அவள் ஒரு அழகிய கவிதை தொடர் -1
வழக்கம் போல் இந்த காலை
அழகாகத்தான் விடிகிறது !
சந்திரனை போ என்று வழி அனுப்பி
வைத்து விட்டு !
ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து
உன்னை ரசிக்க தொடங்குகிறான்
காலை கதிரவன் !
நீ சோம்பல் முறித்து எழும் தருணத்தில்தான்
அன்றைய பொழுதின் முதல் கவிதை ஒன்றை
எழுதி விடுகிறேன் !
புதிதாய் காலை புலர்வதும்
புதிதாய் ரோஜா மலர்வதும்
புதிதாய் கவிதை ஒன்றை எழுதுவதும்
புதுமையாகத்தான் தோன்றும் எனக்கு
நீ இமை திறந்து உறக்கம் விழிப்பது
அப்படித்தான் எனக்கும் !
ஒரு குடம் தண்ணீர் தான் ! உன் தேகம் நனைத்து
மோகத்தில் திளைத்து ! புனித நீராய் மாறிவிட்ட மமதையில்
கங்கை சென்று கலக்க வேண்டும் என அங்கும் இங்குமாய்
ஓடி திரியும் !
சுடிதாரா ! சேலையா ! ஆடைகளுக்குள் யார் சண்டை மூட்டி
விடுவார்களோ ! உன்னிடம் ஒட்டி உறவாடி அன்றைய பொழுதை
கழிக்க வேண்டும் என ஆவலில் சண்டையிட்டு கொள்வதை நீ
கவனித்து இருக்க மாட்டாய்தான் !
காரிருள் கூந்தல் வசம் ! வாசம் செய்ய மல்லிகைகளுக்கு
வாழ்வளிக்கும் வசதிபடைத்த மனம் கொண்டவள்தான் நீ
என்று எனக்கு மட்டும் தானே தெரியும் !
இன்னும் சற்று நேரத்திற்கெல்லாம் இருசக்கர வாகனத்தில்
வரும் தேவதை தரிசனத்திற்காக !
விழி இரண்டும் வழி நோக்க ஆரம்பித்து விட்டது !
அந்த காத்திருப்பின் மணித்துளிகள் மனதிற்குள்
ஆயிரம் பட்டாம்பூச்சிகளை பறக்க செய்து கொண்டே
இருக்கிறது !

