலநிற தோள்பையில் ஒரு பாலிதீன் கவருக்குள் சோகத்தை சுமந்து அமுதாவுடன் ஷேர் ஆட்டோவுக்காக காத்திருந்தது அந்த மருத்துவ ஆலோசனை சீட்டு. பேருந்து நிறுத்தத்தில் ஒரு மூலையில் கொய்யாப்பழம் விற்கும் ஒரு நடுத்தர வயது பெண்மணி கையில் செய்தித்தாள் வைத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அமுதாவை பார்த்த கணத்தில் "எம்மா, கையில் தான் குடை இருக்கே... அப்புறம் ஏன் நனைஞ்சுட்டு வந்திருக்க. "என்று கேட்க, மௌனமாய் நின்றிருந்தாள் அமுதா. மீண்டும் பேச்சு கொடுத்தாள் அந்த கொய்யாப்பழம் விற்கும் பெண். "கடலூர் முன்ன மாதிரி இல்லம்மா. ரொம்ப கெட்டு கடக்கு. பாரு, மூணு நாளைக்கு முன்னாடி ஒரு பொண்ணோட பிணம் கெடிலம் ஆத்தங்கரைல ஒதுங்கி இருக்கு. அந்த பொண்ண ரெண்டு மூணு பேரு பாலியல் வன்கொடுமை செஞ்சு கொன்னு போட்டுட்டானுங்கம்மா." என்றாள். அதற்கும் மௌனம்.
"இந்த பொண்ணு செவிடா இருக்குமோ" நினைத்தபடியே அமுதாவை ஏற இறங்க பார்த்துக்கொண்டிருக்கும்போதே "பஸ் ஸ்டாண்டு பஸ் ஸ்டாண்டு" ஒரு ஷேர் ஆட்டோ வந்து நிற்க, "கொய்யாப்பழ வியாபாரி முதலில் ஏறிக்கொண்டாள். ஒரு நபருக்கு மட்டுமே இடம் இருந்ததால் அடுத்த ஆட்டோவிற்காக காத்திருக்க தொடங்கினாள் அமுதா.
"பஸ் ஸ்டாண்டு பஸ் ஸ்டாண்டு" அடுத்த ஆட்டோ வரவே அமுதா ஏறி உட்கார்ந்தாள்.
"நீ தான் மா முதல் சவாரி. மழை அதிகமா பேயிது. மக்கள் வெளியே வரல." ஆட்டோக்காரர் பேச, அமுதா மௌனமாய் இருந்தாள்."எங்கம்மா போகணும், பஸ் ஸ்டாண்டா போஸ்ட் ஆபீஸ் ஸ்டாப்பிங்கா?" ஆட்டோக்காரர் கேட்க மீண்டும் மௌனமாய் இருந்தாள் அமுதா." அம்மா...உன்னைத்தான் கேக்கறேன்.எங்க போகணும்" உரக்க கேட்டார் ஆட்டோக்காரர். "நான் உப்புளவாடி சுனாமி மறுவாழ்வு மையத்துக்கு போகணும். " என்றாள் அமுதா.
"அம்மா...இது அந்த பக்கம் போற ஆட்டோ இல்லம்மா. நீ சூர்யபிரியா ஹோட்டல் ஸ்டாப்பிங்க்ல இறங்கிட்டு அஞ்சாம் நம்பர் ஆட்டோ புடிச்சு போயிரு." என்றார் ஆட்டோக்காரர். "இல்ல....நீங்க என்னை மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு ஸ்டாப்பிங்க்ல இறக்கி விட்ருங்க. நான் அங்க இருந்து நடந்து போய்க்கிறேன்." என்றாள் அமுதா. "சரிம்மா. ஆனா இருபது ருபாய் மா." என்றார் ஆட்டோக்காரர். "ம்ம்ம்ம்" என்று அமுதாவிடமிருந்து பதில் வந்தது.
ஆறு ஏழு நிமிடங்களில் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு நிறுத்தத்தில் அமுதாவை இறக்கி விட்டுவிட்டு ஆட்டோ நகர்ந்தது.
பலத்த யோசனையுடன் அமுதாவின் கால்கள் உப்பளவாடி ரோட்டில் நகரத்தொடங்கியது.
"என்ன அமுதா மேடம், மழை ல கொடைய வெச்சுகிட்டு நனஞ்சுட்டு போறீங்க. வாங்க, உங்கள அந்த மொனையில இறக்கி விட்டுடறேன். "பின்னால் இருந்து செந்திலின் குரல் கேட்க, திரும்பி பார்த்தாள் அமுதா. தனது காருக்குள் சிகரெட் பிடித்தபடி உட்கார்ந்திருந்தான் அந்த ஊரின் கவுன்சிலர் மகன் செந்தில். "இல்ல வேணாம் நான் நடந்தே போய்க்கிறேன்" என்றபடி குடையை விரித்தாள் அமுதா."முழுசா நனைஞ்சபிறகு எதுக்கு குடை பிடிக்கணும்"என்றான் செந்தில்.
மௌனமாய் நடந்தாள் அமுதா. "அமுதா மேடம், என்ன பயம். வாங்க" என்றான் செந்திலுடன் உட்கார்ந்திருந்த அவனது நண்பன் சக்தி. மௌனமாய் வேகமாய் நடக்க தொடங்கினாள் அமுதா. மெயின் ரோட்டில் இருந்து உப்பளவாடிக்கு செல்லும் திருப்பம் வரவே திரும்பி அந்த பாதையினூடே நடக்கலானாள் அமுதா. எதிர்பாராதவிதமாக வேகமாக அவளது முன்னால் வந்து நின்ற செந்திலின் காரின் உள்ளிருந்து நான்கு கரங்கள் அவளை உள்ளே இழுத்து தாழிட்டு கொண்டது. வேகமாக தாழங்குடா கடற்கரைக்கயை நோக்கி பறந்தது கார். மழை நேரமாதலால் மனித நடமாட்டமே அற்று பெரிய அலைகளுடன் கடல் கொந்தளித்துக்கொண்டிருக்க, கடற்கரைக்கு சற்று தூரத்தில் வண்டி நின்றது. ஒரு முக்கால்மணி நேரம் கடந்திருக்கும். அமுதா காரினுள்ளே இருந்து வெளியே தள்ளப்பட்டாள். அவளை இழுத்துக்கொண்டு ஆர்ப்பரிக்கும் கடலுக்குள் சென்றனர் இருவரும். வலுக்கட்டாயமாக தண்ணீருக்குள் அமுதாவை மூழ்கடித்துவிட்டு காரை நோக்கி நடந்தனர் இருவரும்.
ஏதோ பெரிய காரியத்தை சாதித்துவிட்டதை போல் காரில் அமர்ந்து பின்சீட்டில் இருந்த மதுகுப்பியை எக்கி எடுக்க முயற்சித்தான் சக்தி. அப்போது அந்த பாட்டிலுடன் அமுதாவின் நீல நிற தோள்பையின் வாறும் மாட்டிக்கொண்டு வர, "டேய்... இந்த பேக் அமுதாவோடது டா.இதை என்ன பண்றது" என்று கேட்டபடி பேக்கை கையில் எடுத்தான் சக்தி. அதை பிரித்து உள்ளேய இருந்த அந்த பாலிதீன் போடப்பட்டிருந்த அவளது மருத்துவமனை குறிப்பை கையில் எடுத்தான்.
அதில்......
பெயர்: அமுதா
வயது: 26
போன்ற விபரங்களுக்கு கீழே........
டயக்னோசிஸ்: "எச்.ஐ.வி பாசிட்டிவ்" என்று போடப்பட்டிருந்தது.
அமுதாவின் உடல் கடலில் மிதக்க தொடங்கிய கணம்.......காமக்கொடூரர்களின் வெறியாட்டம் முடிவை எட்டியதை அவர்கள் மனம் உணர்ந்திருந்தது....