தன்வாய்க்கு நாவென்றியே அணியாம் நன்கு – அணியறுபது 16

நேரிசை வெண்பா

கேட்கும் செவிக்கணிகோள் கேளாமை; கேள்கிளருந்
தோட்குச் சிறந்தவணி தோலாமை; - தாட்கணி
தாவென் றொருவனிடஞ் சாராமை; தன்வாய்க்கு
நாவென்றி யேஅணியாம் நன்கு. 16 அணியறுபது

- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஒருவனுடைய கேட்கும் செவிகளுக்கு அழகு கோள் உரைகளைக் கேளாமை; தோள்களுக்கு அழகு தோல்வி நேராமை;

தாள்களுக்கு அழகு தா என்று எவரிடமும் சென்று நில்லாமை; அவரவர் வாய்க்கு அழகு எப்பொழுதும் நாவடக்கமின்றிப் பேசும் தீய சொற்களை விடுத்து வெல்லவுரிய நல்ல சொற்கள் பேசுவதே ஆகும்.

பிறரைக் குறித்துப் பிழையாய்ப் பழித்துச் சொல்வது கோள்; பழியான கோளைக் கேட்பதால் உள்ளங் கெடும்; அதனால் இழிவே நேரும். பாழான அந்தக் கோள் வாயனை நெருங்க விடாமல் அகற்றி விடுவதே நல்லது.

வாள் செய்யும் கொலையை விட கோள் செய்யும் துன்பம் பெரியது; கண்ணெதிரே நீட்டுகின்ற வாளுக்குத் தப்பி விடலாம்; காணாமல் மூட்டுகிற கோளுக்குத் தப்ப முடியாது;

தேளும் கொடும்பாம்பும் தீண்டிமிதித் தாலன்றி
வாளாமெய் தீண்டி வருத்தாவே; - கோளார்ந்த
புல்லியரோ வீணே புனிதர்க்கும் பொய்ப்பழிமேல்
சொல்லி விளைப்பர் துயர். 142 தருமதீபிகை

தேளைத் தொட்டால் கொட்டும்; பாம்பை மிதித்தால் கடிக்கும்; கோளர் பொல்லாதவற்றைக் கூறி, யாதொரு இடரும் செய்யாத நல்லவர்க்கும் கொடிய கேடுகளை விளைத்து விடுவர். ஆதலால், இத்தீய நெஞ்சரைத் தீயினும் அஞ்ச வேண்டும்.

எப்பொழுதும் தோல்வியடையாமல் வெற்றி பெற்று வருவதே ஒருவன் தோள் வலிமைக்கு மேன்மை;

தாயென்று நீஒன்றைத் தான்கேட்டாய்; அப்பொழுதே
வாவென்ற சொல்லும்போம்; மானம்போம்; - போயென்று
கூறும் கொடுமொழியும் கூடுமே; யாதுறினும்
ஏறாதே யாண்டும் இரவு. தருமதீபிகை 267 இரப்பு

தா என்று ஒருவரிடம் இரந்து போய் நிற்கும் பொழுதே, உன் மானம் போய், உன்னை வா என்று சொல்லும் வரவேற்பு இல்லாமல் போகும்; போய்விடு வராதே என்ற சுடு சொல்லையும் கேட்க நேரிடும்.

இரந்து வாழப் பிறரிடம் விழைந்து செல்வது பெரிய இழிவு; அவ்வாறு போகாமல் ஆனவரையும் முயன்று வாழ்பவனே மானமும் மதிப்பும் உடையவனாய் உயர்ந்து வருகிறான்.

தாளாண்மையே தாளுக்கு அழகு; அதை விட்டு வீணே இரக்க நேரின் ஈனமே விழையும்.

சொல்லும் சொல்லால் மனிதனது உள்ளநிலை உணர வருகிறது; தன் சொல் எப்பொழுதும் மேன்மை உடையதாய் விளங்கி வர வாழ்பவனே மேலோனாய்த் துலங்கி வருகிறான்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. 645 சொல்வன்மை

நாம் சொல்லும் இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்பதை அறிந்து அதன் பிறகு சொல்லக் கருதியதைச் சொல்ல வேண்டும்.

Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own.

ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும் என்பார்கள். வெல்லுகிற சொல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக நம் நாட்டில் வழங்கிவரும் இந்தச் சுவையான பழங்காலத்துக் கதையைப் படிக்கலாம்; ரசிக்கலாம்; குறளோடு பொருத்திப் பார்த்துப் பயன்கொள்ளலாம்.

(அன்பர் மதுரை நாகமலை புதுக்கோட்டை திரு.மு.பழனிச்சாமி அவர்கள் வலைத்தளத்தில் எழுதியதிலிருந்து)

மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன்; அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவதுதான் பொருத்தமாக இருக்கும்' என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐயாயிரம் பொற்காசுகள் அளித்து மீனைப் பெற்றுக்கொண்டார்.

இதைப் பார்த்த அரசி ' அய்யோ. ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா? அதை திரும்ப வாங்குங்கள்" என்று ஆத்திரப்பட்டாள். .'முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல' என்று மன்னர் மறுத்தார்.

'சரி, அவனைக் கூப்பிட்டு இந்த மீன் ஆணா பெண்ணா என்று கேளுங்கள்; ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும், பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன்தான் வேண்டும் என்றும் கேளுங்கள். எப்படியும்அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்' என்றார் அரசி.

மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்விக் கணையை மகாராணி தொடுத்தார். அவன் உஷாராக பதில் சொன்னான் 'இது ஆணுமில்லை பெண்ணுமில்லை' இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன். அதனால் தான் அதைமன்னருக்குக் கொண்டு வந்தேன் என்றான். இந்த பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐயாயிரம் பொற்காசுகளை மீனவனுக்கு அளித்தார்.

அதிலிருந்து ஒரு காசு தரையில்விழுந்து ஓடியது. மீனவன் அதைத் தேடி எடுத்தான். மகாராணி ஆத்திரமும், ஆதங்கமுமாக, "'பேராசைக்காரன்.! கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விட்டானா பாருங்கள்' என்றாள் மன்னரிடம்.

மீனவன் நிதானமாக, "நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி! அந்த நாணயத்தில் மன்னரின் உருவம்பொறித்து இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால் கூட என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது' என்றான்.

இதனால் மேலும் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐயாயிரம் பொற்காசுகளை அவனுக்குக் கொடுத்தார். இப்பொழுது மகாராணி, திகைத்துப் போய் நின்றார்.

இந்த மீனவன் எந்தப் பல்கலைக் கழகத்திலும் படித்து முனைவர் பட்டம் பெற்றவனல்ல. இயல்பாகத் தனக்கு வாய்த்த திறமையைக் கொண்டும், உலகம் என்னும் பரந்த பல்கலைக் கழகத்தில் தான் பெற்ற பட்டறிவைக் கொண்டும் “வெல்லும் சொல்லறிந்து” இப்படித்தான் பேச வேண்டுமென்று உலகிற்குக் கற்றுத் தந்த பேராசிரியப் பெருந்தகைதான் இந்த மீனவ நண்பன். இக்கதையிலிருந்து ‘தன்வாய்க்கு நாவென்றியே அணியாம் நன்கு’ என்பதை அறிந்து கொள்ளலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Dec-17, 12:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 67

மேலே