படித்ததில் பிடித்தது

#படித்ததில்_பிடித்தது

ஒரு கவிஞனின் உலகம்

ஒரு கவிஞனின் உலகம்
எப்படி இருக்குமென
என்றாவது
சிந்தித்ததுண்டா நீங்கள்..

இவ்வுலகைத் தெளிவாகப்
புரிந்து வைத்திருக்கும்
அக்கவிஞனது உலகத்தைப்
புரிந்தவர்கள் உண்டா யாரேனும்..

அட்டைப்பூச்சிகளோடு
அவன் கொள்ளும் சிநேகம்
உங்களுக்கு
அருவருப்பைத் தரும்..

பறவைகளோடு
அவன் பேசிச்சிரிப்பது
உங்களுக்கு
குழப்பத்தை ஏற்படுத்தும்..

பலமணி நேரம்
அவன் மௌனித்துக் கிடப்பது
உங்களுக்கு
ஆச்சரியமாய் இருக்கும்..

பேசிக்கொண்டே நீளூம்
அவனது வாதங்கள்
உங்களுக்கு
புரியாமலே போகும்..

அழுவதற்குச் சிரிப்பதும்
சிரிப்பதற்குக் கோபப்படுவதும்
உங்களுக்கு
எரிச்சலை உண்டாக்கும்..

காலநேரக் கணக்குகளுக்குள்
அடங்காது அவன் செய்யும் செயல்கள்
உங்களுக்கு
வெறுப்பைத் தரும்..

சராசரி மனிதநிலைக்கும்
கவிநிலைக்கும் இடையில்
அவன் பயணிக்கும் நொடிகள்
சென்றுச் சென்று திரும்புகிற அத்தருணங்கள்
எப்படிப்பட்ட அவஸ்தை..

எங்கோ அழுகிற குழந்தையின் வலி..
ஏதோவோர் பெண்ணுக்கு நேர்கிற பாலியல் வன்புணர்வு..
யாரோவோர் மனிதன்
மற்றவருக்குத் தருகிற காயம்..
அரசியல் அசிங்கம்..
தனிப்பட்ட வலிகள்..
சொந்தபந்த வலிகள்..
சமூக வலிகள்..
என நாள்தோறும் அவன் பெறும்
மன உளைச்சல்கள் ஏராளம்..

வாகனத்தில் அடிப்பட்டு இறந்த
நாய்குட்டிக்காய் நான்கு நாட்கள்
கண்ணீர் சிந்தும் அவன்தான்..
சிலவேளை
எது நடந்தாலும்
எவ்விதச் சலனமுமற்றுக்
கிடப்பதும்..

எறும்பையும் பிரபஞ்சத்தையும்
ஒருபோல உணரமுடிகிற
அவனது மனநிலையும்..
ஒவ்வொரு நொடியும்
இச்சமூகமும் வாழ்வியலும்
அவனுக்குத் தருகிற
மன உளைச்சலும்
அவனுக்கே உரித்தானது..

எதிலும் எல்லையற்று இருக்கும்
அவனது எல்லைக்குள்
எவ்வளவு சிக்கல்கள்..

சகவாழ்வியல் தருகிற
சராசரி வாழ்வு நெருக்கடிக்குள்
அவன் அழுந்தி
மூச்சுத்திணறுகிற தருணம்
கடுமை..

ஒவ்வொருநாளும் பலமுறை
சகவாழ்வுக்கும் கவிவாழ்வுக்கும் இடையில் நேர்கிற
பயணச்சுமைகள்
அவனை நெருக்கிக்கொண்டே இருக்கின்றன..

எதற்குள்ளும் எளிதில்
நுழைந்துவிடும்
அவனது
நெருக்கமான வட்டம் மட்டும்
பலவித வரையறைக்குட்பட்டது..

அதற்குள் அவன்
அனுமதிக்கிற நபர்கள்..
அவனது வாழ்வியலைக்
கட்டமைக்க முனைகிற..
அவர்கள் விருப்பத்திற்கு
மாற்ற முயலுகிற..
அவனைச் சராசரிக்குள்
நுழைக்க நிர்பந்திக்கிற
நேரங்களில்..
அவனது சுமையானது வலியானது பலநூறு மடங்காகிப் போகிறது..

நடித்தலற்ற..
தன்னோடு தானிருக்க..
விழைகிற.. அந்நிலை..
பெரும் சுயநலமெனப்
பார்க்கப்படுகிறது..

கவிவாழ்வு நொடிகளில்
அவனுக்குக் கத்திரிக்காய் வாங்கக் கடையில் நிற்பது
அவமானமாய் இருக்கிறது..

சகவாழ்வியல்
சம்பிரதாயங்கள் அவனுக்கு
உகந்ததாய் இல்லை..

கவித்தனிமையை..
சிதைக்கிற எதுவும்
பிடித்தமானதாயில்லை..

சடங்குகள்
சாஸ்திர வாழ்வியல்கள்
அவனை மேலும் மேலும்
சிரமத்தில் தள்ளுகிறது..

சமூகச்சுமையோடு..
தன்சுமையும்..
தன்குடும்பச்சுமையும்
சுமக்குமவனுக்குச்
சற்றேனும் விடுபடல்
மிக அவசியமாகிறது..

அவனது உலகில்
அவன் விருப்பப்படி
அவன் இருத்தலுக்கான
விடுபடலை அவன்
நேசித்துக் கிடக்கிறான்..

அது சராசரி வாழ்வியல் காரணங்களுக்காய்
நிர்பந்திக்கப்படுகிற நேரங்களில்
அவனது நடவடிக்கைகள்
பெருத்த சுயநலத்தின்
பேர் பொறித்து
நசுக்கப்படுகின்றன..

அதனால்தானோ என்னவோ கவிவாழ்வில் வென்ற
பல கவிகள்
சராசரி வாழ்வில்..
விடுபடலை..
தற்கொலை வழியாகவோ..
மது வழியாகவோ..
மாது வழியாகவோ..
உறவுப் புறக்கணித்தல்
வழியாகவோ..
குடும்பத்தைப் பற்றிக்
கவலைப்படாது
இருத்தல் வழியாகவோ.. கொண்டு வித்தியாசப்பட்டிருக்கிறார்கள்..

உண்மையில் கவிஞனை
அவனது குணத்தை
இச்சராசரி உலகம்
சுயநலக்காரனென்றும்.. பைத்தியக்காரனென்றும்..
இன்னும் பல பேர் வைத்தும்
விளிக்கிறது..
அவனது வித்தியாசத்தை
உணர முடியாத அவர்கள்
அறியா அந்நிலை
அழியாக் கவிஞான நிலை..

அவனது வாழ்வு
சராசரிநிலையிலும் கவிநிலையிலும்
மாறி மாறிக் கிடக்கும்
அற்புதம்..

நீங்கள் அவனுக்கென்ன செய்தாலும்
அல்லது
அவன் என்ன செய்தாலும்
அது வித்தியாசப்பட்டே தீரும்..
அதனால்தான் அவன் கவிஞன்..

சராசரி நேரங்களில்
அவன் அவனியல்பில் இருப்பான்..
கவிநிலைதனில்
அவன் ஏதோவொன்றில் லயிப்பான்..

உங்கள் உடனோ
உங்களுக்குத் தெரிந்தோ
உண்மையான கவிஞன்
இருப்பின்
இனியாவது
புரிந்துகொள்ள முயலுங்கள்
அவனது உலகை..
விடுங்கள் அவன்
விருப்பதிற்க்கவன்
இருத்தலை..
கொடுங்கள்
அவனுக்கான விடுபடலை..

சராசரிகளை திணிக்காது..
அவனது நொடிகளை..
அவனது நிமிடங்களை..
அவனது தருணங்களை..
அவனது வாழ்வை..
அவனுக்குத் தரத்
துணையாய் இருங்கள்..

அவனது சிறகுகளை
நெருக்கும்
உங்கள் கைகள் இனி
அவனது
பறத்தலை ரசிக்கட்டும்..

உங்களுலகை
முழுக்க அறிந்து வைத்திருக்கும்
அவனது உலகை
அவனுக்காய்
தருமுங்களுக்கவன்
திருப்பித்தருவான்
நிச்சயம் ஆயிரம் மடங்கு..

ஏனெனில்
அவன்
கவிஞன்....

- #பிரியன் (பாடலாசிரியர்)

எழுதியவர் : (19-Nov-17, 10:15 pm)
சேர்த்தது : பவித்ரா ஸ்ரீ
பார்வை : 123

மேலே