நான் தான்

நீ தான் நீ தான்
என் உயிருக்குள் ஒருஅணுவாய் ஒருநாள் நுழைந்தாய்
பின் நீ என் உயிராகவே மாறிவிட்டாய்

நீ தான் நீ தான்
என் இதயத்துக்குள் ஒருதுகளாய் ஒருநாள் நுழைந்தாய்
பின் நீ என் இதயமாகவே மாறிவிட்டாய்

நீ தான் நீ தான்
என் நினைவுகளுக்குள் ஒருதுளியாய் ஒருநாள் நுழைந்தாய்
பின் நீ என் நினைவுகளின் முழுஉருவாய் மாறிவிட்டாய்

நீ தான் நீ தான்
என் கனவுக்குள் ஒருகணமாய் ஒருநாள் நுழைந்தாய்
பின் என் கனவுகளில் கனமாய் மாறிவிட்டாய்

நீ தான் நீ தான்
என் உடலுக்குள் ஒருதிசுவாய் ஒருநாள் நுழைந்தாய்
பின் என் உடலென்றும் உன் உடலென்றும் இல்லை என்றாக்கினாய்

நீ தான் நீ தான்
என் உணர்வுக்குள் ஒரு சாரலாய் ஒருநாள் நுழைந்தாய்
பின் என் உணர்வுகளை நிற்காத அடைமழை ஆக்கினாய்

நீ தான் நீ தான்
என் உயிருக்குள் ஒரு பார்வையாளனாக ஒருநாள் நுழைந்தாய்
பின் என் உயிருக்கு உயிலெழுதாத சொந்தக்காரன் ஆகிவிட்டாய்

நீ தான் நீ தான்
என் இமைகளுக்குள் ஒரு காட்சியாய் ஒருநாள் நுழைந்தாய்
பின் என் இமைகளை உன்னைத் தேடிட செய்தாய்

நான் தான் நான் தான்
என் இமைகளுக்குள் ஒரு ரசனையாக ஒருநாள் உன்னை எடுத்துக் கொண்டேன்
பின் இதயத்துக்குள்ளும் ஒரு ரசிகையாக ஒருநாள் உன்னை ஒளித்துக்கொண்டேன்

நான் தான் நான் தான்
என் உயிருக்குள் ஒரே உயிராக ஒருநாள் உன்னை சேர்த்துக் கொண்டேன்
என் சிறகுக்குள் சிறு பறவையாக ஒருநாள் உன்னை ஈர்த்துக் கொண்டேன்

நான் தான் நான் தான்
எனக்குள் ஒருநாள் உன்னை முழுவதுமாக இழுத்துக்கொண்டேன் என் அஸ்திரமாக
நான் தான் நான் தான்
பின் ஒருநாள் என்னை உனக்குள் ஒளித்துவைத்தேன் வெகு பத்திரமாக
நான் தான் நான் தான்
என் உயிர் உன்னில் வைத்து உன் உயிர் மட்டும் கொண்டு வாழும் சித்திரமாக
நான் தான் நான் தான்
நான் நானாக இல்லாமல் நான் நீயாக மட்டும் என் நித்திரையிலும்

உனக்குள் வாழ்வதிலும்
உனக்காக வாழ்விதிலும்
உழலும் பொழுதுகளை
உருகி ரசித்தபடி
நான்

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (24-Oct-17, 1:12 am)
Tanglish : naan thaan
பார்வை : 225

மேலே