கொல்லாமையே அறத்தின் கூரணி – அணியறுபது 11

நேரிசை வெண்பா

கொல்லாமை யேஅறத்தின் கூரணி; கோதுபுறம்
சொல்லாமை யேசிறப்பின் சூழணி – நில்லாமை
உள்ளலே உண்மை உயர்வுக் கணி;புகழ்க்கு
வள்ளலே வாய்த்த அணி. 11 அணியறுபது

- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்

பொருளுரை:

எவ்வுயிரையும் கொல்லாமையே அறத்திற்குச் சிறந்த அழகு;

புறங்கூறாதிருத்தலே சிறப்பான சூழலைத் தரும் அழகாகும்;

நிலையில்லாத நிலைமைகளை உணர்ந்து அறிதலே உண்மையான உயர்வுக்கு அழகு; வள்ளன்மைப் பண்பே புகழ்ச்சி அளிக்கும் உண்மையான அழகு.

பாவங்களில் கொலை செய்தல் கொடியது; கொல்லாத அருள் நீர்மையே புண்ணியங்களுள் தலைசிறந்தது. உணவுக்காக மிருகங்களையும், பகைமையின் காரணமாகவும், பொருளுக்காகவும் மக்கள் உயிரையும் கொல்லலாகாது.

புறங்கூறுதல் என்பது காணாத போது பிறரை இகழ்ந்து பேசுவதாகும். இதனை, ‘புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்’ என்று திருவள்ளுவர் கூறுகிறார்..

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும். 183 புறங்கூறாமை

ஒருவன் உயர்ந்த குடியில் பிறந்தவன் என்பதற்குச் சிறந்த அடையாளம் யாரையும் இகழ்ந்து கூறாமையேயாம். இதனையே புறம் சொல்லாமையே சிறப்பின் சூழணி எனப்பட்டது.

’நீரில் குமிழி இளமை நிறை செல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில்
எழுத்து ஆகும் யாக்கை’

என்று நீதிநெறி விளக்கம், கடவுள் வாழ்த்துப் பாடலில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் கூறுகிறார், நிலையானது, நிலையில்லாதது என்பதை அறிந்து தெளிந்து கொள்வதே உண்மையான விவேகமாம். நிலையாய் உள்ளதைத் தழுவி உய்யும்படி பெரியோர்கள் உலக மக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

உள்ளம் உவந்து எல்லோரும் புகழ்வது வள்ளல்களையே. ஆதலால், பெருந்தன்மையுடன் வறிஞர்க்கு ஈந்து புகழ் பெறும்படி சொல்லப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Nov-17, 10:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

மேலே