தியேட்டரிலிருந்து வீட்டுக்கு போவதற்குள்
தியேட்டரிலிருந்து வீட்டுக்கு போவதற்குள்
நள்ளிரவு தாண்டி இருக்கலாம், ஒவ்வொரு சந்து வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாலும் ஏதோ ஒரு இருட்டு சந்துக்குள் யாரேனும் என்னை வழி மறிக்கலாம், வன்முறையில் ஈடுபடலாம், கையில் ஒரு வாட்ச், பர்சில் அறுநூறு பணம், அது போக ஒரு வெள்ளி அரைஞான் கயிறு, அது அம்மா செய்து ஒருவருக்கும் தெரியாமல் இந்த நாற்பத்தைந்து வயதில் எனக்கு கொடுத்தது.
இவ்வளவுதான் எனது சொத்து, என்றாலும் என்னை வழி மறித்து கொள்ளையடிக்க வருபவன், இதை எல்லாம் விசாரித்து கொண்டிருப்பானா? பணம் எடு இல்லையென்றால்..” அவன் கையில் கட்டாயம் கத்தி வைத்திருப்பான்.
கத்தியின் மிணுமினுப்பு போதும் என் மனதுக்கு மாரடைப்பு வர !
இன்னும் எவ்வளவு தூரம் மனதுக்குள் கணக்கிட்டேன், இந்த சந்து முடிந்தவுடன் கொஞ்சம் நீண்ட தூரம் நேரான பாதை வரும் அதன் பின், குடியிருப்பு காலனி, அங்கு எல்லாமே மாடி வீடுகளாய் இருக்கும். அதன் இருட்டு சந்து இதை விட பயமாக இருக்குமே.
ஏன் அந்த நீண்ட பாதை மட்டுமென்ன? இரண்டு பக்கமும் காட்டு செடிகள், இயற்கை உபாதையை கழிக்க இருபக்கமும் உள் புதர்கள். யாராவது ஒளிந்திருந் தாலும் தெரியப்போவதில்லை.
அலுவலகம் விட்டு வெளியே கிளம்பியதும், பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருந்த நண்பன் மாரியப்பன் “நண்பா” பிலிம் போலாமா?
ஐயோ வேணம்ப்பா, இப்பவே ஏழு மணியாயிடுச்சு, சலிப்பாய் சொன்னாலும், நாளைக்கு “சண்டேதானப்பா” காலையில மெதுவா எந்திரிச்சா என்னப்பா?
எனக்கும் கொஞ்சம் சபலம் எட்டி பார்த்தது. அவன் வீடு ‘தியேட்டரை’ ஒட்டியே இருந்தது என்பது அப்போது எனக்கு ஞாபகத்தில் உதிக்கவில்லை. தியேட்டரில் இருந்து முக்கால் மணி நேர நடை தூரம் ‘என் வீடு’ என்பதும் ஞாபகம் வரவில்லை.
திரைப்படம் பார்ப்பதில் விருப்பம் அதிகம் உள்ளவன் என்பதும் மாரியப்பனுக்கு நன்கு தெரியும்.காரணம் அடிக்கடி அலுவலகத்தில் மதியம் மட்டம் போட்டு நிறைய தியேட்டர்களுக்கு இருவரும் சென்றிருக்கிறோம். ஆனால் அதுவெல்லாம் மதியம் அல்லது மாட்னி ஷோ என்னும் அளவில்தான்.
சரி படம் பார்த்தபின் வரப்போகும் சிக்கல்கள் எதுவும் எனக்கு ஞாபகம் வராததால் ஏழு மணிக்கு தியேட்டர் வாசலில் இருந்தோம். படம் அடுத்த காட்சி ஒன்பது மணிக்கு என்பதால் பொழுதை போக்க அப்படியே கொஞ்ச தூரம் நடந்து ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, வீட்டுக்கு போனும் செய்து விட்டேன். வருவதற்கு இன்று நேரமாகும் என்று.
மனைவிக்கு என்னுடைய “வீக்னெஸ்” தெரியும் என்றுதான் நினைக்கிறேன், போனை அணைத்த வேகத்தில் தெரிந்தது போல இருந்தது. மனதை தேற்றி கொண்டேன்.
படம் முடிந்து ஐந்து நிமிடம் ஒன்றாய் பேசிக்கொண்டு வந்த நண்பன “சரிப்பா திங்கள் கிழமை” பார்க்கலாம் சொல்லி விட்டு அவன் வீட்டு பக்கம் திரும்பி சென்ற பின்னால், நான் தனியாக நிற்கும்போதுதான் தெரிந்தது, நான் செய்த தவறு.
“அடடா” வண்டி கூட எடுத்து வரவில்லை. இருப்பது ஒரு வண்டி அதுவும் மனைவி ஓட்டி செல்வதற்காக வாங்கிய “ஸ்கூட்டி” வீட்டுக்கு போய் மனைவியிடம் சினிமாவுக்கு செல்வதாக சொல்லி விட்டு கெளரவமாக அவளது வண்டியையாவது வாங்கி கொண்டு வந்திருக்கலாம்.
இனி என்ன சொல்லி என்ன பிரயோசனம்? வெறுப்புடன் மனதுக்குள் பயத்துடன் இதோ ஒவ்வொரு தெருவையும் கடந்து சந்து திரும்பும்போது…உயிர் போய் உயிர் வருகிறது.
இடையில் ‘நாயின்’ உறுமல்கள், எப்பொழுது வேண்டுமானாலும் என் மீது பாய்ந்து விடலாம். முதல் சந்தில் திரும்பியபோதே சற்று தொலைவில் இரண்டு நாய்கள் என்னை உற்று பார்த்தபடி நின்று கொண்டிருக்க…
நான் அப்படியே தயங்கி தயங்கி.. சட்டென வீட்டின் ஒருமாய் இரும்பு கம்பியொன்றை சாய்த்து வைத்திருந்ததை பார்த்தேன், சுமார் நான்கு அடி இருக்கும். அதை கையில் எடுத்து வைத்து கொண்டேன்.
கையில் ஆயுதம் வந்ததும் ஒரு தைரியம், நாய்கள் இரண்டும் என்னை சற்று முறைத்து விட்டு என்ன நினைத்ததோ தங்களுக்குள் கொஞ்சி விளையடியபடி அங்கிருந்து நகர்ந்து விட்டன. நான் இரும்பு கம்பியின் தைரியத்தில் சற்று தூரம் வந்த பின் தான் “அடடா இந்த கம்பி” அந்த வீட்டில் இருந்ததே, ஞாபகம் வந்தது. மறுபடி வைக்க அங்கு போக முடியுமா?
அதை அப்படியே ஒரு ஓரமாய் போட்டு விட்டு மீண்டும் அடுத்த சந்தின் திருப்பத்தில் மெல்லிய தெரு விளக்கொளி நுழைய, கிசு கிசுவென்ற குரல் அந்த இருட்டு சந்துக்குள். யாரோ வர்ற மாதிரி இருக்கு..
என் மனதிற்குள் ஒரு உதறல், “அடடா கையில் இருந்த கம்பியை போட்டு விட்டோமே’ நினைப்பதற்குள் “சிலீர்” என்னும் சத்தம். அந்த இடமே கும்மிருட்டாக,
அப்பொழுதுதான் எனக்கு உரைத்தது யாருக்கோ நாம் இடைஞ்சலாக இருக்க, தெரு விளக்கை உடைத்து விட்டார்கள்.
“அடப்பாவிகளா” மனதுக்குள் பயந்து கொண்டே குனிந்த தலை நிமிராமல் அந்த சந்து வீதியையும் கடந்து சென்றேன்.
மறு சந்தில் திரும்பி நான்கைந்து அடிகள்தான் வைத்திருப்பேன், திடீரென ஓடி வந்த நாய்கள் இரண்டு மூன்றை கண்டவன் “குபீரென” அந்த வீட்டின் உட்புற சுவரின் மீது ஏறி அப்படியே உள்புறமாய் கஷ்டப்பட்டு இறங்கி விட்டேன்.
நாய்கள் இரண்டு மூன்று நிமிடங்கள் குரைத்து அங்கிருந்து சென்றபின் தான் என்னை நினைத்து பார்க்க பகீரென்றது. ஐயோ அடுத்த வீட்டு காம்பவுண்டு சுவற்றுக்குள் இருக்கிறோமே..!
பயத்துடன் தெருவை பார்த்தவன் எப்படியோ சிரமபட்டு மீண்டும் அந்த சுவர் வழியாகாவே ஏறி தெருவுக்குள் இறங்கினேன். இனி இங்கு நின்றால் சிக்கல்தான். வேக வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.
இந்த தெருவின் முக்கு என்னை என்ன செய்யபோகிறதோ? பயத்துடன் திரும்ப, சொல்லி வைத்தது போல அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு மாடுகள் என் மீது உரசி தன்னுடைய வாலால் அப்பொழுதுதான் “பீய்ச்சிகொண்டிருந்த சிறு நீரை” பன்னீராய் தெளித்தது.
சே…சே.. சலிப்புடன் என்னையறியாமல் வாய் விட்டு சொல்ல யாருப்பா? ஒரு குரல் அதை ஒட்டிய வீட்டுக்குள்ளிருந்து.
என்ன பதில் சொல்வது? அங்கிருந்த மாடுகள் தண்ணீர் குடிக்க வைத்திருந்த தொட்டியின் அருகே மறைந்து கொண்டேன். ஏன் மறைய வேண்டும்? என்னும் கேள்வியை எனக்குள் கேட்டு கொள்ளாமல்.
எப்படியோ வரிசையாய் ஒவ்வொரு இடைஞ்சல்களையும் கடந்து முன்னர் சொன்னேனே அந்த நேர் பாதைக்கு வந்திருக்கிறேன். இனிமேல்தான் ஜாக்கிரதையாக கடக்க வேண்டும். இரண்டு பக்கமும் புதர் அல்லவா?
திடீர் என சைக்கிள் மணி ஓசை ஒன்று என் பின்புறமிருந்து பயத்துடன் திரும்ப சைக்கிளில் வந்தவனும் என்னை பார்த்ததும் சட்டென சைக்கிளை அப்படியே நிறுத்தி என்னயே பயத்துடன் கூர்ந்து பார்த்தபடி..
இருவருமே பயத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்தபடி ஐந்து நிமிடம் நின்றிருக்க, திடீரென அந்த சைக்கிள்காரன் சட்டென தன் சைக்கிளை திருப்பி கொண்டு வேகமாக அங்கிருந்து சென்று விட்டான்.
கண் மூடி கண் திறப்பதற்குள் எல்லாம் நடந்து விட்டது. இனி இங்கிருந்தால் ஆபத்து, வேகமாக அந்த நீளமான பதையை கடந்து அடுத்த குடியிருப்பு காலனிக்குள் நுழைந்தேன்.
பெரும் பெரும் கட்டிடங்களாக இருக்க, அங்கங்கு கட்டிலில் சிலர் தூங்கி கொண்டிருந்தார்கள், நான் அவர்களை எழுப்பி தேவையற்ற கேள்விகளை எதிர் கொள்ள பயந்து வேகவேகமாய் கால் மிதிக்கும் சத்தம் கூட கேட்காமல் வீட்டை நோக்கி நடந்தேன்.
கதவை திறக்க பத்து நிமிடங்கள் ஆனது, அதற்குள் இரண்டு முறை உள்புறமாய் இருந்த மனைவிக்கு “செல்போனில் அழைத்து” அவள் வந்து கதவை திறந்த பொழுது கொஞ்சம் கூட கருணையோ, அன்போ இல்லாத “அக்னிபார்வையாய்” திறந்தவள் வேகமாய் போய் படுக்கை அறை கதவை சாத்தி கொண்டாள்.
நான் அதற்கு மேல் குளியலறைக்கு சென்று (முன் கதவை சாத்தி விட்டுத்தான்), போய் குளித்து உடை மாற்றி வந்து படுத்தபோது விடியலின் உணர்வுகள் வெளிப்புறமாய் கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டது.
வழக்கம் போல தாமதமாக வரும் விழிப்பு அன்று சீக்கிரமே வந்து விட ஆறு மணிக்கே “நேற்று கோபித்து கொண்ட மனைவியை” சமாதானப்படுத்த ஒரு பையுடன் இதோ இரவு வந்த வழியாகவே கறிக்கடைக்கு வந்து கொண்டிருக்கிறேன்.
அங்கங்கு ஒரு சிலர் கூடி பேசிக்கொண்டிருந்ததும் காதில் விழுந்தது, “நேத்து எவனோ திருடன் நோட்டம் விட்டுருப்பான்” போலயிருக்கு, முன்னாடி இருந்த தெருவுல வீட்டு முன்னாடி வச்சிருந்த ஒரு “கம்பிய காணோமாம்”, தேடி பார்த்தா கொச தூரம் தள்ளி ஓரமா இருந்துச்சாம். யாரை போட்டு தள்றதுக்கு அதைய கொண்டு வந்தானோ? நம்ம ரோட்டுல நேத்து இராத்திரி வேலை முடிஞ்சு நம்ம “ராசன்” சைக்கிள்ள வரும் போது பாத்து பயந்துட்டு அப்படியே போயிட்டானாம். காலையில அஞ்சு மணிக்குத்தான் வந்து சொன்னான்.
என்னை அவர்கள் வழக்கம்போல வழிப்போக்கனாகவோ, அல்லது இங்குதான் குடியிருப்பவன் என்னும் நோக்கிலோ பார்த்து கொண்டிருந்தாலும், எனக்கென்னவோ நேற்று வந்த திருடன் அல்லது கொலைக்காரன் நான்தான் என்னும் நோக்கத்தில் பார்க்கிறார்களோ என்று நினைக்கத்தான் தோன்றியது.