சிநேகிதனே -அத்தியாயம் - 01
....சிநேகிதனே.....
அத்தியாயம்-01
நிழல் தேடித் திரிந்தேன்
சாய்ந்திட உன் தோள்கள்
தந்தாய்...
வழி தேடித் தவித்தேன்
எனைத் தாங்கிடும்
உன் தோழமை தந்தாய்..
விழிநீரோடு விடைபெற்றிட
வந்தேன்..
காலம் முழுதும் அரவணைக்க
காதலோடு நிற்கின்றாய்....?
இன்னும் சிறு மணித்தியாலங்கள்தான் உள்ளது...நான் எனது தாய்நாட்டை விட்டு வெளிநாட்டிற்குப் பறப்பதற்கு...எனக்குப் பிடித்த வேலை...நான் படிக்க நினைத்த மேற்படிப்புக்கான அனுமதி...அனைத்தும் அங்கே எனக்காக காத்துக் கொண்டிருக்கின்றது...கிட்டதட்ட என் கனவுகள் அனைத்துமே நனவாகும் தருவாயில் உள்ளது...
ஆனாலும் என் உள்ளத்தில் உவகையில்லை...விழிகளில் உயிரில்லை...காரணம் உயிர்ப்பில்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த எனக்குள்ளும் உயிர்ப்பை அளித்தவனின் காதலை நான் நிராகரித்துவிட்டு வந்திருக்கிறேன்...அவனது நேசத்திற்குப் பதிலாய் என் மௌனத்தை மட்டுமே பதிலாக விட்டு வந்திருக்கிறேன்...
தனிமையில் வளர்ந்த எனக்கு நட்பென்னும் புது உறவினை அறிமுகம் செய்து வைத்தவன் அவன்...தோல்விகளைத் தாங்கும் தோழமையைத் தந்தவன் அவன்...எனையே முழுதாய் தாங்கி நின்றவன் அவன்...ஆனால் நானோ இப்போது அவனது உயிரினையே மொத்தமாய் குத்திக்கிளறிவிட்டு வந்திருக்கிறேன்..
அவனது நினைவுகளிலே என் மனம் மூழ்கி கரைய ஆரம்பிக்கையில்.. கன்னங்களில் வழிந்து என் கரத்தினில் பட்டுத்தெறித்த கண்ணீரில் சில மணி நேரத்திற்கு முன் பூங்காவில் நடந்த அவனுடனான சந்திப்பு என் கண்முன்னே நிழலாகத் தோன்றி மறைந்தது..
"சரண்...ஏதோ பேசனும்னு வர சொல்லிட்டு...இப்படி அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம்...?.."
"..அது வந்து...மித்ரா...உன்கிட்ட இதை எப்படி சொல்றன்னு தெரியல...இப்பவும் நான் இதை சொல்லலன்னா இனி என்னைக்குமே உன்கிட்ட இதை சொல்ல முடியாம போயிடுமோன்னு பயமா இருக்கு..."
"என்னடா...என்னென்னமோ எல்லாம் சொல்லுற...சொல்ல வாறதை நேரடியாவே சொல்லுடா...என்கிட்ட என்ன தயக்கம் உனக்கு...??"
"ம்ம்..ஓகே...மித்து...நான் நேரடியாவே விசயத்துக்கு வாறேன்....என்னை உனக்குப் பிடிக்குமா...??"
"டேய் இதை கேட்கவா...இன்னும் அஞ்சு மணிநேரத்தில பறக்க இருக்கிறவளை பிடிச்சு வைச்சு பேசிட்டு இருக்காய்...?"
"கேட்டதுக்கு முதல்ல பதிலைச் சொல்லுடி....உனக்கு என்னை பிடிக்குமா...?பிடிக்காதா...?.."
"ஹையோ...பிடிக்கும்....பிடிக்கும்....பிடிக்கும்.....போதுமா..."
எனது பதில் அவனுக்கு உற்சாகத்தை தந்திருக்க வேண்டும்...அதனால் லேசாகப் புன்னகைத்தவாறே அடுத்த கேள்விக்குத் தாவினான்...
"ஏன் என்னை உனக்குப் பிடிக்கும்..??.."
"டேய்...என்னோட பெஸ்ட்டு பிரண்டு நீயு...உன்னை எப்படிடா எனக்குப் பிடிக்காம போகும்...ஆமா இன்னைக்கு உனக்கு என்னதான் ஆச்சு...ஒரு மார்க்கமாவே பேசிட்டு இருக்காய்..."
"ஹா...தெரியல மித்து...எனக்கும் இதெல்லாம் புதுசாத்தான் இருக்கு...எப்போ எந்த நிமிசம் இது எனக்குள்ள வந்திச்சுன்னு தெரியல...ஆனால் நீ என்னை விட்டிட்டு போகப் போறன்னு தெரிஞ்ச அந்த நிமிசம் தான் நான் இதை முழுமையா உணர்ந்தேன்..."
"சரண் நீ எதைப்பத்தி பேசிட்டு இருக்காய்...?"இதை அவனிடம் கேட்கும் போதே என் குரலில் லேசான தடுமாற்றம்...அதுவரை நேரமும் அவனோடு விளையாட்டுத்தனமாய் பேசிக் கொண்டிருந்த எனக்கு..அவன் அதை மட்டும் சொல்லிவிடக்கூடாதென்று அத்தனை தெய்வங்களையும் என் துணைக்கழைத்துக் கொண்டேன்...ஆனால் எனது பிரார்த்தனை கடவுளின் காதுகளிற்கு எட்டவில்லை போலும்...எனது வேண்டுதல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட அவன் அதைச் சொன்னான்....
"...உன் மேல எனக்கிருந்தது நட்போடு இணைஞ்ச நேசம்னு மட்டும்தான் இதுவரை நாளும் நினைச்சிட்டு இருந்தேன்...ஆனால் அது அதுக்கும் மேலான நேசம்னு இப்போ நான் புரிஞ்சுகிட்டேன.."
"நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால கற்பனையில கூட நினைச்சுப் பார்க்க முடியல...நீ இல்லைன்னா என் வாழ்க்கையில வேற எதுவுமே எனக்கு வேண்டாம்னு தோனுது...நான் ஏன் இப்படி மாறிப்போனேன்னு தெரியல மித்ரா...ஒருவேளை இது எல்லாத்துக்கும் பெயர் தான் காதல்னா...
யெஸ்...ஐ லவ் யூ மித்ரா..."
இதைச் சொல்லும் போதே அவனது கண்களில் காதல் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது...அந்தக் காதல் என்னை வாய் திறந்து பேச முடியாமல் கட்டிப் போட்டது...சில மணித்துளிகள் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்..அவனும் என்னையேதான் பார்த்துக் கொண்டிருந்தான்...
இப்படியொரு அன்பிற்காகத்தான் என் மனம் இதுவரை காலமும் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது...இப்போது அதற்கும் மேலான அன்பு என் முன்னே எனக்காக மட்டுமே காத்திருந்தும் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை...அதனால் மனதை இரும்புத்திரை கொண்டு மறைத்த நான்...
"என்னை மன்னிச்சிரு சரண்...எனக்கு உன் மேல அப்படி எந்த உணர்வும் வந்ததில்லை...நீ என்னோட நல்ல நண்பன்...இன்னைக்கு மட்டுமில்லை...எப்பவுமே நீ என்னோட பெஸ்ட்டு பிரண்டுதான்....ஆனால் அதுக்கும் மேல எனக்கு எதுவுமே உன் மேல தோனதில்லை சரண்...இதை ஏத்துக்க உனக்கு கஸ்டமா இருக்கலாம்...ஆனால் இதுதான் என்னோட மனநிலை சரண்...."
அவன் பதிலிற்கு எதுவுமே பேசவில்லை...எனக்குத் தெரியும் நான் கூறிய வார்த்தைகளால் அவன் மனம் எவ்வளவு காயப்பட்டிருக்குமென்று...ஆனால் இதைத்தவிர வேறேந்த வழியும் எனக்குத் தெரியவில்லை...இனியும் அங்கே இருந்தால் என் மனம் அவனிடத்தில் சென்றுவிடும் என்பதை உணர்ந்த நான் அங்கிருந்து வேகமாகக் கிளம்பிவிட்டேன்...
அங்கிருந்து நான் எழும் போது கூட அவனிடத்தில் எந்த அசைவுகளும் இல்லை...அதே இடத்தில் அப்படியே அமர்ந்திருந்தான்...என்னை அவன் தடுக்கக் கூட முயலவில்லை....அங்கிருந்து விமான நிலையத்தை வந்தடைந்த எனக்கு ஒரு விடயம் மட்டும் தெளிவாகப் புரிந்தது...என் உடல் மட்டும்தான் இங்கே உள்ளம் அவனிடத்திலென்று...அனைத்தும் கனவு போல் என் கண்களுக்குள் ஓடி மறைய எனது நாட்டை மட்டுமல்ல அவனையும் விட்டு விலகிக் கிளம்பினேன்....என் மனதையும் காதலையும் அங்கேயே கொன்று புதைத்துவிட்டு வெளிநாட்டை நோக்கிப் பயணித்தேன்...
நினைவுகள் தொடரும்....