ஆராய்ச்சிமணி

ஆராய்ச்சிமணி

வான்வெளியில் வாழ்ந்துக்கொண்டு , புவியின் உயிர்கள் பயன்பெற அனுதினமும் உழைதித்திடும் மேகமான நான் , இயற்கையை அத்துமீறும் மனிதனிடம் அவன் எல்லைதாண்டி போவதை சூளுரைக்க தட்டி கேட்க வழியின்றி இயல்புக்கு மாறாய் கொட்டித்தீர்க்க வந்துள்ளேன் . மண்ணில் உயிர்கள் தோன்றியது முதலாய் பல யுகங்கள் கடந்தும் எனக்கு துணையாய்,துணைவியாய் தோழமைக்கொண்டு பயணித்த நீண்ட நெடிய மரங்களை நான் இழந்துவிட்ட துயரத்தை அனைவரும் அறிந்திடும் வகையினில் , ஆராய்ச்சிமணி ஓசையை ஒவ்வொருவர் மனதிலும் இங்கு எழுப்புகிறேன்.
விசும்பனாகிய நான், இன்று என்னுடன் பயணித்த மரங்களின் நினைவுகளை மட்டும் சுமந்துக்கொண்டு ,தேடித்தேடி அலைகின்றேன் , காணும் இடந்தொறும் என் கண் முன் தோன்றியவள் இன்று இல்லாமல் போனதற்கு நீதி எனக்கு வேண்டுமென்று கூப்பாடு போடுகின்றேன் .உலகின் சமநிலையை அறிந்திடமால் , பூவுலகம் தனக்குமட்டும் என்றெண்ணியே எண்ணம்போல மரங்களை அழித்துவரும் மனிதர்களுக்கு , அவள் தோன்றி வளர்ந்து விரிந்த பாதையை இன்றய மானிடர்கள் அறிந்திட ,இங்கு சிறுகதையாய் சொல்ல நான் விழைகின்றேன்.
ஏறத்தாழ 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது இது .
பெரிய வீட்டு பெண்ணவள் . சூரியக் குடும்பம் அதில் , அனைவருக்கும் தலைவனாய் அண்டியுள்ள சுற்றத்தாரை தன் ஆற்றலினால் சுழலவைக்கும் மாவேந்தன் , மதிப்பிற்குரிய கதிரவன் அவளின் தந்தையாவான் .பொறுமையிலே சிகரமாய் ,கைகூப்பும் பேரழகும் , பெருமைக்கொள்ளும் புவிஈர்ப்பும் தனக்கெனவே உரிதாக்கும் புவியும் அவள் தாயாவாள் .இவர்களால் பிறப்பெடுத்த தவப்புதல்வி , அவள் தாயின் கருவைத்தாண்டி முளைத்த முதல் செடி , எனது ஆசை பைங்கிளி .
முகிலன் , நான் விண்ணில் புயல் மழையை தோற்றுவித்த பின்னர் , தனிமை என்னை வாட்டியதை என் நடையின் தளர்வு உணர்த்தியது . சற்று ஓய்வெடுத்து போகலாம் என ஓரிடமாய் நின்றிருந்தேன் . அன்று தான் முதன் முதலாய் அவளை நான் கண்டேன் , காதல் வசப்பட்டேன். அன்று அவள் அழகிய இளமையான மெல்லிய செடியாக என் கண் கவர் கன்னியாக வளர்ந்து நின்றிருந்தாள்.அவளின் அறிமுகம் கண்ட அந்த முதல் நாள் , என் பயணத்தில் குளிரூட்டப்பட்ட திருநாள் .
அவளின் அழகை வர்ணித்திட வார்த்தைகள் எனக்கு போதாது . பச்சை வண்ண மேனியவள் , வளைந்து நெளிந்த உடற்கட்டு ,மிருதுவான சருமமும் ,உறுதியான தேகம் , பூக்கள் அழகாய் சூடியே ,தென்றலின் ஒலிக்கேட்டு அதற்கு அழகாய் மெல்ல அசைந்து ஆடிக்கொண்டிருந்தாள், அவளின் நடனத்தில் என் மனதை பறிக்கொடுத்தேன் . அவளின் அசைவுகளில் நானும் சிக்கித்தவித்தேன் .அடடா !! எத்துணை அழகு !! பசுமையான முதல் பார்வை இன்றும் என் நினைவை விட்டு அகலவில்லை .
மண்ணை மட்டும் பார்த்தவள் , பருவம் எட்டியதை எனக்கு அவளும் உணர்த்திடவே விண்ணை நிமிர்ந்து பார்ப்பதுபோல் என்னையும் அவள் பார்த்திட்டாள் . இருவரும் நோக்கு எனும் பாசத்தில் , பார்வையாலே கட்டப்பட்டோம் . அதில் யுகங்கள் பல வாழ்ந்த நெருக்கத்தையும் உணர்ந்துக்கொண்டோம் . அவளின் காதல் பரிசாய் , அவள் சேர்த்துவைத்த நீர்த்துளிகள் நீராவியாக என்னை சேர , என் தேகம் நிறம் மாறியது .நானும் எந்தன் அன்பினை அவள் மேல் பொழிந்திடும் முன்னரே ,அவளை பெற்று வளர்க்கும் தாய் தந்தையின் அனுமதி வேண்டி நின்றேன் .ஒற்றை பெண்ணை பெற்றவர்கள் , தங்கள் மகளுக்கு தக்க துணை வந்ததென புவியும் உணர்ந்துக்கொள்ள , கதிரவன் முறைப்படி வாழ்வில் நாங்கள் சேர்ந்திடவே வான்வெளியில் வானவில்லால் திருமண மேடை அமைத்தான் . அன்பென்னும் மலைச்ச்சாரல் கொண்டவளை நான் நனைத்திடவே , எங்கள் அறவாழ்க்கை அன்று துவங்கியது .
அன்பினால் உரசியே அவ்வப்போது அவளை நனைத்தபோதும் , ஏனோ ஒருநாள் முகம் சோர்ந்தபடியே என்னிடம் , தவிக்கும் பொது மட்டும் அன்பைத்தருவது அறமாகுமோ ? என்றென்றும் என்னை உன் அன்பு சூழ்ந்து விலகிடாமல் வாழ்வதன்றோ இல்வாழ்க்கை, என்றெனக்கு குறிப்பால் உணர்த்தவே , தோற்றுவித்தேன் பெருமழையை .அருவிகளாய் பெருக்கெடுத்து , ஆறுகளில் நீண்டு , குளங்களிலும் , குட்டைகளிலும் நிறைந்து , என்னவள் முகம் சிரிக்க அன்பினை வாரிக்கொடுத்தேன் . மனம்குளிர்த்தால், செடியின் தோற்றம் மாறி மரமாக மண்ணில் உயர்ந்து நின்றாள் .
மோகம் கொண்டு சிலநேரம் , உறைந்த பனித்துளிகள் கொண்டு அவளை மூடியே, பகல் இரவு கடந்தும் கட்டப்பட்டு கிடந்த பருவகால நினைவுகள் இன்று நினைத்தாலும் சிலிர்க்கச்செய்கிறது .
ஓரிடத்து ஒன்று போல் இருந்திட இயலாத என் பணியில் , என் பயணம் நெடுக்க குளிரூட்ட காடுகளாய் விரிந்தாள் , மிகப்பெரிய மலைகளிலும் விண்ணைமுட்டும் மரமாகவும் , விஸ்வரூபம் கொண்ட விருட்சமாவும் ,பரிணாமம் பல ஏற்றாள் .
சில நேரம் என்னுள் ஏற்படும் மாறுபாட்டால் ,எனக்குள் தோன்றும் வேறுபட்ட நீர்துளிகளால் , நான் இடிந்துரைப்பதும் உண்டு , கோபம் கொண்ட கனல்களால் மின்னல்க்கீற்றுகளை வாரி இரைப்பதும் உண்டு . அதனால் காயம் ஏற்பட்டு அவள் தேகம் கருகியதும் , என் உள்ளம் படபடத்து மீண்டும் , அடை மழை பெய்து , அவளை அனைத்துக்கொள்வதுமுண்டு .என் உள்ளம் அறிந்த குணவதி , அவள் தாயைப்போல பொறுமைக்காப்பவள், என்னை ஏற்றுக்கொள்வாள் .
இப்படி பருவங்களில் சுழற்சியாக ஊடல்க்கொண்டும் காதல் நிறைந்தும் சென்ற எங்கள் பயணத்தில் பல புதிய புதிய முகங்கள் தோன்றிட துவங்கின .மண்ணில் பல உயிர்கள் பிறந்திடவே , நாங்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து , பெற்ற பிள்ளைகளாய் அவர்களை தூக்கி வளர்த்தோம். பறவைகள் வாழ்ந்திட கூடுகளுக்கு இடம் தந்து , விலங்குகள் வாழ்வதற்கு காடுகளில் நிழல் தந்து என்னவள் அனைவரையும் தாயைப்போல காத்து வந்தாள்.உயிர்கள் அனைத்துக்கும் சுவாசக்காற்றினை அவளால் மட்டுமே தர முடிந்தது .மனித இனத்தினின் பிறப்பு முதல் இறப்பு வரை அவன் வாழ பல வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தி மகிழ்ந்திட , அவனுக்கு ஆதரவாய் கரம் கொடுத்தாள் .இவள் மட்டுமின்றி மனிதனுக்கு முன் தோன்றிய உயிர்கள் அனைத்துமே அவனின் கட்டுப்பாட்டுக்கு அன்புடன் இசைந்தன. அவன் பயணிக்க குதிரைகளும் , போர்க்களத்தில் சக்திக்கொண்ட யானைகளும் , வேகத்தில் சிறந்த புலிகளும், விவேகமும் உள்ள சிங்ககளும் அவன் செய்கைக்கு செயலாற்றிக்கொண்டிருந்தன .சிறு சிறு பறவைகளும் தூது போனது , அணிலும் ,குரங்குகளும் கூட சேனைப்படைகளாக வாழ்ந்தன .இருந்தும் என்ன பயன் ?
காலஓட்டத்தில் ,இன்று மனிதனின் ஆறாம் அறிவு மங்கித்தான் போய்விட்டது . அவன் வாழ்வதற்கு இன்றி , பிழைப்பதற்கு மட்டுமே அறிவைப் பயன்படுத்தி வருகிறான் . அவனை அண்டி இருந்த விலங்குகளை வேட்டையாடியும் , சிறைபிடித்து காட்சிப்பொருளாக்கி சரணாலயம் என்று பெயரிட்டு கட்டணம் வசூலித்தும் வருகின்றான் .வான்வெளியில் ஊர்ந்து நானும் சென்றாலும் விமானம் கொண்டு மோதி,என்னை கிழித்துக்கொண்டு போகின்றான் .ஏவுகணை வீசியும் , அணுஆயுதம் கொண்டும் என்னை தாக்க ஆயுதங்கள் பல செய்கின்றான் .
அதோடு விடவில்லை அவன் ஆடம்பர குடிலுக்கு இடமில்லை என்றுரைத்து என் நீர்நிலைகளை சூழ்ந்து வாழ்ந்து வந்த என்னவளை என்னைவிட்டு விரட்ட துவங்கியவன் , நாளடைவில் முற்றிலும் அழிக்க துணிவுக்கொண்டான் .

அவள் இருந்த காடுகள் காணாமல் போனது , மனிதன் அவன் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடை உட்கொள்ளவும், உயிர்வாழ ஆக்சிஜனை கொடுக்கவும் என்னவள் தாவரங்களாகவும் , மரங்களெனவும் வாழ்ந்துவந்தாள். உலகில் இயற்கை சமநிலை இருந்தது. ஆனால், இன்று தொழிற்சாலைகளை நிறுவி பெருமளவு கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றுதல் , செயற்கை உரங்களை அதிகளவு பயன்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளிட்டவைகளால் பசுமை இல்ல வாயுக்கள் புவியில் மனிதனால் வெளியேற்றப்படுகின்றது . இதனால் பூமியின் வெப்பநிலை கணிசமாக உயர்ந்துள்ளது .இதன் எதிரொலியாக நான் தோற்றுவித்த ஆறுகள் ,மற்றும் ஏனைய நீராதாரங்கள் நிழலுக்கு வழியின்றி கதிரவனின் கணைகளால் வறட்சி கொண்டு வாடுகின்றது . பசுமை இல்ல வாயுக்கள் எனக்கு மேலுள்ள ஓசோன் படலத்தையே துளையிட்டுக்கொண்டிருக்கின்றது .
அதனைக் கூட உணர்த்துக்கொள்ள முடியவில்லை அந்த சுயநல மனிதனுக்கு .

மனிதர்களால் அதிகரிக்கப்படும் இந்த புவியின் வெப்பநிலை மாற்றத்தால் , கடல் மட்டத்தின் அளவும் உயர்ந்துவிட்டது , வட துருவத்தில் குறைந்து வரும் பனியின் அளவு பின் விளைவுகளாக சுனாமிகளும் , வரலாறுக்கான வெள்ளங்களும் , அவன் இருப்பிடத்தை தேடி வந்துக்கொண்டிருக்கிறது .இயற்கைக்கு இத்தகைய இன்னல் தந்து அதன் இயல்பை மாற்றி வரும் மானிடர்கள் இறைவனை வேண்டுவது இமயமலைக்கு இருசக்கர ஊர்தியில் செல்வது போன்று பயனற்றது .

மனிதனுக்கு ஊட்டச்சத்தை வாரிவழங்கிய வீட்டுவிலங்குகள் இயற்கையை சார்ந்து இருந்ததினால் அதற்கும் அழிவு நிலையே எட்டியுள்ளது .வசதிபடைத்த நகரங்களை தேடி அதில் மட்டுமே குவிந்து வரும் மனிதர்கள் ஏனைய வளம் கொண்ட பூமியினை தரிசாக மாற்றி , அழிவுக்கு வித்திடுகின்றனர்.இதன் விளைவாய் ஏற்பட்டிருக்கும் உணவு பற்றாக்குறையை மீட்டெடுக்க மரபணுக்கள் மாற்றப்பட்ட பசுக்கள் 'ஜெர்சி' பெயரிலும் , நாட்டு கோழிகளை அழித்து அதற்கு பதில் 'சுகுணா' வையும் உணவுகளாக சுவைத்து வருகிறார்கள் . பல உயிரினங்கள் கண்ணுக்கே தெரியாமல் அரிதாய் போய்க்கொண்டிருக்கிறது .மனிதர்கள் உண்ணும் காய் கனிகளும் அவர்களின் அதீத தேவையை பூர்த்தி செய்து அதிக மகசூல் ஈட்டிட மரபணுக்கள் மாற்றப்படுகின்றன .பரிணாம வளர்ச்சிகள் படுகுழியில் அவன் சமூகத்தை இழுத்துக்கொண்டு செல்கின்றது .
அமர்ந்தபடியே ஆட்டிவைக்கும் எண்ணம் கொண்ட மனிதன் நாளை அவன் வாழ்வதற்கு என்ன செய்ய போகிறான் ? மரங்களையோ அழித்துவிட்டான், செயற்கை உரங்கள் கொண்டு மண்வளத்தை மாற்றிட்டான் , நாளை சுவாசிக்க என்ன செய்வான் ? செயற்கை மனிதர்கள் செய்து மண்ணில் உலவ விடுவானோ ?
மனிதனின் செயல்கள் வரம்பு மீறி சென்றுக்கொண்டிருக்கிறது . அன்று கன்றை இழந்த தாய் பசுவிற்கு நீதி தந்த மனிதன் இன்று இந்த விசும்பனுக்கு நீதியினை அருள்வானா?
என்னை குளிரூட்டிய அவளின் முகம் மண்ணில் இனியும் மண்ணில் தோன்றிடுமா ? தனிமையில் வாடி , நினைவுகள் சுமந்து தவிக்கின்றேன் . என் பாதியில் மீண்டும் மரங்கள் தென்படுமா ?
இதன் விடையும் , உலகின் நாளைய நிலையும் இனி உங்கள் கையில் .
- திவ்யா சத்யப்ரகாஷ்
செம்பாக்கம், சென்னை,
9500370282 .

எழுதியவர் : திவ்யா சத்ய பிரகாஷ் (24-Nov-17, 12:36 pm)
சேர்த்தது : DivyaPrakash56
பார்வை : 105

மேலே