அழகர்மலையில் சமணத்தின் சுவடுகள்-------கிடாரிப்பட்டி பசுமைநடை குறித்து தி ஹிந்து நாளிதழில் வெளியாகிய குறிப்பின் இணைப்பு----படித்த கட்டுரை

-
10பரங்குன்றொருவகம் பப்பாரம் பள்ளி

யருங்குன்றம் பேராந்தை யானை – இருங்குன்றம்

என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச்

சென்றெட்டுமோ பிறவித் தீங்கு.

பண்பாட்டுஆய்வாளர் தொ.பரமசிவனின் அழகர்கோயில் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது அலைபேசி ஒளிர எடுத்துப்பார்த்தால் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. இம்முறை பசுமைநடை அழகர்கோயிலுக்கு அருகிலுள்ள கிடாரிபட்டியில் என்ற செய்தியை வாசித்ததும் ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. ‘’மதிரை’’ என்ற பெயரை 2300 ஆண்டுகளுக்கு முன்னுள்ள தமிழ்பிராமிக்கல்வெட்டில் பார்க்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சியும் சேர்ந்துகொண்டது. மேலே உள்ள பாடலில் வரும் இருங்குன்றம் அழகர்மலையையே குறிக்கும். அழகர்கோயிலுக்கு திருமாலிருங்குன்றம் என்ற பெயரும் உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை(22.4.12) அதிகாலை எழுந்து பசுமைநடைக்கு நானும், சகோதரரும் கிளம்பினோம். இம்முறை விடுமுறைக்கு வந்திருந்த சகோதரியின் மகனும் எங்களுடன் பசுமைநடைக்கு வந்தான். மூவரும் கிளம்பி புதூர் சென்றோம். கிடாரிப்பட்டி செல்ல புதூர்பேருந்து நிலையத்தில் நண்பர்கள் குழுமியிருந்தனர். திருமங்கலத்தைச் சேர்ந்த நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். சூரியன் மெல்லத்தலையெடுக்க கிளம்பினோம்.

சூர்யா நகருக்கு முன் வண்டி ரிசர்வ் ஆக பெட்ரோல் நிலையத்தைத் தேடிச் சென்றால் வழியில் ஒன்றையும் காணோம். அப்பன்திருப்பதிக்கிட்ட வண்டி பஞ்சர் ஆனது. உடன் வந்துகொண்டிருந்த மற்ற நண்பர்கள் வண்டியை அங்கேயே நிறுத்தச்சொல்லி ஆளுக்கொரு வண்டியில் எங்களை ஏற்றிக்கொண்டனர்.

அழகர்கோயிலிலிருந்து ஒருமைல் தொலைவில் மேலூர் செல்லும் வழியில் கிடாரிப்பட்டி உள்ளது. சிறிய பாலம் ஒன்றை ஒட்டிச்செல்லும் பாதையில் சென்றால் குன்றை அடையலாம். அழகர்மலை சூழ இந்தக்குன்று அழகாய் அமைந்துள்ளது. மலையை நோக்கி நடந்தோம். வெயில் கூடவே வந்தது. கத்தாழை & கள்ளிச்செடி வகையறாக்கள்தான் இப்பகுதியில் அதிகம் காணப்படுகிறது. சிரமமான இடங்களில் நண்பர்கள் நின்று கைகொடுத்தனர்.



மலைமீது ஏறிப்பார்த்தால் தொலைவில் நிறைய மலைகள் தெரிந்தன. யானைமலை, மாங்குளம், அரிட்டாபட்டி மலைத்தொடர்கள் என நிறைய மலைகள் தெரிந்தன. மலையில் படிகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. வழியில் இரண்டு இடங்களில் சிறிய குகைபோன்ற பகுதிகள் காணப்படுகிறது. ஓரிடத்தில் இறங்கிச்செல்வதற்கு பழைய இரும்புப்படி ஒன்று உள்ளது. அதைப்பார்த்ததும் மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் இறுதியில் வரும் மரப்படி ஞாபகம் வந்தது. மலையேறிச்செல்வதற்கு ஆங்காங்கே படிகள் செதுக்கியிருக்கிறார்கள்.





மலையில் பெரிய குகைத்தளத்தைப் பார்த்ததும் ரொம்ப மகிழ்ச்சியாகயிருந்தது. இதுவரை சென்ற இடங்களைவிட மிகப்பெரிய இடம். இந்தக்குகைத்தளத்தினுள்ளே வற்றாத சுனையொன்று காணப்படுகிறது. குகை முகப்பில் தமிழ்பிராமிக்கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளது. குகையில் ஆதிகால மனிதர்கள் வரைந்த குகைஓவியங்களும் நிறைய காணப்படுகிறது.





எல்லோரும் அங்கு வந்ததும் இம்மலை குறித்த தகவல்களை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா பேசினார்.





சாந்தலிங்கம் அய்யாவின் உரையைக் காண்போம்.

இங்கு படுகையின் தரைப்பரப்பில் ஒன்றும், மேலே 12ம் ஆக மொத்தம் 13 கல்வெட்டுக்கள் உள்ளன. இங்குள்ள தமிழ் பிராமி கல்வெட்டுக்களின் சிறப்பம்சங்களில் ஒன்று “மதிரை” என்ற சொல்லால் மதுரை குறிக்கப்படுவதன் மூலம் மதுரையின் தொன்மை அறியக்கிடைப்பது. மதிரை பொன் கொல்லன், மதிரை உப்பு வணிகன், மதிரை பணித வணிகன், மதிரை கொழு வணிகன், மதிரை அறுவை வணிகன் (பணித சர்க்கரையையும் கொழு இரும்பையும் குறிக்கும்) என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளதன்வழி இன்றைய வர்த்தக சங்கங்கள் என வழங்கப்படும் Chamber of Commerceகளுக்கு முன்னோடியான வணிகக்குழுக்கள் (Guilds) இருந்து வந்ததை அறியலாம். இந்த வணிகர்கள்தான் இங்கு படுகைகளையும், மலையில் புருவம் போன்ற அமைப்பையும் வெட்டிக்கொடுத்துள்ளனர்.

இந்த மலை திண்டுக்கல் – நத்தம் – வெள்ளரிப்பட்டி – அரிட்டாபட்டி- மாங்குளம் என ஒரு வணிகப்பெருவழியின் தொடர்ச்சியை உணர்த்துகிறது. கடல்வழி வணிகர்கள் பௌத்தத்தை ஆதரித்ததையும் உள்நாட்டு வணிகர்கள் சமணத்தை ஆதரித்ததையும் அறிவோம்.

சமணமதம் கிமு ஆறாம் நூற்றாண்டில் மகாவீரரால் வடஇந்தியாவில் நிறுவப்பட்டது. கிமு மூன்றாம் நூற்றாண்டில் 12வருட பஞ்சம் வட இந்தியாவைப் பீடிக்கப்போகிறது என்று கணித்து தென் திசை ஏகிய சமணர்களின் ஒரு கூட்டம் சிரவணபெலகொல வழியாக மதுரையை அடைந்து மலைகள் சூழ்ந்த இந்நகரைச் சுற்றி நிலைகொண்டதாகக்கூறப்படுகிறது. கிபி பத்தாம் நூற்றாண்டுவரை இம்மலைகளில் சமணர் இருந்ததன் சுவடுகளாக தீர்த்தங்கரர் உருவமும், அச்சணந்தி செய்வித்த திருமேனி என்ற வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ளன.

இந்த அச்சணந்திதான் நின்றசீர் நெடுமாறன் வெப்புநோய் தீர்ந்து சைவத்தை தழுவிய பிறகு ஏற்பட்ட தொய்விலிருந்து சமணத்திற்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர். அச்சணந்தி தென்கோடியில் உள்ள சிதறால் உட்பட தமிழகத்தின் எல்லா சமணத்தலங்களுக்கும் சென்றுள்ளார். வியப்பூட்டும் வகையில், கழுகுமலையில் அவர்வந்ததற்கான சுவடு எதுவுமில்லை. பிற்காலச் சமணம் உருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறது. பெண்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு சித்தாமூர் உள்ளிட்டு வடபகுதியிலேயே சமணத்தின் சுவடுகளைக் காணமுடிகிறது. சமணர்கள் நீறுபூசி வேளாளர்கள் என்று சைவர்களாக மாறிவிடக் காண்கிறோம். இருந்தும் அவர்கள் வாழ்முறையில் இருட்டியபின்பு சாப்பிடுவதில்லை என்பன போன்ற சமணக்கூறுகளைக் காணலாம்.

இங்குள்ள பாறை ஓவியங்கள் சமணர் வருகைக்குமுன்பே இனக்குழுச் சமூகம் இருந்துவந்ததை புலப்படுத்துகின்றன. இன்றும் இப்பகுதியில் சிறப்புற இருந்துவரும் கள்ளர் சமூகம் போர்க்குடியினரான வானாதிராயர்களின் தொடர்ச்சியாக இருக்கலாம். வானாதிராயர்கள் பாண்டியர்களுக்கு கீழே இருந்து இந்தப்பகுதியை ஆண்டுவந்தனர். அவர்கள் கட்டியதுதான் அழகர்கோயில் கோட்டை.
சாந்தலிங்கம் அய்யாவைத்தொடர்ந்து கண்ணன் அவர்களும், ஓவியர் பாபு அவர்களும் குகை ஓவியங்களைக் குறித்து பேசினர். குகைஓவியங்கள் குறித்து தனியொரு பதிவில் காண்போம்.



சுனைக்கு சற்று மேலே தீர்த்தங்கரரின் சிறிய சிற்பம் ஒன்று காணப்படுகிறது. அதன் அருகே வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது. அதில் ‘அச்சணந்தி செய்வித்த திருமேனி’ என்றுள்ளது. அங்கிருந்து மெல்ல இறங்கினோம். வெயில் மட்டும் இறங்காமல் ஏறிக்கொண்டேயிருந்தது.

பாலைபோலிருந்த அந்த வெளியைப் பார்த்ததும் எனக்கும் சகோதரனுக்கும் கொற்றவை ஞாபகம் வந்தது. இதுபோன்ற பாலை வெளியைப் பார்க்க நெந்நாயின் கண்கள் வேண்டுமென அந்நாவலில் வரும் வரிகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். மேலும், கொற்றவையில் கோவலனும், கண்ணகியும் அழகர்மலையிலுள்ள சிலம்பாறு வருவர். ஜெயமோகனின் கொற்றவை குறித்து தனியொரு பதிவில் காண்போம்.



கிடாரிப்பட்டி கண்மாய்கரையோரம் உள்ள ஆலமரத்தடியில் படையல். இட்லியுடன் தொட்டுக்கொள்ள சாம்பாரும், இருவகைச்சட்னியும் அமிழ்தினும் இனிதாய் தோன்றியது. உணவு முடித்து அங்கிருந்து கிளம்பினோம். அப்பன் திருப்பதியில் வண்டியை அங்கு நிறுத்திச் சென்றபின் வண்டி அங்கு இருக்குமா என்ற சந்தேகம் மனதில் தோன்றிக் கொண்டேயிருந்தது. அந்த எண்ணத்தைப் பொய்யாக்கிய அந்த மனிதர்களுக்கும் நன்றி. அப்பன்திருப்பதியில் உள்ள கள்ளழகர் ஒர்க் ஷாப்பில் வண்டியை சரிசெய்து வீடு வந்தோம். பயணத்தில் ஏற்பட்ட இடையூறையும் தாண்டி இந்தப்பயணம் சிறப்பாக உதவிய பசுமைநடை நண்பர்களுக்கு நன்றி. அழகர்கோயில் செல்லும் வழியில் சர்வேயர்காலனிக்கு பிறகு பொய்கைகரைப்பட்டி தாண்டித்தான் பெட்ரோல் நிலையம் உள்ளது. சாந்தலிங்கம் அய்யா பேசியதை குறிப்பெடுத்து தொகுத்து தந்த சகோதரர்க்கு நன்றி. மேலே உள்ள பாடல் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் ‘சமணமும் தமிழும்’ நூலிலிருந்து எடுக்கப்பட்டது. அவருக்கும் நன்றிகள் பல.

.

எழுதியவர் : (7-Sep-17, 11:48 pm)
பார்வை : 94

சிறந்த கட்டுரைகள்

மேலே