மனசு வசமாக்கிய வட்டத்துக்குள் சதுரம்

படங்கள் பார்ப்பதில் எனக்கு எப்போதும் விருப்பம் உண்டு. தற்போது அது மலையாளப் படங்களில் மையம் கொண்டுள்ளது. தமிழ்ப் படங்களை விட மலையாளப் படங்கள் மீதான விருப்பத்திற்கு காரணம் கதையோடு பயணிக்க முடியும் என்பதுதான். பழைய தமிழ்ப் படங்களை எப்போதேனும் விருப்பத்தின் பேரில் பார்ப்பதுண்டு. இரண்டு நாள் முன்னர் ஒரு நண்பர் 'வட்டத்துக்குள் சதுரம்' படம் நேற்றுப் பார்த்தேன்... என்ன ஒரு அருமையான படம் தெரியுமா..? கடைசிக் காட்சிகளில் கண்ணீர் விட்டு அழுதேன் என்றார்... அவர் மனது இளகிய மனசு போலும்... நானும் சில படங்களைப் பார்க்கும் போது அழுதிருக்கிறேன்... அழுத கதையா முக்கியம்... அவர் சொன்ன வட்டத்துக்குள் சதுரத்தை பார்த்தேனா இல்லையா என்பதுதானே முக்கியம்.

பேரைக் கேட்டாலே நாமெல்லாம் பிறக்கும் முன்னர் வந்திருக்குமோ என்று நினைத்தால் நான் பிறந்த வருடத்திற்குப் பிறகுதான் வந்திருக்கிறது. கருப்பு வெள்ளைப் படம்... பஞ்சு அருணாசலத்தின் கதை வசனத்தில் முத்துராமன் இயக்கியது... இசைஞானியின் இசையில் லதா, சுமித்ரா, ஸ்ரீகாந்த், சரத்பாபு நடித்தது... 'இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்...' என்ற பாடல் ராஜாவின் முத்திரைகளில் ஒன்று.... அவர் சொன்னதற்காக படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். இரண்டு சின்னக் குழந்தைகளின் நட்பில் விரிகிறது கதை.

கமலஹாசனின் நட்புச் சொல்லும் படங்களையும் ரஜினிகாந்தின் நட்புச் சொல்லும் படங்களையும் நிறையப் பாத்திருக்கிறோம்... ஏன் இணைந்த கைகள் சொன்ன நட்பையும் பார்த்திருக்கிறோம். இதுவும் நட்புச் சொல்லும் கதைதான். நட்பு என்பது எத்தனை ஆத்மார்த்தமானது. என் நண்பனுக்காக... என் தோழிக்காக... இதை நான் செய்தேன் என்று சொல்வதில் எத்தனை இறுமாப்பு இருக்கும். அப்படியான நட்பு அமைவது சிறப்பு... அது எல்லா நட்பிலும் கிடைத்துவிடுவதில்லை. அந்த மாதிரியான நட்புக்குள் பிணக்குகள் வரும் போது அது பூத்துக்... காய்த்துக்... கனியாகும் வரை நீடிப்பதில்லை... மொட்டாய் இருக்கும் போதே காய்ந்து நட்பு என்னும் கிளை மீண்டும் அழகாய் விரிய ஆரம்பிக்கும்.

சொத்துக்காகவும் பதவிக்காகவும் தோழியைச் துவம்சம் செய்த நட்பைப் பார்த்தோம்... அதன் பலனை அவர் அறுபடை செய்ய ஆரம்பித்தாலும் அதன் பின்னான அரசியல் எத்தனை கேவலாமாய்ப் பயணிக்கிறது என்பதை தமிழகம் தற்போது அனுபவித்து வருகிறது. எதிரிக்கும் இப்படியான ஒரு அரசு அமைந்து விடக்கூடாது. ஆம் தண்ணி தர மறுக்கும் கர்நாடாவுக்கோ... பரம்பரை எதிரியான பாகிஸ்தானுக்கோ.... இங்க ஒண்ணு சொல்லணும்.... இங்கு பாகிஸ்தானிகள் நம்மோடு நல்ல நட்பில் இருக்கிறார்கள்.... தமிழனா என மலையாளியும் வடநாட்டானும் பார்ப்பதைப் போல் கூட இவர்கள் பார்ப்பதில்லை... நல்லாயிருக்கியா என அவர்கள் கேட்பதில் நேசமும் கலந்திருக்கும். என்ன சொல்ல வந்தேன்... ஆங்... கர்நாடகாவுக்கோ பாகிஸ்தானுக்கோ நம் தமிழக அரசு போல் ஒன்று அமைந்து விடக்கூடாது. நம்மைப் போல் அவர்களால் தர்மயுத்தம் செய்வதெல்லாம் கடினம்... ஆனால் பாகிஸ்தானி துப்பாக்கி தூக்கிருவான்... அதை நாம் தூக்காததால்தான் இட்லி தின்ன கதையையே மாடுலேசன் மாத்தி மாத்திச் சொல்றானுங்க... நாமளும் கேட்டுக்கிட்டு இருக்கோம் வாங்கின இருநூறுக்கு வஞ்சகமில்லாமல்...

சின்னக் குழந்தைகளின் நட்பில் ஒருத்திக்கோ ஒருவேளை கூட நல்ல சாப்பாடு சாப்பிட முடியாத நிலை... ஆனால் படிப்பில் அவள் கெட்டி... பள்ளியில் முதல் மாணவி... வசதியில்லை என்றாலும் வானம் தொட்ட அனிதா போல் அவள்... ஆம் அனிதா வானம்தானே தொட்டுவிட்டாள்... அவளையும் வைத்து அரசியல் பண்ணுகிறார்களே என்ன மனிதர்கள் இவர்கள்... சுயமாய் சிந்திக்க இயலாத மனமுடவர்கள்... முடவர்கள் என்ற பதத்துக்கு மன்னிக்க. மற்றொருத்தியோ பணம், சாப்பாட்டுக்கு குறைவில்லாத குடும்பத்தவள்... அவளின் குறையோ படிப்பும் அப்பா யார் என்று தெரியாத நிலையும்தான். அப்பா பேர் தெரியாததால்... அம்மா நேரம் வரும் போது சொல்கிறேன் என்று எல்லாத் தாயையும் போல் சொல்வதால்... அவளின் அம்மாவுக்கு கேடுகெட்டவள் என்ற பட்டப் பெயரும்... இவளுக்கு கேடு கெட்டவளின் மகள் என்ற பட்டப்பெயரும் கிடைக்கிறது. இப்படியான பெயர்கள் வைப்பது ஆண்டாண்டு காலமாய் நம்மில் தொடர்வதுதானே... அதனால் அவளுடன் பழகக் கூடாதென கெட்டிக்காரியின் அண்ணனும் அம்மாவும் குட்டிக்கர்ணம் அடிக்கிறார்கள் ஆனால் இந்த நட்பு துரோகம் அறியாதது என்பதால் குட்டிக்கர்ணத்தை குப்புறப்போட்டு தொடர்ந்து பயணிக்கிறது.

வாலிபம் வந்த பின்னும் அடக்குமுறையினால் அன்பில் பிரிவு என்ற ஒன்று வரவில்லை.. அதற்குப் பதிலாக இன்னும் இறுக்கம் ஏற்படுகிறது. அப்பன் பெயர் தெரியாதவளுக்கு காதல் வரக்கூடாதா என்ன... அவளுக்குள்ளும் காதல் பூக்கிறது... இன்றைய படங்களில் ரவுடி மீது படித்த, பணக்காரப் பெண்ணுக்குப் பூப்பது போல தன் தோழியின் அண்ணனும் தன்னை கண்டாலே 'கழுதை' என்று சொல்லிக் கடிந்து கொள்ளுபவனும் விலகிச் செல்பவனும் மூணு வேலை சோறு எப்போது கிடைக்குமென ஏங்கித் தவிப்பவனுமான ஸ்ரீகாந்த் மீது... கரும்புக் காட்டுக்கு வாடா உன்னுடன் கதைக்க வேண்டுமென கடுதாசி கொடுத்துவிட்டு இரவில் கரும்புக் காட்டில் 'காதல் என்னும் காவியம்... கன்னி நெஞ்சின் ஓவியம்...' என பாடிக் கொண்டிருக்கிறாள் அவனின் வரவுக்காக... அங்கு ஊரோடு வருகிறாள் அவனின் அம்மா... அடித்துத் துவைத்துச் செல்ல, தான் கற்பிழந்த கதையை முன்னரே மகளிடம் சொல்லிவிட்ட அம்மாவோ மகளின் நிலை காணப் பொறுக்காது மரிக்கிறாள். கெட்டிக்காரியின் அண்ணனோ மூணு வேலை சாப்பிடும் ஆசையில் தன்னுடன் வேலை செய்யும் குடிகாரனுக்கு தங்கையைக் கட்டிக் கொடுக்க நினைக்கிறான். அவளின் படிப்பை அதற்காக காவு வாங்க நினைக்கிறான்... இதன் பின்னர் தோழிகள் சந்திப்பில் உன்னை நான் படிக்க வைக்கிறேன்டி... உனக்காகத்தான் இனி நான் உயிர் வாழப்போறேன் என்ற வரிகள் அவர்களை சென்னை நோக்கி இரயில் ஏற வைக்கிறது.

சென்னையில் நடிகையாக இருக்கும் சித்தி உதவுவார் என்ற நினைப்போடு பயணிக்க... அங்கோ சித்தி தன் வாழ்க்கைக்கே கஷ்டப்படுகிறாள். சினிமா உலகம் இப்படியானதுதான் என்று அவர் ஒரு வரியில் சொல்லிவிட, தோழிக்காக ஹோட்டலில் டான்ஸ் ஆட ஒப்பந்தம் செய்கிறாள்... அத்துடன் அவளின் கற்பும் ஒப்பந்தம் இன்றி அரசியல் செல்வாக்கால் ஆறுகளில் மண்ணள்ளுவது போல் ஹோட்டல் முதலாளிகளாலும் பெரும் தலைகளாலும் எடுத்துக் கொள்ளப்படுகிறது... எல்லாம் தோழிக்காக எனப் பொறுத்துக் கொண்டு பெங்களூரில் இருந்து கொண்டு தோழிக்குத் தெரியாது அவளைச் சென்னையில் படிக்க வைத்து வருகிறாள். தன் உலகமே தோழிதான் என அவளுக்காகவே வாழ்கிறாள். அவளுக்கு நாளை நல்ல வாழ்க்கை அமைந்து செல்லும் போது அவளின் கணவன் உன்னை அவளுடன் தங்க அனுமதிக்கவில்லை என்றால் என்ன செய்வாய்... உனக்காகவும் வாழக் கற்றுக் கொள் என்ற போதனைகளை எல்லாம் கொல்லுகிறாள்... அவளின் மனசுக்குள் முழுவதுமாய் தோழிதான்... அவள் அவளின் தாயாய் மாறி நிற்கிறாள். அப்படி ஆக்கிரமித்ததால்தான் உறவுகளை எல்லாம் உதறிவிட்டு இட்லி தின்றாரா... இல்லையா... என்று நீதிமன்றத்தில் வழக்காட விட்டுவிட்டு மெரினாவில் தூங்குகிறாள் ஒரு தோழி... தர்மயுத்தம் என அவள் தலையில் அடித்து தூங்கவும் விடமாட்டேன் என்கிறார்கள்.., பரபரப்புச் செய்தியை பற்ற வைத்துச் சென்றவள் அவள்... இவளோ பாசத்துக்காக பரத்தை ஆனவள்.

தோழிக்காக நான் என்பவளை விடுத்து அந்தத் தோழிக்கென ஒருவன் வந்து உட்கார்கிறான். அவனுடனான பழக்கம் பீச்சுக்குப் போக வைக்க, அண்ணனையும் பார்க்க நேர்கிறது காதலனின் டிரைவராக... அண்ணன் மற்றும் காதலனின் பேச்சுக்குள் இவளுக்காக தன்னையே அழித்துக் கொண்டிருப்பவளை முற்றிலும் துறந்து வர வேண்டும் என்பதே பிரதானமாய் இருக்கிறது. அது தொடரும் பட்சத்தில் திருமணம் கேள்விக்குறி ஆகும் என்பது முடிவாக, இவள் மறுக்க... இறுதியில் அவள் நடத்தை கெட்டவள் என்பதை இவளையே அவளுக்குத் தெரியாமல் அவள் இல்லம் சென்று பார்த்து வரச் சொல்கிறார்கள்... போகிறாள்.. பார்க்கிறாள்... அவளின் படுக்கை அறைச் சிரிப்புக்களையும் கேட்கிறாள்... அத்துடன் உறவை அத்துக் கொண்டு வருகிறாள் நீ இப்படி சம்பாதித்து நான் படித்த படிப்பை இனித் தொடர மாட்டேன் என்ற வைராக்கிய சபதத்துடன்... யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டோமோ அவளுக்குத் தெரிந்து, எதற்காக இதைச் செய்தோமோ அதை செய்ய மாட்டேன் என்று சொல்லியதை நினைத்து அவளின் மனசுக்குள் அனல் மூட்ட, காய்ச்சலில் விழுந்தவளைக் காண வருகிறாள் சித்தி... அதே நேரம் தோழியின் அண்ணனும் வருகிறான்.


('இதோ இதோ என் நெஞ்சிலே...' கேட்டு ரசிக்கலாமே..!)

தோழிக்காக தன்னையே இழந்தவள் அந்தத் தோழியுடனான உறவைத் திரும்பப் பெற்றாளா..?

கேடு கெட்ட காசில் ஒரு படிப்பா... அதைத் தூக்கி எறிகிறேன் பார் என்றவள் படிப்பைத் துறந்தாளா..?

அவள் இல்லை என்றால்தான் நான் உனக்கு என்ற காதலன் அதில் உடும்பாய் நின்றானா..?

கரும்புக் காட்டில் அடி வாங்க வைத்தவன் இறுதியிலாவது 'காதல் என்னும் காவியம்' வாசித்தானா..?

தோழிக்கு அம்மாவாய் இருந்தவள் அவளின் வாழ்வுக்காக என்ன செய்தாள்..?

இப்படியான அடுக்கிச் செல்லும் கேள்விகளுக்கு இறுதிக்காட்சிகள் விடையாய் நிற்கின்றன.

விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம்... அருமையான படம்... நட்பின் ஆழத்தை அவ்வளவு அழகாகச் சொல்லும் படம்.

நண்பர் அழுதேன் என்றார்.... எனக்கு அழுகை வரவில்லை... ஆனாலும் முடிவு இதுவாகத்தான் இருக்கும் எனத் தெரிந்ததால் படம் முடிந்த போது மனம் முழுவதும் வேதனை நிரம்பி நின்றது.

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (30-Sep-17, 8:39 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 92

மேலே