அகல் விளக்கு புதினம்--------

அகல் விளக்கு என்பது மு. வரதராசன் அவர்கள் இயற்றிய புதினமாகும். இரு நண்பர்களின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளின் மூலம் சமுதாய சிந்தனைகளை கூறியுள்ளார்.

சந்திரனும் வேலய்யனும் இளமை நண்பர்கள். இருவரும் இளமையில் ஒரே வகுப்பில் பயின்று, ஒன்றாகவே விளையாடி, ஒன்றாகவே வளர்ந்தவர்கள். ஆனால், பத்தாவது வகுப்புக்குப் பின்னர், அவர்கள் வாழ்வில் பிரிவு ஏற்பட்டது. பிரிவு விரிந்து பரந்து ஒருவரை ஒருவர் எட்டாத அளவிற்குக் கொண்டு சேர்த்துவிட்டது.

சந்திரனுடைய வாழ்வு மேடு பள்ளம் நிறைந்தது. வேலய்யனுடைய வாழ்வு சமவெளியில் அமைதியாகச் செல்லும் பெரிய ஆற்றை ஒத்தது.

சந்திரனுடைய வாழ்க்கை அரளிச் செடியைப் போல், ஒருபுறம் கண்ணைக் கவரும் அழகும் நறுமணமும் உடைய மலர்களைக் கொண்டு, மற்றொருபுறம் அவற்றிற்கு மாறான இயல்புள்ள இலைகளைக் கொண்டிருப்பது. வேலய்யனுடைய வாழ்க்கை துளசிச் செடியைப் போன்றது. துளசிச் செடியில் அழகிய மலர்கள் இல்லை, வெறுக்கத்தக்க பகுதியும் இல்லை. மலரும், இலையும், தண்டும், வேரும் எல்லாம் ஒத்த ஒரே வகையான மணம் கமழ்வது அது.

சந்திரனைப் போல் நல்ல அழகும், கூரிய அறிவும் பெற்று அதனால் செருக்கடைந்து சீரழிந்து தாமும் கெட்டுப் பிறர்க்கும் சுமையாக வாழ்வதைவிட வேலய்யனைப் போல் அறிவு குறைவாக இருந்தாலும் சிறந்த பண்புகளைப் பெற்று அடக்கமான வாழ்வு வாழ்ந்தாலே போதும் என்ற உயர்ந்த வாழ்க்கைக் குறிக்கோள் இக் கதையைப் படிக்கின்றவர்கள் உள்ளத்தில் உருவாகும்.

"ஒரு குடும்பத்தின் தலைவியாக, பல மக்களுக்குத் தாயாக விளங்க வேண்டிய கட்டான உடம்பும், ஈரமான நெஞ்சும் படைத்த ஊழ் அந்த அம்மையார்க்குத் தனிமைத் துன்பத்தையே வாழ்வின் பரிசாக அளித்து விட்டது" என்ற வரிகளைப் படிக்கும்போது துக்கம் நம் நெஞ்சை அடைக்கிறது; வாய்விட்டுக் கதறி அழவேண்டும் என்ற உணர்வு மேலிடுகிறது.

அத்தகைய துக்கத்தைப் பெற்ற பாக்கிய அம்மையார் தம் துன்பங்களை எல்லாம் மறந்து ஆற்றியிருந்து திருக்குறளையும், திரு.வி.க. போன்ற பெரியார்களின் நூல்களையும் படித்துப் பயன்பெற்று ஒளிவிளக்காய்த் திகழ்கிறார். அந்த விளக்கின் ஒளிபட்ட கற்பகமும் கயற்கண்ணியும் மணிமேகலையும் நற்பண்புகள் பல பெற்று வாழ்க்கைச் சிக்கலில் உழலாமல் உயர்கின்றார்கள்.

அறிவொளியை அளிக்கும் கல்வியைப் பயின்றும் மூட நம்பிக்கைகள் பலவற்றை வளர்த்துக் கொண்ட மாலன் குறுக்கெழுத்துப் போட்டியிலும், குதிரைப் பந்தயங்களிலும் பணத்தை இழந்து மனம் ஏங்குகிறான். உழைப்பு இல்லாமலும் எளிதாகவும் செல்வத்தைச் சேர்க்க மனம் எண்ணுகிறது. செம்பைப் பொன்னாக்கும் ரசவாத வித்தை காட்டும் சாமியார்களின் பின் சென்று அலைகிறான். அவன் வாழ்வில் இரக்கம் கொண்ட வேலய்யன் "எனக்கு உழைப்பில் நம்பிக்கை உண்டு, அறத்தில் நம்பிக்கை உண்டு" என்று கூறி மாலனுடைய தவறான நம்பிக்கைகளைப் போக்கும் முயற்சி பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.

"என்ன உலகம் இது? பெண்கள் இருவர் பழகினால், உடம்பைக் கடந்து உள்ளத்தின் உறவு கொண்டு பழகவில்லையா? ... ஆண்கள் இருவர் பழகும்போது அப்படி உள்ளத்தால் பழகவில்லையா? ஓர் ஆணும் பெண்ணும் பழகும் போது மட்டும் உள்ளம் இல்லையா? ஏன் இந்தத் தடுமாற்றம், ஏமாற்றம் எல்லாம்?" .... இமாவதியின் ஆழ்ந்த உள்ளத்திலிருந்து எழுந்த இந்தக் கேள்வியை ஒவ்வோர் ஆணும் பெண்ணும் எண்ணி எண்ணி விடை காண முடியுமானால், சமுதாயம் பண்பாடு மிக்கதாய் எளிதில் முன்னேற்றம் எய்தலாம்.

சீரழிந்த சந்திரன் தொழுநோயின் பிணிப்பிலேயே உழன்று வருந்திக் கடைசியாக உணர்வுபெற்று உண்மைகளையெல்லாம் வெளியிட்டு ஆத்திரத்துடன் பேசும் பேச்சுகள் உள்ளத்தை உருக்குகின்றன.

"நீ மண் அகலாக இருந்த காலத்தில் நான் பித்தளை அகலாக இருந்தேன். சிறிது காலம் பளபள என்று மின்னினேன். என் அழகையும், அறிவையும் அப்போது எல்லாரும் விரும்பினார்கள், பாராட்டினார்கள், என்ன பயன்? வர வர எண்ணெயும் கெட்டது, திரியும் கெட்டது, சிட்டமும் பிடித்தது. ஒளி மங்கியது, மங்கிவிட்டேன், நீதான் நேராகச் சுடர்விட்டு, அமைதியாக எரியும் ஒளிவிளக்கு" என்று வேலய்யனிடம் சந்திரன் கூறும் கருத்துகள் கதையின் கருப்பொருளாக அமைகின்றன.

சமுதாய கருத்துக்கள்[மூலத்தைத் தொகு]எளிமையான முறையில் பல்வேறான சமுதாய கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது இந்நூல்:

1.தன் அழகினால் அறிவிழந்து போகும் சந்திரன் பல தவறான வழிகளில் பயணிப்பது இளைஞர்களுக்கு சரியான பாடம்.
2.தொடர்ந்து உழைத்தால் வாழ்வில் முன்னேறலாம் என்பது வேலய்யனின் பாத்திரம் உரைப்பது.
3.இன்னொரு பாத்திரம் மூட நம்பிக்கைகள் கொண்டு தன் கல்வியும் செல்வமும் இழப்பது மூட நம்பிக்கைகளுக்கு மு.வ.வின் சவுக்கடி என்றே கூறலாம்.
விருது[மூலத்தைத் தொகு]மு.வ.வின் அகல்விளக்கு எனும் இந்நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. இவரது அகல் விளக்குடன் பல நூல்கள், ஆங்கிலம், இந்தி, மராத்தி, ரஷ்ய மொழி, சிங்கள மொழி, தெலுங்கு மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன

எழுதியவர் : (27-Sep-17, 9:16 am)
பார்வை : 1297

சிறந்த கட்டுரைகள்

மேலே