வாழத் தெரியாதவன்
தன் பால்யத்தில்
தடம் புரண்டவன்
தவறி புத்தகமெனும்
பூக்கடலில் விழுந்தான்.
தமிழின் உதவியுடன்
கடுந்தவம் புரிந்தான்
அக்கடலில் அவன்
பல முத்தெடுத்தான்
அவன் மூழ்கிய
புத்தகங்களில்
நல்லவர்களில்
கெட்டவரில்லை,
கெட்டவரில்
நல்லவரில்லை.
அனைவரும்
தனித்தறியப்பட்டனர்.
முதல் தவறு..
பாதிவழிப் பயணத்திலேயே
எதார்த்தம் என்கிற
கடற்கரை அடைந்தான்.
பட்டிக்காட்டான் பார்த்த
வானூர்தியாய் - அங்கே
அவன் கண்டதனைத்தும்
அதிசயமே...
ஆண்-பெண் தோழமை,
யாரும் யாருக்கும்
உண்மையாயிருக்க
உத்தரவாதமில்லை.
உன்னதமற்ற உறவுகள்,
உண்மை உருவில்
பொய்கள் உலாவின,
நல்லவரில்
கெட்டவர் கலப்படம்.
தனித்தறிய முடியவில்லை.
முற்றிலும்
முரண்தொடையானது.
அங்கே வாழத்தகுதி
அப்படியிருப்பதுதான்
என உணர்ந்து
அவன் உருமாற முயன்றான்.
முடியவில்லை...
கடலில் நீந்தியவன்
கரையில் திணறினான்.
தொடக்கத்தில் வியப்பாய்த் தெரிந்தவன் தொடர்ந்ததில்
தொல்லையாகிப் போனான்.
அவசியமெனக் கண்ட
அதிசயங்கள்
அனாவசியங்களானது.
பொய் பேச வரவில்லை
பிதற்றினான்...
அவன் செய்த அன்பெல்லாம்
அலட்சியம் கண்டது.
விழி பிதுங்கினான்...
கண்ணீரில் கரைந்தான்.
அவன் செய்த தவறு
அன்பன்றி வேறொன்றில்லையென
உணராத பித்தன்
வாழத் தெரியாதவனென்ற
பட்ட மேற்படிப்பு முடித்தான்.
தன் பால்யத்தில்
தவறி விழுந்த கடலில்
தற்பொழுது
தற்கொலை செய்துகொண்டான்.