காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது

கோட்சே காந்தியை நோக்கி மூன்று முறைகள் சுட்டான்
அத்துடன் அது முடியவில்லை
அந்தத் துப்பாக்கிச் சத்தம் இன்னும் ஓயவில்லை.
உலகில் எண்ணற்றோர் அவரைச் சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

அரசே மதுக் கடைகளைத் திறந்தபோது
காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

போடாத சாலையைப் போட்டதாய்
அந்தச் சாலையைப் பழுது பார்த்ததாய்
விஞ்ஞான முறையில் ஊழல் புரிந்தபோது
காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

நேரில் வாங்கினால்
லஞ்ச ஒழிப்புத் துறை பொறிவைத்துப் பிடிக்கிறது என்று
தெரிந்தவர் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தச் சொல்லும்
புதிய லஞ்சம் புறப்பட்டபோது
காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

பிரி கே.ஜி. தொடங்கி ஐ.ஐ.எம். வரை
லட்சங்களில் நன்கொடையும் கல்விக் கட்டணங்களும்
வசூலித்தபோது
காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

விளைநிலங்களை விற்றுவிட்டு,
வெளிநாட்டில் தட்டுக் கழுவும்போது,
விவசாயி தற்கொலை செய்துகொள்ளும்போது
காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

என் ஆசிரமத்தில்
உழைக்காமல் யாருக்கும் உணவு கிடையாது
என உரைத்தீர்கள்.
இலவசங்களுக்காக எங்கள் மக்கள் விழுந்தடித்து ஓடிவந்து
நெரிசலில் சிக்கி மாண்டபோது,
பிதாவே, உமது மார்பில் குண்டு பாய்ந்தது.

ஒவ்வோர் ஊழலிலும் கையாடலிலும் கையூட்டிலும்
காந்தியின் மார்பில் குண்டு பாய்கிறது.

ஆளுக்கு ஆள், ஊருக்கு ஊர், நேரத்துக்கு நேரம்
சட்டம் வளைகிறது.
செங்கோல் வளைகிறது
நீதி வளைகிறது.
காந்தியின் மார்பில் குண்டு பாய்கிறது.

ஜாலியன் வாலாபாக்கில் பாய்ந்த குண்டுகளை விட அதிகமான குண்டுகள்
காந்தியின் ஒற்றை மார்பைத் துளைக்கின்றன.

இரண்டாம் உலகப் போரில் வீசிய குண்டுகளை விட அதிகமான குண்டுகள்
காந்தியின் பொன்னுடலை மீண்டும் மீண்டும் சிதைக்கின்றன.

எழுதியவர் : (27-Sep-17, 11:13 am)
பார்வை : 4754

மேலே