ஓடி விளையாடு பாப்பா

கொஞ்சிப் பேசிடும் உன் மழலையின் அழகை ரசித்து முடித்திடும் முன்னமே
நெஞ்சில் துடிக்குதடி உன் எதிர் காலத்தின் பயமே...
அறிவியல் தொழில் நுட்பங்கள் பல உண்டு உன் அறிவின் வளர்ச்சிக்கு
இங்கே சில காமக் கொடூர்களும் உண்டு உன் பெண்மையின் பங்கத்திற்கு
பெற்றவர்கள் இருக்கையில் கவலை ஏனடி உனக்கு
காலம் இதுவே சிறந்த காலம் மகிழுந்து சிறகடித்து பழகடி

பெற்றவர்களை நம்பி இந்த உலகில் புதிதாகப் பூக்கும் பூக்கள் தான் குழந்தைகள். அவர்களை நாமே பேணிப் பாதுகாத்திட வேண்டும். குழந்தைகள் வெளியுலகம் காணும் முன்பே நம்மை கண்டு தான் வளருகிறார்கள். நாம் நடந்து காட்டும் வழி தான் அவர்கள் வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கும் முதல் பாதை. எனவே நாம் கற்றுத் தரும் முன் நாம் வாழ்ந்து காட்ட வேண்டும். நம்மை எடுத்துக் காட்டாக கொண்டே அவர்கள் ஒவ்வொரு செயலையும் செய்கிறார்கள்.

முதலாவதாக நாம், நம் வீடு கற்று தருபவை - குழந்தைகள் வீட்டில் நம்மை கவனிக்கிறார்கள். நாம் அவர்களுடன் பழகும் விதம், மற்றவர்களுடன் பழகும் விதம் இவற்றை தங்கள் மனதில் பதிய வைத்து கொள்கிறார்கள். நாம் அவர்களோடு பேசும் பொழுது பொறுமையுடனும், பாசத்துடனும் பேசுதல் மிக முக்கியம். அவர்கள் செய்யும் சிறு தவறுகளுக்கு கூட நாம் மற்ற கோவங்களை எல்லாம் அவர்கள் மீது திணிக்காமல் குழந்தைகளுக்கு எடுத்து சொல்லி புரிய வைத்தல் அவசியம். நாம் கோவித்து கொண்டால் அவர்கள் நம்மிடம் இருந்து அவர்களின் செயல்களை மறைக்க ஆரம்பித்து விடுவார்கள். இது நாம் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் ஏற்படுத்தும் முதல் இடைவெளி. நாம் சிறு வயதில் இருக்கும் பொழுது இதை விட நிறைய குறும்புகள் செய்திருப்போம் அவற்றை நம் பெற்றோர் மதித்து பொறுத்தது போலவே நாமும் இருத்தல் அவசியம். பின்பு, குழந்தைகள் முன்பு நாம் மற்றவர்களிடம் கோவமாகவோ அல்லது மரியாதை இல்லாமலோ பேசாது இருத்தல் மிக முக்கியம். மிக முக்கியமாக கணவன் மனைவி வாக்குவாதங்களை குழந்தைகள் முன் வைத்து கொள்ள கூடாது. குழந்தைகள் தொடர்ந்து அடம் பிடிக்கும் விஷயத்தை அவரது பெற்றோர் ஒன்று சேர்ந்து புரிய வைக்க வேண்டும். பெற்றோருக்கு இடையில் மாற்று கருத்து இருந்தாலும் அவர்களுக்குள் பேசிய பின்பே குழந்தைக்கு தெரிய வைக்க வேண்டும். உதாரணமாக, குழந்தை எப்போதும் சாக்லேட் - கு அடம் பிடிக்கிறது என்றல் பொதுவாக அம்மாக்கள் குழந்தையின் உடல் நலம் கருதி அடிக்கடி கொடுக்க மாட்டார்கள். ஆனால் அப்பாக்களுக்கு அப்படி அல்ல. குழந்தைகள் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் தர வேண்டும் , அவர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்றே எண்ணுவார்கள். அப்போது, அப்பா அவர்கள் நேரடியாக குழந்தைக்கு பரிந்து பேசி சாக்லேட் வாங்கி தராமல், குழந்தையின் அம்மாவோடு பேசிய பின்பே ஒன்று சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும். அப்படி அல்லாமல், அப்பா மட்டும் தனிச்சயாக முடிவு எடுத்து வாங்கி தந்தால், அந்த குழந்தைக்கு அப்பாவிடம் கேட்டு எல்லாம் பெற்று கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றும். மேலும், அம்மாவின் மதிப்பு அந்த குழந்தையின் பார்வையில் குறையும். சிறிய விஷயங்களின் தொகுப்பே பெரிய காரியங்களுக்கு விதை ஆகிறது.

இரண்டாவதாக பள்ளி கற்று தருபவை - குழந்தைகள் நம்மிடம் மற்றும் நம் வீட்டாரிடம் அல்லாத புதிய பழக்கங்களை அவர்கள் இங்கு தான் கற்று கொள்கிறார்கள். பள்ளி ஆசிரியர்களிடம், சக நண்பர்களிடம் இருந்து பழகி கொள்ளுகிறார்கள். அதில் நல்லவையும் இருக்கலாம், நன்மை அற்றதும் இருக்கலாம். அதை தெரிந்து கொள்ள முதலில் நாம் அவர்களிடம் தினமும் அவர்களிடம் கண்டிப்பாக பேச வேண்டும். பேசுதல் என்பது வினா விடை நிகழ்ச்சி போல் அல்லாது, நண்பர்களிடம் பேசுவது போல் இயல்பாகவும் , வெளிப்படையாகவும் இருத்தல் மிக அவசியம். அப்போது தான் குழந்தைகளின் மனதில் இருக்கும் விஷயங்கள் நமக்கு முழுமையாக தெரிய வரும். ஆரம்ப காலத்தில் குழந்தைகளுக்கு மறைக்க தெரியாது. நாம் இயல்பாக பழகி வந்தால் அது தொடரும். இல்லையெனில் அவர்கள் பெற்றவர்களிடம் இருந்து மறைக்க தொடங்குவார்கள். அதற்கு நாமே வழிகாட்டுதலாக இருக்க கூடாது. நன்மை அற்ற பழக்கங்களை கண்டு கொண்டு அவற்றை பொறுமையாக எடுத்து சொல்லி புரிய வைத்து மாற்ற வேண்டும். அப்படி அல்லாமல் அந்த நண்பரிடம் பேசாதே என்றெல்லாம் அறிவுறுத்த கூடாது. அதுவும் நம் குழந்தை போல் சிறிய குழந்தை தானே, அதுவும் வேறு எங்காவது கற்று கொண்டு தான் வந்திருக்கும், தன் குழந்தைக்கு அறிவுறுத்ததல் மட்டுமின்றி அந்த நண்பருக்கும் சொல்லி கொடுத்து மாற்றி கொள்ள சொல்லுதல் வேண்டும். இங்கே அவர்கள் எதிர்நோக்கும் மிக முக்கியமான சவால்- படிப்பு, பரீட்சை , முதல் மதிப்பெண். இதை அவர்களுக்கு ஒரு பெரிய சுமை ஆக்காமல், பாடத்தை புரிந்து படிக்க சொல்லி, வாங்கும் மதிப்பெண்ணை நாம் முதலில் ஏற்க பழகிக்கொள்ள வேண்டும். எப்போதும் எல்லாவற்றிலும் முதல் மதிப்பெண் எடுப்பது என்பது கடினம் தானே. மெல்ல மெல்ல கற்று கொள்ளுவார்கள், விரட்டாதீர்கள். மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பார்த்து தம் குழந்தையை ஒரு போதும் குறைவாக பேச கூடாது. இது அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை அளிக்கும். பொறாமை எண்ணம் ஏற்ப்பட வழி வகுக்கும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறமை உண்டு. அதை பெற்றோர்கள் கண்டறிந்து ஊக்கப்படுத்தி அந்த தனித்திறமையில் மேலும் வெற்றி பெற உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்கள் தனித்திறமையை கண்டறிய அவர்கள் போக்கில் சென்று தான் விட்டு பிடிக்க வேண்டும். நாம் ஒரே விஷயத்தையே அல்லது அவர்களுக்கு வராத, விருப்பம் அல்லாத விஷயத்தையே அவர்களின் மேல் திணித்து கொண்டிருந்தால், அவர்கள் தான் நினைத்ததும் செய்ய முடியாமல், பெற்றோர் விருப்பமும் நிறைவேற்ற முடியாமல் துவண்டு போய் விடுவர். பிடித்த விஷயத்தை சிறந்த முறையில் செய்வதற்கு நாம் உதவியாக இருக்க வேண்டும்.

பொழுது போக்கு - இப்போதெல்லாம் குழந்தைகள் வெளியே விளையாட செல்வதே மிகவும் குறைந்து விட்டது. நம் சிறு வயதில் நாம் விளையாடிய விளையாட்டின் பெயர்கள் கூட இவர்கள் கேள்வி பட்டிருப்பதில்லை. திறந்த வெளியில், காற்றோட்டமாக வெயில் படும் படி, ஆடி , பாடி விளையாடி மகிந்தழுதோம் நாம். ஆனால் இந்த காலத்தில் கையில் கைபேசி மற்றும் கணினிகளை வைத்து கொண்டு தன் நிழலை விளையாட விட்டு அதையே நிஜம் என்று நம்பி, எப்போதும் உக்கார்ந்து படியே இருக்கிறார்கள். உடற்பயிச்சி என்பதே குறைந்து விட்டது. அதனால் , ஆரோக்கியமும் குறைந்து விடுகிறது. தினமும் வெளியே மற்ற குழந்தைகளோடு விளையாடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அது அவர்களது உடல் நலத்திற்கு மிகவும் சிறந்ததும் கூட. அவ்வாறு கணினி மற்றும் கைபேசி வழியே விளையாடுவதால், அதில் வரும் தேவையற்ற விளம்பரங்கள் கூட அவர்களை தவறான பாதையில் அழைத்து செல்லும் ஒரு கருவி ஆக செயல்படலாம். இப்போது இருக்கும் கல்வி முறைகளில் சில சமயம் படிப்பிற்காக கூட கணினியை உபயோக படுத்துகின்றனர் குழந்தைகள். படிப்பு அல்லாத தேவை அற்ற தீமை விளைவிக்கும் விஷயங்களை தீமை என்று அறியாமல் அதை அவர்கள் செய்ய தொடங்குவார்கள். அவர்களுக்கு நாம் தான் அவர்கள் அருகில் உட்கார்ந்து நல்லது தீயது பற்றி விளக்கி எடுத்துரைக்க வேண்டும். அப்போது பெற்றோர் , குழந்தைகளிடம், "பெற்றவரிடம் சொல்ல கூடிய எந்த செயலும் அவர்கள் செய்ய தயங்க வேண்டாம் , சொல்ல தயங்கும் எந்த செயலையும் செய்ய வேண்டாம்" என்று அறிவுரைக்கலாம். குழந்தைகளுக்கு தேவையான தனிமையையும், சுதந்திரத்தையும் நாம் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். எப்போதும் அறிவுரை சொல்லி கொண்டே இருத்தல், எப்போதும் அவர்களை கண்காணித்து கொண்டே இருத்தல் அவர்களுக்கு பெற்றவர்கள் மீது வெறுப்பையே ஏற்படுத்தும். அதனால், நாம் அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும். நல்ல திரைப்படங்கள், அவர்கள் புரிந்து கொள்ள கூடிய , புரிந்து கொள்ள வேண்டிய திரைப்படங்களுக்கு தவறாமல் அழைத்து செல்லலாம். வன்முறை அதிகம் உள்ள திரைப்படங்களுக்கு செல்லும் போது குழந்தைகளை கூட்டிச் செல்வது நல்லதல்ல. தொலைக்காட்சி பார்க்கும் போதும் அவர்கள் பார்க்க கூடியவை , பார்க்க வேண்டாதவை என்று பிரித்து எடுத்து சொல்லுங்கள். அவர்கள் பார்க்க கூடாது என்பதை அவர்களுக்கு புரியும் படி ஏன் பார்க்க கூடாது என்று காரணத்துடன் முடிந்தால் விளக்கி சொல்லுதல் நல்லது. அது அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளவும், ஏற்று கொள்ளவும் சிறப்பாக இருக்கும். அதே சமயத்தில் நாம் "கூடாது" என்ற சொல்லை அனைத்திற்கும், எப்போதும் சொல்லும்படியாகவும் இருக்க கூடாது. அவர்கள் வளர்ந்து வரும் பருவத்தில் நாம் அவருக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களை சொல்லி புரிய வைத்தல் முக்கியம், அதே போன்று அவர்களுக்கு எழும் சந்தேகங்களை நம்மிடம் கேட்டு தெரிந்து கொள்ள தயங்க கூடாது என்பதை நாம் அவர்களுக்கு சொல்லி தெரிவதை விட நாம் அவர்களிடம் பழகும் விதமே முடிவெடுக்கும்.

ஆண், பெண் வித்தியாசம் சொல்லி கொடுத்து, பழகும் வேளையில் வித்தியாசம் காட்டாமல் சகஜமாக பழக சொல்லித் தர வேண்டும். தொட்டு பேசுதலில் உள்ள வித்தியாசம் கற்று தர வேண்டும். வெளி மனிதர்களிடம் பழகும் போது இருக்க வேண்டிய இடைவெளி இட்டு பழக கற்றுத் தர வேண்டும். குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டு செல்ல கூடாது. மற்றவரை பார்த்து கொள்ள சொல்லி விட்டு செல்லுதலும் நல்லதல்ல. அவர்களுக்கு பொதுவாக யாருடனாவது தனியாக இருப்பது அல்லது பழகுவதில் தயக்கம் இருந்தால் அவர்களை வற்புறுத்தாமல், எதனால் அந்த தயக்கம் , என்ன நெருடல் அவர்களுக்கு உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் சில சமயங்களில் நமக்கு மிகவும் நம்பிக்கை பெற்ற ஒரு விருந்தினரை பற்றியோ அல்லது உறவினரை பற்றியோ கூட குற்றம் சொல்லலாம். குழந்தைகளை நாம் பேச விட வேண்டும். அவர்கள் பேச நினைப்பதை தடுக்க கூடாது. அப்படி தடுத்தால், அவர்களின் பிரச்சனை நமக்கு தெரியாமலேயே போய் விடும். அப்படி அவர்கள் குறை சொல்லும் நபருக்கு நாம் கண்களை மூடி கொண்டு பரிந்து பேசாமல், நம் குழந்தை என்ன சொல்ல வருகிறது என்று ஆழ்ந்து கவனித்து, அந்த நபரின் மேல் தவறா அல்லது தம் குழந்தை தான் உண்மையிலேயே ஒன்றும் அல்லாத விஷயத்திற்கு பயந்து போய் தயங்குகிறாளா என்பதை தெரிந்து கொண்டு சரியான முடிவு எடுக்க வேண்டும். அப்படி அந்த நபரின் மீது தான் தவறு என்றால், நம் குழந்தையின் பாதுகாப்பும் அவர்களது நிம்மதியும் மட்டுமே நமக்கு முக்கியமாக இருக்க வேண்டும். அந்த தனிப்பட்ட நபரிடம் அறிவுரை கூறி புரிய வைக்க வேண்டும், பின்பு அவர் இருக்கும் பொழுது தனியாக நம் குழந்தையை விட்டு விட்டு எங்கும் செல்ல கூடாது. அதே சமயத்தில் தைரியத்தையும் ஊட்டித் தான் வளர்க்க வேண்டும்.

நாம் குழந்தைகளிடம் பழகும் விதத்தில் தான் குழந்தைகள் நம்மிடம் பழகுவார்கள். நாம் அணைத்து விஷயங்களிலும் அவர்களிடம் நண்பர்களை போலவே வெளிப்படையாக பேசி சந்தோஷமாக சிரித்து பழகி வந்தால், குழந்தைகள் நம்மிடம் அவர்களுடைய அணைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளுவார்கள். அது மட்டும் இன்றி நாம் அவர்களிடம் பெற்றோர்கள், வயதில் மூத்தவர்கள் என்று இடைவெளி இட்டு பழகாமல் நெருங்கி பழகுவதால், குழந்தைகள் பொழுது போக்கிற்காக கைபேசி , தொலைக்காட்சி, கணினி இவற்றை விரும்பி செல்ல மாட்டார்கள். பெற்றோர்களிடம் உரையாடி மகிந்ழ்ந்து பேசுவதையே விரும்புவார்கள். அது, உறவை பலப்படுத்த மேலும் உதவும்.

சமுதாயத்தில் கற்று கொள்ளுவார்கள் பல விஷயங்களை, நாம் அவர்களுடனே இருந்து குழந்தை வளர வளர அவர்களோடு வளர வேண்டும். அவர்களுக்கு, தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுத்து நல்லது, தீயது பற்றியும் அறிந்து கொண்டு சிறப்பாக வாழ நாம் அவர்களுக்கு பக்க பலமாக, உறுதுணையாக, உதவியாக இருக்க வேண்டும். அதுவே சிறந்த குழந்தை வளர்ப்பு முறையாகும். அதுவே பெற்றோரின் கடமையும் ஆகும்.

ப.வெ. உத்ரா

எழுதியவர் : ப.வெ. உத்ரா (22-Oct-17, 11:58 am)
சேர்த்தது : ப வெ உத்ரா
பார்வை : 375

சிறந்த கட்டுரைகள்

மேலே