பிச்சைக்காரன்

அவனுக்கு மொத்தம் மூன்று கைகள்.வாழ்வின் துக்கங்களை அதிகம் சந்தித்துப் பழகிய அவனை நம்பியவர்கள் கைவிட்டாலும் அவன் ஒருபோதும் நம்பிக்கையை விட்டதில்லை.இந்தியாவில் படித்து விட்டு வேளையெல்லாம் வேலை தேடும் 30 சதவீத இளைஞர்களும் அவனும் ஒருவன்.

"டேய் நேரம் ஆச்சு சீக்கரம் கிளம்பு,இந்த வேலைலயாவது சேரப் பாரு,நீதி நியாயம்னு பேசி இந்த வாட்டியும் கோட்ட விற்றதா" என்ற அம்மாவின் அர்ச்சனைகள் கேட்டவுடன் சட்டை பொத்தானை சரி செய்து கொண்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தான் அருண்.

"அதெல்லாம் என் திறமைக்கு ஏத்த வேலையாய் கிடைக்கும் மா" என்றான்.அருணின் சொற்களில் நம்பிக்கை கலந்திருந்தது.அவன் அம்மாவின் முக சுழிப்பில் ஒருவித சோகம் கலந்திருந்தது.அருணுக்கு அறிவும் ஆற்றலும் போதவில்லை என்றில்லை,குருட்டு உலகத்தை பற்றிய படிப்பினை போதவில்லை.காந்தியின் படத்தினை அவன் சுவர்களில் மட்டுமே காண்கிறான்.அதிகாரத்தின் வாரிசுகள் அதனை தம் கையருகில் காண ஆசைப்படுவதை அவன் இன்னும் முழுமையாக உணரவில்லை.இந்தியாவின் பெருபான்மையான தவறுகள் கவருகளால் தான் நடைபெறுகின்றன.அதற்கு பலியாகும் திறமையான அப்பாவிகளுள் அருணும் ஒருவன்.

"அண்ணா,செமஸ்டர் எக்ஸாம்க்கு பீஸ் கட்ட பணம் கேட்டேனே,இன்னைக்கு தான் கடைசி நாள்..." என்று கேட்டாள் அருணின் தந்தை சுமித்ரா.

"ஏய்!எத்தனை தடவ சொல்லிருக்கேன் அண்ணன் கிட்ட கேக்காத என்கிட்டே கேளுனு.." என்று சொன்ன அவன் அம்மா தன் முந்தானையில் சுத்தி வைத்திருந்த 1000 ரூபாயை எடுத்து அவளிடம் கொடுக்கிறாள்.பேச இயலா பறவைகள் போல உள்ளுக்குள் அழுகிறான் அருண்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் அருணின் அப்பா இறந்த போது இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்த அவனுக்கும்,சுமித்ராவுக்கும் எல்லாமே அவர்கள் அம்மா தான்.இன்றும் வேலை செய்து தன் குழந்தைகளை காப்பாற்றி வருகிறார்.ஏதும் பேசாமல் அப்பாவின் புகைப்படத்திற்கு முன்னின்று வணங்கி விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான் அருண்.ஏழைகளின் வீடு இரண்டு அறைகளுக்கு மேல் இருந்தால் அது ஆடம்பரம் ஆகிவிடுமே.

அரைமணி நேர பேருந்து நெரிசல்களுக்கு பிறகு தனக்கு வேலை தரப்போகும் நிறுவனத்தின் ஒய்யார கட்டிடம் கண்டு வியக்கிறான்.ஆயிரம் கனவுகளோடும்,புது உத்வேகத்தோடும் உள்ளே சென்று தன் போட்டியாளர்களோடு காத்திருக்கிறான்."மிஸ்டர் சந்தோஷ்...,மிஸ்.மாலினி ..."என ஒவ்வொருவர் பெயரும் அழைக்கப்பட்டது.அருணை பொறுத்தவரை இந்த வேலை அவனுக்கு நிச்சயமாக கிடைத்துவிடும் என்று நம்பினான்.காரணம்,அந்த நிறுவனம் எதிர்பார்க்கும் எல்லா தகுதிகளும் அவனிடத்தில் இருந்தன.கூடவே அந்த வேலையை பெற வேண்டும் என்பதில் அவனுக்கு அதீத கவனமும்,உழைப்பும் இருந்தது.இன்னும் கொஞ்ச நேரம் தான் தன் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கப்போகிறது என்று உற்சாகத்தில் இருந்தான்.வறுமையெல்லாம் இன்றோடு தீரப்போகிறது என்று ஆனந்தம் கொண்டிருந்தான்.அந்த மகிழ்ச்சி அவனிடத்தில் தன்னை முழுமைப்படுத்திக் கொள்வதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் ப்யூன் நிதானமாக வந்து அந்த சுவற்றில் எதையோ ஒட்டிவிட்டு அவசரமாக செல்வதை அங்கிருந்த எல்லோரும் கவனிக்கிறார்கள்.அதில் மிஸ்டர்.பரத் அந்த பணிக்கு தெரிந்தெடுக்க பட்டுவிட்டதாகவும் அனைவர்க்கும் நன்றி என்று எழுதப் பட்டிருந்தது.கூடியிருந்த கூட்டம் புலம்பிக் கொண்டே நகரத் தொடங்கியது.

"ரெக்கமென்டெசன் சார்,இப்பெல்லாம் படிப்புக்கு எங்க வேலை கிடைக்குது.." என்ற நொந்து கொண்டு போன இருவரின் வார்த்தைகள் அருணின் காதுகளில் ஒலித்தன.சோகங்கள் மட்டுமே சொந்தமென வாழ்கின்றவனை தளர்ந்த நடையோடு பேருந்து நிறுத்த இருக்கையில் அமர்கிறான்.அது தான் இதுவரையில் அவனை நிராகரிக்காத ஒரே சிம்மாசனம்.அது ஒரு வசந்த மாலை பொழுது.அவனையும் காற்றையும் தவிர அங்கு ஒருவருமில்லை.அவனது இதயமே சில்லு சில்லை உடைந்து போயிருந்தது.அவன் நம்பிக்கையை விவாகரத்து செய்து மீளா துயரில் இருக்கிறான்.காதலின் வலிகளை காட்டிலும் அவமானத்தின் வலிகளுக்கு வலிமை அதிகம்.ஒவ்வொரு தனிமனிதனுக்குள் புதைந்துபோயிருக்கின்ற தோல்வியின் சுவடுகளும்,அவமானத்தின் அஸ்திவாரங்களும் எழுத்திற்கு அப்பாற்பட்டவை.வாழ்வின் எல்லா கதவுகளும் மூடப்பட்டதாய் நினைத்த அவனுக்கு தற்கொலை தான் மூட கதவாக இருந்தது.பெரும் புயல் எவ்வளவு பெரிய மரத்தையும் சாய்த்துவிடுவதை போல,காலம் எவ்வளவு பெரிய அறிஞனையும் தன் கால்களை பிடிக்க செய்து விடுகிறது.அதற்கு அவன் மட்டும் விதிவிலக்கா என்ன?நம்பிக்கையை மறுதலித்துவிட்டு ஒரு குழந்தையை போல மெல்ல மெல்ல நடக்கிறான் ஒரு நடைப்பிணமாக.தனிமைக்கு மட்டுமல்ல சில வேதனைகளுக்கும் இங்கே மருந்தில்லை.

ஆனால்,முயற்சி அவ்வளவு எளிதாக உருவனை கைவிடுவதில்லை.தன் காலடி ஓசைகளை கேட்டுக் கொண்டே சென்ற அருணின் பார்வை அந்த மனிதனை படம் பிடிக்கிறது.சீவாத தலை,அருவெறுப்பான முகம்,வெள்ளை தாடி,கையில் ,நீளமான இரண்டு கைகள் ஒரு கையில் கம்பு,இனொன்றில் திருவோடு , ஒரே ஒரு கால்...கண்டுகொண்டான் அவன் பிச்சைக்காரன்.வருபவர் போவரிடம் எல்லாம் "ஐயா,தர்மம் பண்ணுங்க ..."என்று ஓயாது குரல் கொடுத்துக் கொணடிருந்தான்.அருண் அவனருகில் சென்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"ஐயா,மகாராசா தர்மம் பண்ணுங்க..." என்று திருவோடை நீட்டினான் அவன்.தவணை முறையில் சிரித்தான் அருண்.அது தத்துவ சிரிப்பு."பிச்சையெடுக்குறேயே,நீ சந்தோசமா தா இருக்கியா ..." வினவினான் அருண்.

மெல்லிய குரலில் அந்த பிச்சைக்காரன் "எனக்கென்ன ராசா..எனக்கு ஒரு கால் இல்லைனு ந கவலைப்படாதே இல்லை.தினமும் பிச்சை எடுப்பேன்.யாராவது அஞ்சொ பத்தோ போடுவாங்க.அதை வச்சுட்டு ஒரு நாள் கஞ்சி குடுச்சுக்குவேன்.சில நாள் தட்டுல ஒரு ரூபா கூட இருக்காது .ராத்திரி பசி வயித்த கிள்ளும்.செத்தரலாம்னு கூட தோணும்.ஆனா ஆண்டவன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.நாளைக்கு நிச்சயம் நல்லது நடக்கும்னு தோணும்.அந்த மாறி நேரத்துல தண்ணியை குடிச்சுட்டு தூங்குவ.காலையில் கடவுளை நினச்சுட்டு தொழிலை தொடங்குவேன்.நாலு காசு கிடைக்கும் அதுல சந்தோசமா இருப்பேன் ..." என்று சொல்லி முடித்தான்.

அருணின் மனம் அவனுக்கு தெரியாமலேயே அவனை எங்கோ கூட்டி சென்றது.இத்தனை படித்தும் என்ன பிரயோஜனம் அந்த ஒற்றை கால் பிச்சைக்காரனிடம் இருக்கும் ஒன்று தன்னிடத்தில் இல்லையே என்று வருத்தப்பட்டான்.அந்த பிச்சைக்காரன் எத்தனை நாட்கள் பசியோடு கழித்திருப்பான்,எதனை முறை நிராகரிக்கப்பட்ருப்பான்.ஆனாலும் அவன் வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருக்கிறதே.அவனை எது இன்னும் உயிர்ப்பித்து வைத்து கொண்டிருக்கிறது என்ற சிந்தனைகளால் சிறைப்படுத்தப்படுகிறான்.

"ராசா..என்ன யோசனை..." குழம்பினான் பிச்சைக்காரன்.

"ஒண்ணுமில்ல,ஒருவகையில் நீயும் நானும் ஒன்று தான்.உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் படிப்பு மட்டும் தான்.வீட்டில் அம்மா தங்கைக்கு அடுத்த வாய் சோறு போடாமல் வேலை தேடித் கொண்டிருப்பவன் பிச்சைக்காரன் தானே.." என்று தன் வருத்தத்தை பதிவு செய்து விட்டு நகர்கிறான்.இப்போது அவனது நடையில் சோர்வு இல்லை.மாறாக புது உத்வேகம் காணப்பட்டது.கண்களிலே பிரகாசம் இருந்தது.இதய ஓட்டத்தில் லட்சிய வெறி கலந்திருந்தது.தன் அலைபேசியை எடுத்து ஏதேதோ எண்களை அழுத்தி பேசினான் "மாமா,நான் அருண் பேசுறேன்.தண்ணீர் கேன் பிசினஸ் செய்ய ஆள் வேணும் னு சொன்னிங்களே,நாளைக்கே நான் வீட்டுக்கு வரேன்...." பூரிப்போடு பேசினான்.

அருண் கொடுத்துச் சென்ற பத்து ரூபாயை பார்த்து கொண்டே சிந்தித்தான் அந்த பிச்சைக்காரன் "வறுமை இப்படி ஒருவனை படுத்தும் போதும் அவன் நம்மள மாதிரி பிச்சை எடுக்கலையே.நம்ம மட்டும் ஏன் இப்படி ஆகணும்.நாளைக்கே வேலைக்கு ஆள் தேவைனு எழுதிப் போட்ட அந்த கம்பெனியில் எதாவது வேலை கேட்டுப் போவோம்" என்ற தன் தீர்மானத்திற்கு பின்னால் அமைதியாய் உறங்கச் சென்றான்.

அவனிடமிருந்து இவன் நம்பிக்கையை வாங்கிக் கொண்டான்,இவனிடமிருந்து அவன் தன்மானத்தை வாங்கிக் கொண்டான்.

உங்கள் தோல்விகளின் போது மிக கவனமாக இருங்கள்.ஒவ்வொரு அடியிலும் உங்களுக்கு வேண்டிய மார்கத்தை வாழ்க்கை அருவெறுப்பானவைகளிடத்திலும் ஒளித்துவைத்திருக்கலாம் இல்லையா?



கோவை.சரவண பிரகாஷ்.

எழுதியவர் : சரவண பிரகாஷ் (6-Dec-17, 12:51 pm)
Tanglish : pichaikkaran
பார்வை : 232

மேலே