வளையல் - கம்மல் காதல்

அவள் கோபுர கம்மல்களும்
அக்காப்பு வளையல்களும்
அடிக்கடி உரசிக்கொண்டன..

அமைதியான அம்மாலை வெளியில்
அலைகளின் மெட்டுக்கு
அவள்-அவைகளின்
தீண்டல்கள் தாளமிட்டுக்கொண்டன..

காற்றுக்கு
அவள் கூந்தலை கலைப்பதும்,
கைகளுக்கு
அதை காதோரம் சேர்ப்பதும்
அனிச்சை செயலாகிட,
கம்மல்களுக்கும் அக்காப்புவளையல்களுக்கும்
அம்மாலைநேர தீண்டல்கள்
அதிக மயக்கங்கள் தந்துகொண்டிருந்தன..

இவர்களின் ஆனந்தம் இன்று ஆரம்பமானதல்ல..

ஒவ்வொரு இரவும்
இவ்வளையலின் மீதே
கம்மலின் உறக்கம் பிறக்கும்..
விடியும் நேரம்
புன்னகையால் நீர் தெளிக்கும்..


வளையலின் புன்னகையும்
கம்மலின் நடனமும்
காதலில் தினம் அதிகம் பிரதிபலித்துக்கொண்டேயிருந்தன..


அதீத நடனம் அவள்
காதுகளின் உறக்கம் உறுத்திட
நிம்மதி தூக்கம் வேண்டி
அவள் கைகள் தானே
கம்மல் கழட்டிவைக்க எத்தனித்துவிட்டன


கோபுரத்தின் திருகுகள்
முன்னோக்கி நகர,
விபரம் புரியாமல்
நெருங்கிச்சென்று புன்னகையித்துக்கொண்டிருந்தன,
அக்காப்பு வளையல்கள்.

அவள் காது நீங்கிச் சென்றது
கம்மல்..

ஆனாலும் வளையலின் பார்வைகள்
கம்மலின் மீதேயிருக்க,
அதன் புன்னகை மேலும்
தொடர்ந்துகொண்டிருந்தது..

தன் உள்ளங்கையில்
கம்மலின் அழகு பார்க்கிறாள்..

வலையல்களோ,
காதலி அருகில் இருப்பதில்
ஆனந்தமாய் ஜாடை செய்துகொண்டிருந்தது...

கம்மலும் அவள் உள்ளங்கைகளில்
கொஞ்சம் நாணிக்கொண்டிருந்தது..

ஆனந்தத்தின் நொடிகள்
அதிகம் கொடுக்கவில்லை அவள்..

அடுத்த நொடியிலேயே
சிக்கப்புநிற நகைப்பெட்டிக்குள்
சிறைபட்டுவிட்டன, கோபுரகம்மல்கள்.

இருளடைந்துபோயின கம்மலின் நாட்கள்..

கம்மலின் பிரிவுகள்
கனவோ என்றெண்ணி
அடிக்கடி அவள்
காதுகளை
எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது
காப்புவலையல்கள்..


தினம் இரவில்
ஒன்றாய் துயில்கொள்ளும் காதல்
இன்று காணாமல்போனதை எண்ணி
அவள் இருந்த இடத்தை
சோகங்களால் வருடிக்கொண்டிருந்தது
காப்புவளையல்கள்..

காதல் பிரிந்த
ஏக்கத்தில் புன்னகையிழந்த வளையலின்
ஓசைகளும் குறைய ஆரம்பித்துவிட்டன..

"ஓசைதானே உயிர்;
ஓசையின்றி போனால்
உயிரேது வளையல்களுக்கு;
உயிர் சிறையிலிருக்க
உடலியக்கம் எப்படியிருக்கும்;
இயக்கம் இல்லாமலிருப்பின்
ஓசையும் இருப்பதில்லைதானே"

ஆம்,
இறுதியில்
வளையல்கள் மொத்தமாய் ஓசை இழந்துவிட்டன..

ஓசையிழந்த வளையல்களுக்கும்
நகைப்பெட்டியே ஆயுள்தண்டனை..

சிறைக்கத்தவு திறந்து மூடப்படுகிறது..

அரைமயக்கநிலையிலே உள்ளே சென்ற வளையல்கள்
கோபுரகம்மல் மடியில் விழ,
காதல் வாசம் அறிந்து
கண்விழித்து எழுந்தது
கோபுரகம்மல்கள்.

மடி அடைந்தவன்
காதலன் என்றறிந்து
அறியாமலே ஆனந்தகண்ணீர் விட,
அரைமயக்க நிலையிலேயே
மேலே பார்க்கிறது காப்புவளையல்.

கண்ணீர் புன்னகையில் கோபுரகம்மல்..
மயக்கம் தெளிந்து நின்றது காப்புவளையல்கள்..

ஆம்,
இம்முறை
புன்னகையுடன் கோபுரகம்மலும்,
நடனமுடன் காப்புவலையல்களும்
தங்கள் காதலை
நிரந்தர கொஞ்சல்கள் தழுவல்களுடன் கொண்டாட ஆரம்பித்துவிட்டன..

காதல் வெளிச்சத்தின் ஓசைகள்
தொடரட்டும்.

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (18-Nov-17, 9:45 pm)
பார்வை : 796

மேலே