தமிழர் பண்பாடு என்னும் கற்பிதம்

‘பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்'

வள்ளுவரின் வார்த்தைகளில் இருக்கக்கூடிய நாகரிகம் என்னும் வார்த்தை ‘Civilization’ அல்ல ‘Culture’ என்னும் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும்கூடப் பழைய இராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பண்பாடு என்னும் வார்த்தையோ கலாச்சாரம் என்னும் வார்த்தையோ மக்கள் பயன்பாட்டில் இல்லை. 'நாகரிகம் இல்லாமல் நடந்துகொள்கிறார்கள்' என அவர்கள் பண்பாடின்றி நடந்துகொள்பவர்களைத்தான் சொல்கிறார்கள். 1937இல் டி. கே. சி. பண்பாடு என்னும் வார்த்தையை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக, ஆங்கிலேயரின் வருகையைத் தொடர்ந்து (Cult என்னும் மூலத்தைக் கொண்ட) ‘Culture’ என்னும் ஆங்கில வார்த்தையைப் பின்பற்றி ('கலா + ஆச்சார்' = கலை / அழகியல் + ஒழுங்கு) 'கலாச்சார்' என்னும் சமஸ்கிருத உருவாக்கமும் அதைத் தமிழ்ப்படுத்துவதாக (நினைத்து) உருவாக்கிய கலாச்சாரம் என்னும் சொல்லும் தமிழ்ப் பயன்பாட்டிற்கு வந்தது. (பொதுவாக தமிழ்ப்படுத்தல் என்பது பல நேரங்களில் அப்படித்தான் நடந்துள்ளது. ‘Trigonometry’ 'திரிகோணமிதி' எனத் தமிழ்ப்படுத்தப்பட்டதும் 'முக்கோணவியல்' ஆவதற்குப் பலர் பட்டபாடுகளும் அனைவரும் அறிந்ததே. அதற்கு முன்னதாக ‘Civilization’ ‘Culture’ இரண்டிற்குமான தமிழ் வார்த்தை நாகரிகம் மட்டுமே. சால்பு / சான்றாண்மை போன்ற சொற்கள் பண்பாடு என்னும் பொருளில் ஒருபோதும் பயன்படுத்தப்பட்டதில்லை.

டி. கே. சி. பண்பாடு என்னும் வார்த்தையை ஆங்கிலத்தில் ‘Cult’இலிருந்து 'Culture' போல் 'பண்படு'விலிருந்து 'பண்பாடு' என உருவாக்கினார். இந்தப் பதஉருவாக்கத்திற்குதவியது புறநானூற்றில் உள்ள 'பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்’. நாகரிகம், பண்பாடு இரு வார்த்தைகளுக்குமான வேறுபாட்டை அவர் புறவயமானவை நாகரிகம் எனவும் அகம் சார்ந்தவை பண்பாடு என்றும் தெளிவாகப் பிரித்துக் கூறுகிறார். நாம் இப்படி எடுத்துக்கொள்ளலாம். உடுத்த வேண்டும் என்னும் உணர்வு பண்பாடு. எப்படி உடுத்துகிறோம் என்பது நாகரிகம். நாகரிகத்தின் ஆதிக்கம் பண்பாட்டின் மீதும் பண்பாட்டின் ஆதிக்கம் நாகரிகத்தின் மீதும் எப்போதும் இருந்துகொண்டேதானிருக்கும். இது தவிர்க்க முடியாதது. அகவயமான அனைத்துமே (புறத்திலிருந்து) ஐம்பொறிவழிப் பெற்ற ஐந்தறிவால் உருவாவவைதாமோ? அந்த அகவய உணர்வு புறத்தில் செல்வாக்குச் செலுத்துவதும் தவிர்க்க முடியாததுதானே?

'சிuறீtuக்ஷீமீ' என்னும் ஆங்கிலச் சொல்லைப் பெருவழக்காக மாற்றிய மேத்யூ அர்னால்டின் பண்பாட்டிற்கான விளக்கம் ஆதிக்கச் சாதி விழுமியங்களையும் பெருமத நம்பிக்கையையும் பண்பாட்டு மேலாதிக்கத்தையும் தக்கவைப்பதன்றி வேறில்லை.

'பண்பாடு என்றால் என்ன என்னும் கேள்விக்குச் சட்டென்று விடையளிக்க முடியுமென்று நினைக்கவில்லை. பதில் இதுவும் இதுவுமெனப் பல நீர் வளையங்கள்போல் விரிந்து செல்லக்கூடியது . . .' என்கிறார் மு. புஷ்பராஜன். யதார்த்தம் மு. புஷ்பராஜன் சொல்வதுபோலத்தான் உள்ளது. நூலகத்தில், இணையத்தில் தேடினால் நூற்றுக்கணக்கான வரைவிலக்கணங்கள் தென்படுகின்றன. ஆனால் எல்லா வரைவிலக்கணங்களிலும் ஏதோ ஒரு குறை இருப்பதுபோல் படுகிறது. அந்தக் குறையை நிவர்த்தி செய்ய முற்பட்டால் நீர் வளையங்கள் போல் பல விரிந்து செல்வதைத் தவிர்க்க முடியவில்லை. பண்பாட்டிற்கு வரையறை சொல்வதாக நினைத்துப் பலரும் எடுத்துக்காட்டுகளையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் / சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

மேலும் உள்ளுணர்வில் தீர்மான பாத்திரத்தை வகிக்கும் பண்பாட்டு வலிமை, புறச்சூழலைக்கொண்டு தீர்மானிக்கப்படும் அதன் நீட்சி, கூட்டு முடிவின் வலிமை, மீறுதல், தண்டனை, மீறலும் பண்பாட்டின் ஒரு பகுதியாக மாற்றப்படுதல் போன்ற விஷயங்களை முன்வைக்கும் புஷ்பராஜனின் இந்தப் பார்வை அந்தோணியா கிராம்சியின் பண்பாட்டு மேலாதிக்கத்திற்கான வரையறைக்கு மிக நெருக்கமாக வருவதுடன் யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளது.

இந்தத் தலைமுறையில் புலம் பெயர்ந்தோரும் இதுவரையிலான நம்பிக்கையின் காரணமாக மதம் / சாதியத்தைக் கைவிட முடியாதவர்களாக இருப்பதையும் சுட்டிக்காட்டி, இதை யாராலும் தடுக்க முடியாது என்னும் மு. புஷ்பராஜனின் கூற்று புலம்பெயர் தமிழர்களாக வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மட்டுமல்ல, வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்களும் சந்திக்கக்கூடிய ஒன்றுதான். சிதைவுகளுக்காக ஆதங்கப்பட்டாலும் தவிர்க்க முடியாத சூழலைப் புரிந்துகொண்டு மகிழ்வோம் என்கிறார் மு. புஷ்பராஜன். இதுவும் நல்ல பண்பாடே.

பணிநிமித்தமாக ஐரோப்பிய (காபீர்) நாடுகளுக்குச் சென்று வருபவர்கள் இஸ்லாமியக் கலாச்சாரத்தைக் கைவிடுபவர்களாக மாறும் தன்மையையும் அதேநேரத்தில் அரபு (இஸ்லாமிய) நாடுகளுக்குச் சென்று வருபவர்கள் தீவிர மத அடிப்படைவாதிகளாக மாறுவதையும் ஒருசேரப் பதிவுசெய்யும் களந்தை பீர்முகம்மது, உள்நாட்டில் வாழ்பவர்களிடையிலும்கூடச் சூழல் தீர்மானித்ததால் இஸ்லாமியக் கலாச்சாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களைப் பதிவுசெய்கிறார். மதத்தின் மீதான பற்றுறுதியின் விகிதாச்சாரமே இவற்றிற்கான காரணங்கள். மிகத் தெளிவாக மதத்திற்கும் பண்பாட்டிற்குமான நெருக்கமான தொடர்பை அவர் சுட்டிக்காட்டுகிறார். Cult என்னும் ஆங்கில வார்த் தைக்கும்கூட மதம் சார்ந்த நம்பிக்கை என்பதே பொருளாக இருக்கிறது என்பதை மீண்டும் இந்த இடத்தில் நினைவுகூர வேண்டியிருக்கிறது.

சார்ந்திருக்கும் தத்துவம் சார்ந்த மதிப்பீடுகள். மதிப்பீடுகள் உருவாக்கும் விழுமியங்கள், விழுமியங்கள் சார்ந்த நம்பிக்கைகள், நம்பிக்கையின்பாற்பட்ட உள்ளுணர்வுகள் என்ற வரிசையில் 'இறப்பில் உயிர்க்கும் பண்பாட்'டில் நகர முயன்றுள்ளார் அதியமான். ஆனால் நகர்வு பாதியில் அமர்வாகிவிட்டது. இருந்தாலும் நல்ல முயற்சி. பண்பாட்டை மிக நெருக்கமாக அணுகிய கட்டுரை அவருடையது.

குமரி மரபு, நாஞ்சில் மரபாக மாறிப்போனதாகக் கூறவரும் கட்டுரையில் 'உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது' (மத்தேயு 26:73) என்னும் விவிலியத்தின் வரிகளை முன்னொட்டாகக்கொண்டு தொடங்குகிறார் குமார செல்வா. 15 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் லயோலோ கல்லூரியின் தொடர்பு மற்றும் பண்பாட்டியல் துறையால் சு. சமுத்திரத்தின் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த பின் நவீனத்துவக் கருத்தரங்கில் மலையாளம் கலந்த தன் பேச்சுமொழியில் அற்புதமாகப் படைப்பாளராகத் தான் பரிணாமப்பட்ட வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருந்தார் குமார செல்வா. அந்தக் கருத்தரங்கில் அனைவரையும் கவனிக்கவைத்த மிகச் சிறந்த பேச்சுகளில் குமார செல்வாவினுடையதும் ஒன்று. அந்த உரையினூடே தான் பள்ளிக் கல்வி முடிக்கும்வரை பாடத்திட்டத்திற்கு வெளியே தனக்குப் படிக்கக் கிடைத்த ஒரே நூல் பைபிள் மட்டுமே எனக் குறிப்பிட்டார் அவர். இளமைக் காலந்தொட்டு தொடர்ந்த பாதிப்பின் வழிப்பட்டதாகவே இந்தக் கட்டுரையின் முன்னொட்டை என்னால் பார்க்க முடிகிறது. அது அவரது நம்பிக்கை / உள்ளுணர்வு / ஊறிப்போன அகம் சார்ந்த விஷயமன்றி வேறல்ல. பழையதொரு (புனித / பாவ) நூலின் வரிகள் அதற்கு எதிர்மறைப் பொருள் தரும் படைப்பிற்கோ கட்டுரைக்கோ முன்னொட்டாக இருக்குமாயின் அதுவும்கூட எழுத்தாளரின் அகம் சார்ந்த விஷயம்தான். இதுவும் பண்பாட்டின் அங்கம்தான் எனில் பண்பாடென்பது மொழி சார்ந்ததா? மதம் சார்ந்ததா?

வெவ்வேறு வட்டார வழக்கில் எழுதக்கூடிய பலரையும் நாஞ்சில் இலக்கியவாதிகள் என்பது தவறு. சிறு பகுதியிலேயே இத்தனை மொழி, வாழ்க்கை, பண்பாடுகள் எனில் ஒட்டு மொத்தத் தமிழகத்திற்கும் ஒரே மொழி, ஒரே வாழ்க்கை, ஒரே பண்பாடு என்பது சாத்தியமா?

18ஆம் நூற்றாண்டில் வணிகத்திற்காகத் தமிழகத்திலிருந்து மலேசியா சென்ற மலாக்கா செட்டிகள் தேசம் மறந்து, தமிழ் மறந்துபோனாலும் மதத்தையும் சாதியையும் மறந்து போகாதவர்களாயிருக்கின்றனர். இத்தமிழர்களிடமிருந்து தமிழர் பண்பாடு என நாம் எதை எடுத்துக்கொள்வது?

முன்வைக்கப்படுபவை அனைத்தும் சாதியப் பண்பாடு, மதப் பண்பாடு, வாழிடம் தந்த பண்பாடு, (உயர்ந்ததென உள்ளுவதை ஏற்கும்) மேலாதிக்கப் பண்பாடு போன்றவையே. இவற்றில் தமிழர் பண்பாட்டிற்கான இடம் எது? அல்லது தமிழர் பண்பாடு என்பதுதான் எது? எனில் தமிழர் பண்பாடு என்பது கற்பிதமாகவும் மற்ற யாவும் யதார்த்தமாகவும் இருக்கிறதா?

பண்பாடு என்பது மொழி கட்டமைக்கக்கூடியதா? முடியுமா? அல்லது மொழியும்கூடப் பண்பாடு கட்டமைப்பதா? பழ. அதியமானின் கட்டுரையும் குமார செல்வாவின் கட்டுரையும் சில இடங்களில் சை. பீர்முகம் மதுவின் கட்டுரையும் மொழியைக் கட்டமைப்பது பண்பாடே என்கின்றன. அந்தப் பண்பாடுகள் சாதி, மத, வாழிட வழி வந்ததாக இருக்கின்றன.

புலனுணர்வு வழிப்பெற்ற உள்ளுணர்வு, உள்ளுணர்வு வழிவந்த நம்பிக்கை, அந்த நம்பிக்கை நம்முள் ஏற்படுத்திய மதிப்பீடுகள், மதிப்பீடுகளின் தொகுப்பாக விழுமியங்கள், விழுமியங்களின் தாக்கம் கட்டமைத்த சிந்தனாமுறை, சிந்தனாமுறை வழி நடத்தும் செயல்பாடுகளின் தொகுப்பாகவே பண்பாடு இருக்கிறது. உள்ளுணர்வை உருவாக்குபவையாக மனிதர்களுக்குச் சாதி, மதம், இனம், வாழிடம் (வட்டாரம்) போன்ற அடையாளங்களும் ஃப்ராய்டியம், காந்தியம், மார்க்ஸியம், முதலாளியம், பாசிசம், சோசலிசம், கம்யூனிசம், மாவோவியம், ராமராஜ்யம், அம்பேத்காரியல், பெரியாரியல் போன்ற தத்துவங்களும் / சிந்தனாமுறைகளும் இருக்கின்றன. மொத்தத்தில் அடையாள அரசியலும் அரசியல் அடையாளமுமே உள்ளுணர்வை, நம்பிக்கைகளை, மதிப்பீடுகளை, விழுமியங்களை, பண்பாட்டை உருவாக்கக்கூடியவையாக இருக்கின்றன. எனில் தமிழர் பண்பாடு என்பது எது?

தமிழர்கள் ஒரே இனக்குழுவாக, ஒரே நிலப்பரப்பில், வேற்றினங்களின் அறிவு / உணர்வுத் தாக்கமின்றி, மதங்களும் சாதிகளுமற்று வாழ்ந்த முன்னொரு காலத்தில் 'தமிழர் பண்பாடு' என்பது ஒற்றைப் பண்பாடாக இருந்திருப்பது சாத்தியமே. ஆனால் இன்று சாதிப்பாகுபாடுகளே 'யார் தமிழர்?' என்பதைத் தீர்மானிக்கும் அளவு கோலாக மாறிப்போன சூழலில், அடையாளம் காணப்பட்ட தமிழ்ச் சாதிகளின் ஒருங்கிணைப்பால் உருவான ஒரு குழு / அணி / கூட்டம் எப்படி அனைத்துச் சாதி தமிழர்களுக்குமான ஒற்றைப் பண்பாட்டை முன்மொழியும்? தமிழ்க் கலை இலக்கிய, பண்பாட்டுத் தளத்தில் நிற்கும் தமிழர்களிடையே ஒரே விதமான பண்பாடு இருக்க வாய்ப்பே இல்லாத சூழ்நிலையில் உலகம் முழுவதும் பரந்து நிற்கும் தமிழர்கள் அனைவரும் 'தமிழர் பண்பாடு' என ஒற்றைப் பண்பாட்டைக் கைக்கொள்வது சாத்தியமா?

பல்வேறு தமிழ் ஆளுமைகள் வெவ் வேறு பண்பாடுகளைக் கொண்டிருப்பது தமிழகத்தில் ஒன்றும் புதிதல்ல. எனக்கு அய்யங்காளை என்னும் நண்பர் இருந்தார். சமூகப்பணியில் முதுகலைப் பட்டம் பெற்று, முதுகலைத் தத்துவமும் கற்றிருந்த அவர் ஏறக்குறைய 25 ஆண்டுக் காலமாக வீதிநாடகத் துறையில் செயல்பட்டு வந்தவர். அவர் தமிழகத்தின் எய்ட்ஸ் தடுப்பு நிறுவனத்தில் சமீபத்திய 12 ஆண்டுகளாகப் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார். எய்ட்ஸ் விழிப்புணர்விற்காகத் தமிழகம் முழுவதும் வீதிநாடகங்களைப் பயன்படுத்தும் முகமாக அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு இளைஞர்களுக்கும் வீதிநாடகப் பயிற்சி கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். எய்ட்ஸ் விழிப்புணர்வு என்னும் உள்ளடக்கம் தாண்டி வீதிநாடகத்தை எப்படி ஒரு சக்திமிக்க தொடர்பியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது என்பதில் அவருடைய கவனம் இருந்தது. அய்யங்காளை கடந்த மாதம் (2011 பிப்ரவரி) 12ஆம் நாள் சனிக்கிழமை காலை மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்னும் செய்தி நம்பச் சிரமமானதாக இருந்தாலும் உண்மை அதுதான். தன்னுடைய 20ஆம் வயதில் மாணவப் பருவத்தில் வீதிநாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கிய அய்யங்காளை 25 ஆண்டுகளுக்குப்பின் 45ஆம் வயதில் எதிர்பாராத மரணத்தைச் சந்தித்தார். மாலை அடக்கம். அவருடைய நண்பர்கள் அனைவரும் அவரது இல்லத்தில் கூடினோம். மாலையில் சென்ற எங்களை வரவேற்றது அவரது சாதியினர் அவருடைய மறைவிற்கு ஒட்டிய இரங்கல் சுவரொட்டி. அன்றுதான் தெரியும் அவர் என்ன சாதி என்பது. கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்த அய்யங்காளையைப் பார்த்துவிட்டு கனத்த மனத்துடன் இறுதி ஊர்வலத்திற்காகக் காத்திருந்தோம். அவரால் பயிற்சிபெற்ற இளைஞர்களுடன் அவருடைய அர்ப்பணிப்பையும் அன்பையும் பேசியபடி. சடலத்தை எடுத்துச் செல்ல சிலுவைக்குறியிட்ட பெட்டி வந்தது. சடலத்துடன் சிலுவைப்பெட்டி இந்துசாதிச் சங்க அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டது. சனிப்பிணம் என்பதால் கோழிக்குஞ்சு கட்டப்பட்டது. அமரர் ஊர்தி நகரத் தொடங்கியதும் தோழர்கள் 'வீதிநாடகத்திற்காக வாழ்ந்த தோழருக்கு வீரவணக்கம். வீதிநாடகக் கலைஞர்களை உருவாக்கிய தோழருக்கு வீரவணக்கம். வீதிநாடகக் கலைஞர்களை ஒருங்கிணைத்த தோழருக்கு வீரவணக்கம்' என முழக்கமிட்டு ஊர்வலத்தில் அணிவகுத்தனர். சடலம் அருகில் இருந்த கத்தோலிக்க திருச்சபைக்குத் திருப்பலிக்காக எடுத்துச் செல்லப்பட்டது. திருச்சபைக்குள் திருப்பலி நீண்டநேரம் எடுப்பதால் அய்யங்காளையின் இந்து உறவினர்கள் திருச்சபைக்குள்ளேயே தகராறு செய்யத் தொடங்கினர். திருப்பலிச் சடங்கு தவிர்க்க முடியாது எனத் திருமதி அய்யங்காளையின் உறவினர்கள் அவர்களை எதிர்கொண்டனர். தோழர்கள் என்ன செய்வதென்றறியாதிருந்தனர். வசைகளினூடே ஜெபம் முடித்து ஒருவழியாக மீண்டும் ஊர்வலம். மீண்டும் முழக்கம். கல்லறையில் ஒரு பக்கம் அவரின் சிவலோகப் பதவிக்கான இந்துச் சடங்குகள். மறுபக்கம் கர்த்தருக்குள் ஐக்கியமாக்க நியாயத் தீர்ப்பு நாளுக்கான மன்றாடல். இன்னொரு மூலையில் இதுவரையிலான அய்யங்காளையின் நினைவுகளை இழந்து சடலமான அய்யங்காளையின் பரிதாப நிலையெண்ணி தோழர்களின் இரங்கல் கூட்டம். தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறைகூட இந்துக் கோவிலுக்கோ மாதா கோவிலுக்கோ வழிபாட்டிற்காகச் சென்றிராத தோழர் அய்யங்காளையின் மரணத்திற்குப் பிந்தைய நிகழ்வுகள் அவருடைய மரணத்தைவிடத் துயரமானவை. அது அவரால் உருவாக்கப்பட்ட இளந்தோழர்களை அதிகமாகப் பாதித்தது.

இறப்பிற்குப் பின்னர் ஒருவன் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளங்களை மறுக்கின்ற / நிராகரிக்கின்ற செயல்பாடுகள் அனைத்தும் பண்பாடு என்னும் பெயரிலேயே முன்னெடுக்கப்படுகின்றன. பண்பாடாக இதில் எதைச் சொல்வது? ஒரு தமிழன் வாழ்ந்த சமூக வாழ்வையா? அல்லது சடலச் சலனங்களையா? சாதிக்காரர்களின் சுவரொட்டி தொடங்கி... தொடர்கின்ற இவற்றில் எது தமிழர் பண்பாடு?

பழம்பெருமை பேசப் பயன்படும் பதம் 'தமிழர் பண்பாடு'. கல்விப் புலத்தில் காகிதங்களை நிரப்பிப்பட்டக் காகிதங்கள் பெறப் பயன்படும் பதம் 'தமிழர் பண்பாடு'. சில அரசியல்வாதிகளுக்கோ கேட்போரை உணர்வூட்டி காரியம் சாதிக்கப் பயன்படும் பதம் 'தமிழர் பண்பாடு'. யதார்த்தத்தில் தமிழர் பண்பாடு என ஒற்றைப் பண்பாட்டை நிறுத்தினால் அது கற்பிதமே. கற்பிதமாக இருப்பதால்தான் தமிழர் பண்பாட்டிற்கான புனிதங்களும் கட்டமைக்கப்படுகின்றன. 'தமிழர் பண்பாடு' என்னும் பதமே கற்பிதம் என்னும்போது 'தமிழர் தளபதி / போர்வாள்' 'தமிழர் தலைவர் / தலைவி' 'தமிழர் தந்தை / தாய்' 'தமிழின காவலர் / கூர்க்கா' . . . என அனைத்து அடைமொழிகளையும் நாம் மறுபரிசீலனைக்குட்படுத்த வேண்டும். ஆதிக்கத்தை நிலைநாட்டிச் சுயலாபம் தேடப் பயன்படும் சொற் கட்டுகள் தமிழகத்தில் மிக அதிகம் என்பது நாம் அறிந்ததே.

'தமிழர் பண்பாடு' என்னும் பதத்தை முன்வைத்து, எந்த ஆதாயத்தையும் எதிர்நோக்காமல் உண்மையிலேயே தமிழுக்காக ஆனதைச் செய்ய முனையும் தனிநபர்கள் சிலரும் சில அமைப்புகளும் தமிழகத்தில் உண்டு. அவர்களுக்கும் தெரியும் 'தமிழர் பண்பாடு' என்னும் ஒற்றைப் பண்பாடு சாத்தியமல்ல என்பது. இருந்தாலும் சில பாசிச ஒற்றைப் பண்பாட்டு முன்னெடுப்புகளுக்கு எதிராக இவர்கள் இதை ஓர் அரசியல் செயல்பாடாக முன்னிறுத்துவதையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் புரிந்துகொள்ள வேண்டும்.

இப்படியாக இன்று தமிழ் இனம் அடையாள அரசியலுக்குள்ளும் அரசியல் அடையாளத்திற்குள்ளும் பிரிந்து கிடக்கிறது என்பது யதார்த்தமாக இருக்கும்போது 'தமிழர் பண்பாடு' என்பதுதான் என்ன? இன்று தமிழ் வெறும் மொழியாகச் சுருங்கிவிட்டது. பண்பாட்டின் ஒரு கூறாக மொழியைப் பேணுவது, காப்பது என்பது தமிழர்களின் கடமையாக இருக்கிறது. இந்தச் செயல்பாட்டில் தன்னைத் தமிழர் என உணரும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அப்படி இருந்தால் அவர்கள் தங்களைத் தமிழர்களாக உணரவில்லை என்ற முடிவிற்கும் வர முடியும். சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் தமிழர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வதும் கொலைகாரர்களாக மாறுவதும் தமிழர் பண்பாடாக இருக்க முடியாது. எனில் அப்படியான செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். எனில் சாதி மத உணர்வுகளிலிருந்து / வெறியிலிருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும். எனில் தமிழர்கள் என அடையாளம் காண்பதற்காக, தற்போது இருந்துவரும் சாதிய வரையறுப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

2006 மே மாத எழுகதிர் இதழில் 'அருகோ'வின் விடைகள் பகுதியில்,

வினா: டிடிஎச் விவகாரத்தில் டாட்டாவையே மிரட்டும் அளவுக்கு சன்-டிவி குழுமம் உயர்ந்துவிட்டது; டாட்டாவை மிரட்டியதற்காக தயாநிதி மாறனை நடுவணமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பது சரியா?

விடை: முன்பு “அமிர்தாஞ்சன் குழும நிலத்தைப் பிடுங்குமளவுக்கு சசிகலா (ஜெயலலிதா) குடும்பம் உயர்ந்துவிட்டது அவரைத் தண்டிக்க வேண்டும்” என்று கூச்சல் வந்தபோது நாம் சொன்ன விடை “தமிழ்க் குடும்பங்கள் தலையெடுப்பதை வரவேற்கிறோம். ஆனால் அவர்கள் தமிழுணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்” என்று. அதையேதான் இப்போதும் சொல்கிறோம். டாட்டாவையே மிரட்டும் அளவுக்கு ஒரு தமிழ்நாட்டுக் குழுமம் வளர்ச்சி கண்டிருப்பதை வரவேற்கிறோம்; ஆனால் அது பெயரில்கூடத் தமிழைத் தாங்கவில்லையே என்பது வருத்தமளிக்கிறது. காருள்ள அளவும் கடல் நீருள்ள அளவும் இந்தியாவை டாட்டா, பிர்லா, டால்மியாக்கள்தான் மேய வேண்டுமா? அந்த இந்திய தேசிய முதலாளியத்தை, தமிழ்த் தேசிய முதலாளியம் வென்றால் மகிழ்ச்சியே!

இந்த 'வினா-விடை' ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இப்படி உணர்ச்சி வசப்படும் குணம் / உணர்ச்சிவசப்படுத்தும் பண்பு முதலில் தமிழர்களிடமிருந்து மாறவேண்டும். சரி, தவறுகளுக்கிடையிலான போராட்டம்தான் ஜனநாயக வடிவமாக மலரும். ஜனநாயகமற்ற ஒரு பண்பு பண்பாட்டின் வகைப்பட்டதாக இருக்க முடியுமா? இன்னும் இப்படி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். அப்படியான பண்புகளுடன் தாம் முன்பு தமிழர்கள் இருந்தனர் என்பதற்கான சான்றுகள் பழம் பாடல்களில் உள்ளன. பழம் பாடல்கள் காட்டாத நற் பண்புகளுடனும் / பண்பாட்டுடனும் கூடத் தமிழர்கள் முன்பு வாழ்ந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்; இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு, பகைவர்கள் பல லட்சம் தமிழர்களைக் கொலைசெய்தபோதும்கூட அதைத் தடுப்பதற்காக ஒன்றிணைந்தோமா? மனிதகுலத்திற்கு எதிராக எங்கு எது நடந்தாலும், அதற்கெதிராகக் குரல் கொடுப்பவர்களாகத் தமிழர்கள் இருக்க வேண்டும். அப்படி ஒரு பண்பாட்டுடனிருக்கையில் நாம் பெருமை பேசலாம் தமிழர் பண்பாடென்று. ஆனால் தமிழர்கள் தமிழர்களைச் சாதி, மத, வட்டார பேதங்களால் ஒடுக்குவதும் கொலை செய்வதுமாகத் தொடரும் சூழ்நிலையில் ஒடுக்குபவருக்கும் ஒடுக்கப்படுபவருக்கும் / கொலை செய்யப்படுபவருக்கும் கொலை செய்பவருக்குமான ஒற்றைப் பண்பாடு 'தமிழர் பண்பாடு' என்னும் பெயரில் சாத்தியமா? சரியா? யதார்த்தமா? கற்பிதமா?

சர்வதேச அளவில் புரட்சியாளர்களின் இலச்சினையாக இன்றுவரை நிற்கும் எர்னஸ்டோ சேகு வேரா புரட்சி பற்றிப் பேசும்போது 'உண்மையில் புரட்சி என்பது அன்பு எனும் பேருணர்வால் கட்டப்படுவது' என்கிறார். புரட்சியே அன்பெனும் பேருணர்வால் கட்டப்படுவதெனில் 'பண்பாடு'?

அன்பின் வழியது உலகம்.

அன்பின் வழிபட்டதான பண்பாடே தமிழர் பண்பாடாக முன்னெடுக்கப்பட வேண்டும். அப்படி இல்லாமல் அடையாள அரசியலும் அரசியல் அடையாளமும் உள்ளுணர்த்துபவையே பண்பாடென முன்னெடுக்கப்படும் சூழலில் தமிழர் பண்பாடு என்பது ஒற்றைப் பண்பாடாக இருக்க வாய்ப்பில்லை. அது பல்வேறு பண்பாடுகளின் தொகுப்பாக இருக்கும். அப்படிக் கூட்டுப் பண்பாடாக ஒரு பண்பாடு ஓர் இனத்திற்கான பண்பாடாக இருக்க முடியுமா? இருக்க முடியாது எனில் 'தமிழர் பண்பாடு' கற்பிதமே. இருக்க முடியும் என்றாலும் 'ஒற்றைப் பண்பாடா'க முன்னிறுத்த நினைக்கும் 'தமிழர் பண்பாடு' கற்பிதமே. யதார்த்தம் வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறது.

எழுதியவர் : (8-Sep-17, 12:33 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 1768

சிறந்த கட்டுரைகள்

மேலே