இயற்கை வழியில் வாழ

அழகென்று மாயையில் மயங்கும் புறக் கண்கள் மூட,
அழகிய உண்மையைக் காணும் அகக் கண்கள் திறக்க,
புண் மொழிகள் பேசாது புற வாய் மூடி,
அக வாய் திறந்து அன்பு மொழி பேசி,
கேடுமொழிகள் கேளாது புறக் காதுகள் செவிடாய்,
அறமொழிகள் கேட்கும் அகக் காதுகள் திறக்க,
புத்தன் உணர்ந்தவழி நாமும் நடைபோட ஞான ஒளி வீசும் ஆனந்த நறுமணம்...
இதைக் கேளாது தூற்றும் துர்மனம்...

அன்பின் வழியில் கீதம் பாடி ஆனந்த வாழ்வில் யாவரும் வாழ கருணை பொழியும் இயற்கையின் வழி நான் கண்ட புத்தன் வழி...

மனம் உவந்து வாழ்வில் கவலைகள் ஒழிய, மன அழுத்தங்கள் அழிய,
நீயும் நாடி வா இயற்கையிடம்...
இதைப் போதிக்கும் மனித கல்லூரிகள் இல்லை...
உன் மனமே! இதை நாட வேண்டும்...

குரு அழுக்குடையவனாக இருந்தால் சீடனில் படிகிறது அந்த அழுக்கு...
ஆதலால், அழுக்கில்லா குருவாகிய இயற்கையை நாடு...

அகிம்சை ஒரு ஹிம்சையென்பான் மூடன்,
இயற்கையில் ஹிம்சை ஆரம்பமானால் அழிந்து போவோம் என்பதை மறந்து...

மூடனின் வழியில் செல்வான் இன்னொரு மூடன்...
நாவடக்கமில்லாமல் வாயில் உதித்ததை வழக்கமென்பான்...
நடை, உடை பாவனையில் ஒழுக்கமென்பான்...
உள்ளிருந்து தோன்றும் ஒழுக்கமே உயர்வு தருகிறது இயற்கை வழியில்.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (27-Oct-17, 6:27 pm)
பார்வை : 819

மேலே