பேனா முனையை மூடி உறங்கச் செய்த மூன்று குண்டுகள்
ஒரு மரணம் கொஞ்சம் மவுனத்தைச் சிதறிச் சென்று இருக்கிறது.ஒரு மரணம் சில கேள்விகளை விட்டுச் சென்று இருக்கிறது . ஒரு மரணம் கொஞ்சம் பயத்தை விட்டுச் சென்று இருக்கிறது. அந்த மரணம் நம் எல்லோரையும் ஒரு கணம் உறைய வைத்த கர்நாடக மாநில பெரும் எழுத்தாளர் கவுரி லங்கேஷ் அவர்களின் படுகொலை மரணம் தான்.
சங்க காலம் தொட்டு இக்காலம் வரை எழுத்தாளனின் கோபம் கொண்டு கீறிய பேனாவின் முனைகள் ஏற்படுத்தியக் கிளர்ச்சிகள் எத்தனை எத்தனை. சமுதாயத்தை செதுக்கி சமூக மக்களின் மனங்களை பக்குவப்படுத்தி பண்பாட்டை வளர்த்தெடுத்து சமூக நீதியை வார்த்தெடுத்த பெருமை பல பேனாக்கள் கொண்ட சிறு முனைகளுக்கு தானே. அந்த சிறு முனைகளை தாங்கிய சிறு விரல்கள் ஒவ்வொன்றும் சமுகத்தின் வண்ணங்களை மாற்றி போடும் அதிசய மந்திரக் கோல்களே.
இன்று அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளனின் கூரிய பேனா முனையை மூன்று குண்டுகள் மூடி உறங்கச் செய்துவிட்டன என்பது எவ்வளவு கொடிய வன்முறை. மனித உரிமை, தன் எதிர்ப்பை காட்டும் ஜனநாயக உரிமை, உண்மையை எவர் வேண்டுமென்றாலும் எந்த ஊடகம் வேண்டுமென்றாலும் உரக்கச் சொல்லலாம் என்ற எழுத்தாளனின் உரிமை இவை எல்லாம் இன்று பறிக்கப்பட்டு இருக்கின்றது. ஒரு எழுத்தாளனின் கோபத்துக்கு பதில் சொல்ல முடியாமல் கோழைகள் மரணம் என்ற முகமூடி கொண்டு உண்மையின் முகத்தை மறைத்து விட்டனர்.
உண்மையை உண்மையாக சொல்ல, இருப்பதை இருப்பதாக காட்ட , நடந்தை நடந்தாக சொல்ல , நிகழ்ந்ததை நிகழ்ந்ததாக படம்பிடிக்க , தவறு செய்பவர்களை தவறு செய்பவர்களாகக் காட்ட , கருப்பு ஆடுகளுக்கு சாயம் பூசாமல் கருப்பை கரு கருவென கறுப்பாகவே காட்டவும், அதிகார வர்க்கத்திற்கு அடங்கிப் போகாமல் அதிர்ந்து பேசிடவும், அடிமை வர்க்கத்திற்கு குரல் கொடுக்கும் ஒரு உரிமைக்கு குரலாகவும் இருந்திடவும் எவ்வளவு துணிச்சல் வேண்டும். அத்தகைய துணிச்சல் கொண்ட ஒரு திமிங்கலத்தின் ஓட்டம் தாங்காமல் அந்த உயிரை தண்ணீரில் இருந்து எடுத்து நிலத்தில் வீசி எரிவதைப்போல இந்த எழுத்தாளரின் உயிரை அந்த மூன்று குண்டுகளும் பிடுங்கி வீசி அவர் வீட்டு வாசலிலேயே விட்டுச் சென்று இருக்கிறது.
இத்தகைய கொடிய மரணம் சமுகத்தில் உண்மையின் முகத்தில் உரிமையின் முகத்தில் அறையப்பட்ட ஒரு சென்னி அடி போல தான். இது பல இதயங்களுக்குள் வலியைத் தந்தது ஒரு புறம் இருக்க இத்தகைய வன்செயல்கள் உண்மையையே மட்டுமே நேரிய வழியில் எழுதிடும் பேனாக்களை சோர்வடைந்து சாய்ந்து போக செய்துவிடக் கூடுமே. அல்லது கூரிய வலிய பேனாக்கள் எழுத்துக்களின் கூர்மையை தேய்ந்து போக செய்யவும் கூடும். அச்சம் என்பது மடமையடா என்ற எழுத்தாளனின் அசையா எண்ண ஓட்டங்களில் சில சிந்தனை தடைகளைக் கொண்டு வரக் கூடும்.
இப்படிப்பட்ட வன்கொடுமைகளுக்கு கடுமையான தண்டனைகள் தந்து ஜனநாயக உரிமையை பாதுகாப்பது அரசின் கடமை. இனியேனும் இல்லாமல் போகட்டும் மரணத்துக்குள் உண்மைகளை மழுங்கடித்து மறைத்திடும் இப்படி ஒரு மடமை. ஜனநாயக சுதந்திரம் நம் உடைமை. அதனால் எழுத்தாளனின் பேனாவின் முனைச் சிறகுகள் எவருக்காகவும் எதற்குள்ளாகவும் எவரின் தாளுக்குள்ளாகவும் எவரின் அசச்சுறுத்தலுக்குள்ளும் சிறைபடாமல் சமூகத்தில் சுதந்திரமாக சிறகடித்துப் பறக்கட்டும்