காதலெனும் சாம்பல்பறவை
காதலெனும் சாம்பல்பறவை
காதலை
கைவிடுவதாகச்சொல்லி
பிரிய நேர்ந்தது
அந்த இறுதி சந்திப்பில்...
இதயத்துடிப்பின்
இறுதி வேகத்தை
தொட்டுத்துடிக்கும்
முட்களாய் இருவரும்
விடைபெறும் வேளையில்
வினாக்களாய் நின்றோம்...
உதிர்ந்த வார்த்தைகளில்
உடல் முழுதும்
உறைந்த குறுதியாய்
அவஸ்தைகள்
அந்த
இறுதிச்சொற்களை பரஸ்பரம்
விஷமென
விழுங்க நேர்கையில்
நிகழ்ந்தன
உள் நிகழும் மரணத்தை
உயிரோடு அவதானித்த தருணங்கள்
கண்களை கடைசியாக
பார்த்த நொடிகளில்
நிகழ்ந்தது
ஒரு ஜென்ம பார்வைகளின்
ஒட்டு மொத்த தீண்டல்கள்...
பார்வைகள் பறிபோனதாய்
உணர்த்திக் கடந்தன
மறு கணங்கள்
எந்த வன்தீண்டலுமற்று
மலரொன்றிலிருந்து
அதன் வாசத்தைப் பறித்த வார்த்தைகளின் பரிமாற்றத்தில்
பிரதியாய் மட்டும்
எஞ்சிப் போனது வாழ்க்கை.
அந்த
இறுதிக் கணத்தில்
சிறகொன்றும் பறிக்கப்படாமல்
செங்குத்தாய் நிலம் வீழ்ந்து
மரணிக்கும் பறவையென
வீழ்ந்து மரித்தது
நம் காதல்...
எனினும்
சாம்பலில் உயிர்த்தெழும்
பறவையாய்
சாகாமல் சிறகசைக்கிறது நினைவுகளில்
காதலெனும் சாம்பல் பறவை.
நிலாரவி.