நான் விரும்பும் கவிஞர் பாரதியார்
' நாம் எல்லாம் பாரதி வழி வந்தவர்கள் ' - திரு. ஜெயகாந்தன்.
' சூரியனின் பாதிப்பு இல்லாமல் பூமியில் உயிர்கள் இல்லை. அதுபோல் பாரதியின் பாதிப்பு இல்லாமல் தமிழ் எழுத்தாளன் பாரதிக்கு பின் இல்லை' - கவிப்பேரரசு வைரமுத்து.
தமிழ் எழுத்து மேல் பற்றும், தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வத்துக்கு வித்தும் எனக்கு காரணம் பாரதி தான். அவரை பற்றி சொல்ல எனக்கு ஒரு நாள் போதாது. அவ்வளவு கதைகள் இருக்கிறது.
உலகம் ஒரு மாயை என்பது அத்வைத சித்தாந்தம். உண்மை தான். நொடிக்கு ஒரு முறை தன்னையே மாற்றிக் கொண்டேதான் இருக்கிறது. இது தான் உலகம் இவ்வாறு தான் மக்கள் என்று மானுடத்தின் மேல் வெறுப்பும் ஏமாற்றமும் கொண்டு, நீ மட்டும் ஏன் ஒருவன் உத்தமனாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுதெல்லாம் நல்லவர்களை நம் கண்ணில் காட்டிக் விட்டு நமது துர் எண்ணத்தை உடைத்து விடுகிறது இம்மாய உலகம்.
பாரதியோடு எனது அறிமுகம்:
தமிழை நேசிப்பவர்கள் பாரதியை நேசிக்காமல் இருக்க முடியாது. புதுமையை ரசிப்பவர்கள் பாரதியை ரசிக்காமல் இருக்க முடியாது. மடமையை வசை பாடுபவர்கள் பாரதிக்கு துதி பாடாது இருக்க முடியாது. தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை பிரதிபலிக்க விரும்பும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பாரதி இருக்கிறான்.
குழந்தைகளுக்கு தமிழ் கற்று தர வேண்டும் என்ற ஆசையில் அவர்களுக்கு கற்று தரப்படுவதில் முதன்மையானது ஆத்திச்சூடி. அதற்கு அடுத்து கற்று தரப்படுவது பாரதியின் பாடல்கள் தான். குழந்தை பருவத்தின் போது குழந்தைகளுக்கு "Fancy Dress" எனப்படும் ஒரு வகை போட்டி நடைபெறும். அதில் பல வேடமணிந்து சிறார்கள் ஏதேனும் வீர வசனமோ, கவிதையோ சொல்லிவிட்டு செல்வர். அதில் வரும் கதாபாத்திரங்களில் கண்டிப்பாக ஒரு பாரதியார் இருக்கத்தான் செய்வார்.
" அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலே
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதிலையே"
என்ற வரிகளை கேட்க்கையில் யார் மனதில் தான் வீரம் முளையாமால் இருக்கும்.
நான் பாரதி குறித்து அறிந்தது எனது ஐந்தாம் வகுப்பில் தான். மாணாக்கர்க்கு பள்ளியில் பாட்டு போட்டி, பேச்சு போட்டி என்ற போட்டிகள் நடைபெறும். அப்படி நடந்த ஒரு போட்டியில் தான் நான் பாட வேண்டும் என்ற ஆசையில், எனக்கு "வந்தே மாதரம்" என்ற ஒரு பாரதி பாடல் கற்பிக்க பட்டது.
அது தான் எனக்கு முதன் முதலில் பாரதி குறித்த அறிமுகம். அதற்கு அடுத்து நான் பாரதீயத்தில் மூழ்கியது எனது ஆறாம் வகுப்பின் போது நடந்த பேச்சு போட்டியில் தான். அப்போது நான் தேர்ந்தெடுத்த தலைப்பு " நான் விரும்பும் கவிஞர் - பாரதியார்".
பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன என்று வகுப்பில் அறிவிக்கப்பட்டது. நான் எனக்கே தெரியாமல் பெயரை கொடுத்து விட்டேன். எல்லாம் உள்ளூர ஒரு ஊந்துதல் தான். வீட்டில் வந்து சொல்லியாகி விட்டது. பேச்சு போட்டிக்கு உரை தயார்செய்ய வீட்டில் ஆயத்த வேலைகள் தொடர்நதன.
உரை ஒன்று நாமே தயார் செய்தால் என்ன என்ற அடிப்படையில் எனது தமக்கையாரும் தாயாரும் கண்ணில் படும் தினசரிகளிலும், வார இதழையும், வீட்டிலே இருந்த "பாரதியார் கவிதைகள்" கொண்டு ஏதேனும் உரை உருவாக்க முயன்றனர். உரை சற்றே நிறைவான நிலையில் என்னை படித்துக் காட்ட சொன்னார்கள் . நான் படிக்க அவர்கள் கேட்டு பேச்சுரை சற்று வீரியம் குறைவாக இருக்கிறதே என்று கருதினர்.
மீண்டும் உரையை தயாரிக்க தேடுதல் வேட்டை தொடர்ந்தது. அப்போது தான் ஒரு பள்ளி ஆண்டு புத்தகத்தில் பாரதி குறித்து கவிதை நடையில் இடம்பெற்ற ஒரு கட்டுரையை கண்டெடுத்தோம். எனக்கு அந்த உரை மறந்து போய்விட்டது. ஆனால் அந்த கட்டுரையில் எதுகை மோனையுடன் கூடிய சந்தங்கள் இருக்கும். பிறகு , அதை பேச்சு உரைக்கேற்ப சீர் செய்து அதனை மனப்பாடம் செய்தேன்.
பேச்சு போட்டிகளில் ஒன்று, பேச்சு உரை மனப்பாடமாக செய்தால் மட்டும் போதாது. அந்த உரையை நிகழ்த்தும் போது உணர்ச்சிகள் இருக்க வேண்டும். ஆங்காங்கே ஏற்றம் இறக்கம் இருந்திடல் வேண்டும். ஆங்கங்கே பாவமும் இருந்திட வேண்டும். அதற்கு எனக்கு வீட்டில் மிகுந்த பயிற்சி கொடுக்கப் பட்டது.
அப்போது நான் பாரதியை பற்றியவன் தான். அதற்கு அப்புறம் நானும் அவரை விடவில்லை. அவரும் என்னை விடவில்லை. இருந்தாலும் , அப்போட்டியில் எனக்கு கிட்டியது இரண்டாம் பரிசு தான்.
பள்ளி செய்யுட்கள்:
எனது பள்ளியில் நான் இரண்டாம் மொழியாக தமிழ் பாடத்தையே தேர்ந்தெடுத்தேன். ஆனால் பத்தாம் வகுப்பு வரை தான். அது வரை தமிழன்னையின் கரம் படித்து நடை பயின்ற நான் பின்பு ஏனோ மதிப்பெண்ணிற்காக மதி இழந்து ஏனோ பிரெஞ்சு அன்னையின் மடியில் தவழ்ந்தேன். பிரெஞ்சு மொழியும் என்னை கவரத்தான் செய்தது.
பொதுவாக நான் அறிந்து தமிழ் பாட நூல் மூன்று நூல்கள் கொண்டதாகவே அமையும். மூல நூல் (செய்யுள் + உரைநடை), இலக்கண நூல், துணை பாட நூல் என்று. அதில் செய்யுள் பகுதியும் உரைநடை பகுதியும் பெரும் பகுதிகளாய் கொண்டவையாக இருக்கும். செய்யுள் இப்படியாக அமைக்கப் பட்டிருக்கும். முதலில் வாழ்த்து பாடல்களுடன் ஆரம்பிக்கும் ( கடவுள் வாழ்த்து, மொழி வாழ்த்து), பின்பு கண்டிப்பாக திருக்குறள் இருந்திடும். அதற்க்கு அடுத்து சங்ககாலத்து அற நூல்களான நாலடியாரோ, நான்மணிக்கடிகைஇலிருந்து ஓரிரு செய்யுட்கள் இடம்பெறும். அதன் பின் காவிய இலக்கியங்களான கம்பராமயணம் , சீவக சிந்தாமணி, தேம்பாவணி இவைகளில் ஒன்று இருந்திடும். பின்பு சிற்றிலக்கிய தொகுப்புகளான பிள்ளைத்தமிழ், பரணி, உலா என்பவையும் , வழிப்பாட்டு பாடல்களும், பல்சுவை பாடல்களின் தொகுப்புகளும் இருந்திடும். இவைகளில் தவறாமல் எங்கேனும் பாரதியார் பாடல்கள் இருக்கத்தான் செய்யும். எனக்கு இன்றும் நினைவில் இருக்கும் கடவுள் வாழ்த்து பாடல் ஒன்றை பகிர விரும்புகிறேன்.
" எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவை எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவம் எல்லாம்
பரிதி முன் பனியை போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய் !!"
பாரதி படம்
பாரதியின் பாடல்களும் கவிதைகளுமாய் பாரதியை தெரிந்து கொண்ட எனக்கு பாரதி என்ற மனிதன் தெரிந்தது பாரதி என்ற படம் வந்த போது தான். பள்ளிகளில் புத்தகத்தில் வரும் ஆசிரியர் குறிப்பின் மூலம் தெரிந்து கொண்ட விடயங்கள் அவர் தந்தையார் பெயர் சின்னசாமி என்பதும், அவர் எட்டயபுரத்தில் பிறந்தார் என்றும், சிறிது காலம் பாண்டிச்சேரியில் வாழ்ந்து வந்தார் என்பதை தவிர நான் வேறொன்றும் அறிந்ததில்லை. ஆனால் அப்படம் பாரதியின் வாழ்க்கையை ஓரளவுக்கு படம் பிடித்து காட்டியது. அவர் எந்த எந்த பத்திரிகையில் பணி புரிந்தார் என்பதையும், எங்கெங்கு எல்லாம் வாழ்ந்தார் , எப்படி எல்லாம் அல்லல் உற்றார் என்பதை அவை எனக்கு உணரச் செய்தது. எனக்கு அப்படத்தை இன்னொரு காரணத்துக்க்காகவும் பிடிக்கும். அதில் வரும் பாடல்களுக்காகவும், இசையிற்க்காகவும் . இசைஞானி அவர்கள் பாரதியின் பாடல்களை எப்போதும் கேட்டிடும் கர்நாடக கீர்த்தனை பாணியில் அல்லாது ஜன ரஞ்சக ராகத்தில் அமைத்திருப்பார்.
தமிழ் மேடைப் பேச்சுக்கள்:
நான் என்னுடைய கல்லூரி படிப்பை முடித்து சென்னையில் வேலை பார்த்த காலங்களில் வேலை முடிந்து அலுப்பின் காரணமாய் இணையத்திலே பல காணொளிகளை காண்பேன். இதனுள் மேலை நாட்டு படங்களின் தொகுப்புகளும், இசைகளும் , கிலுகிலுப்புகளும் அடங்கும். பார்த்துக் கொண்டே இருக்கையில் எனது தமிழார்வம் என்னை தொற்றிக்கொண்டது. இதன் அடிப்படையில் தமிழ் மேடைப் பேச்சுகளை கேட்கும் ஓரு வகை ஈர்ப்பு என்னுள் வளர்ந்தது.
நான் ரசித்து கேட்டவை திரு. நெல்லை கண்ணன் அவர்கள் நிகழ்த்திய உரையினை. அவர் தலைப்பு ஒன்றை எடுத்துக் கொண்டால் அதில் மட்டும் பவனி வருபவர் கிடையாது. அதற்க்கு சம்மந்தமாய் என்ன என்ன உண்டோ அவை எல்லாத்தையும் அடுக்குவார், விவரிப்பார், சில சமயம் அபிநயமும் பிடிப்பார். அந்த வரிசையில் அவர் செங்கல்பட்டில் பாரதி விழ ஒன்றில் அவர் நிகழ்த்திய உரை ஒன்று என்னுள் இருந்த பாரதி என்னும் அக்கினி குஞ்சை பெருங்கனலாய் மாற்றியது. அன்றில்லிருந்து தான் எனக்கும் மீண்டும் பாரதி பித்து பிடித்தது.
நான் நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சை ரசிப்பவன். எப்போதும் மேடை பேச்சாளர்களை குறித்து இருந்திடும் குறை. அவர்கள் புலவர் போல் கவிதை நடையிலும், சில செய்யுட்களை பேச்சு வழக்கில் அடுக்குவதிலும், ஆங்காங்கே எதார்த்தமாய் பேசி சிரிக்க வைக்க தெரிவதை தவிர்த்து வேறு எதுவும் அவர்கட்கு தெரியாது என்பது. அவர்கள் சிந்தனையாளர்களாக இருந்திட மாட்டர். உண்மை தான் ஒத்துக் கொள்கிறேன். இருப்பினும் எனது தமிழார்வம் மீண்டும் வளர காரணமானவர் நெல்லை கண்ணன் தான்.
பாரதி குறித்த எனது வெட்டி பந்தாக்கள்:
பொதுவாக அன்பு மிகுகிற போது அறிவு குன்றத்தான் செய்யும் போலும். அது தான் என்னிடமும் நிகழ்ந்தது. பாரதியிடம் அன்பு மிகுந்ததால் சில பொருளற்ற பெருமிதங்கள் என்னிடம் உண்டு. நான் பாண்டிச்சேரியின் குடிமகன். தவறாக எண்ண வேண்டாம்... நான் குடிக்கா குடிமகன்.
அதே போல் என் தந்தையாரின் பூர்விகம் திருநெல்வேலியை அருகில் திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார் திருநகரி. இவ்விரு ஊருக்கும் பாரதிக்கும் பெருத்த சம்பந்தம் உண்டு.
பொதுவாக தமிழ்நாடை பெரும்பாலும் இரு பிரிவுகளாக பிரிப்பர். வட தமிழ்நாடு என்றும், தென் தமிழ்நாடு என்றும். தென்தமிழகம் என்பது மதுரை, திருநெல்வேலியிலிருந்து எனலாம்.
மனிதன் இப்போதெல்லாம் தனது சகல அடையாளத்தையும் துறக்க நினைக்கிறேன். ஆனால் அவன் மனதில் அவ்வப்போது சமயம் சார்ந்த, ஊர் சார்ந்த அடையாளங்கள் எழத்தான் செய்கிறது. வெளிநாடு சென்றால் இந்தியன் என்ற அடையாளம் சற்று அதிகம் தெரியும். இந்தியா குறித்தும், இந்தியர்கள் குறித்தும் ஆர்வமும் கர்வமும் மனதில் எழும். வடநாடு சென்றால் தென்னிந்தியன், தமிழன் என்ற பெருமிதமும், வெளியூர் சென்றால் நம்மூர் காரனை கண்டால் தன் சொந்தமென அவனை கருதி கொஞ்சி கூலாவதுமாய் இருந்திடும்.
நான் என்னதான் பிறந்து வளர்ந்தது படித்தது பாண்டிச்சேரி என்றாலும் என்னுள் நான் தெக்கத்தி காரன் என்ற அடையாளம் எப்போதும் இருந்திடும். நம்முடைய ஊர்க்காரனை சந்தித்தால் போறும் இயல்பாய் தெக்கத்தி தமிழ் நாவில் சரளமாய் வரும்.
அந்த அடிப்படையில் பாரதியும் தெக்கத்தி காரன் தான். எட்டயபுரத்தில் உதித்தவன் ஆயிற்றே. அதனால் ஒரு வெட்டி பெருமிதம் எனக்கு உண்டு. மடமை தான். இருந்தாலும் அது ஒரு வகை பெருமிதம் தருவதாய் ஒரு பிரமை என்னிடம் .
இது மட்டுமா? பாரதியின் வாழ்க்கையில் பண்டிசேரியும் பெரிய பங்கு ஆற்றிருக்கே. என்ன தான் பாரதி மிகுந்த அவதி பட்டார், பெருத்த பொருள் கஷ்ட்டம் பட்டார் என்பவை எப்போதும் சொல்லபட்டாலும், பாண்டிச்சேரியில் சற்று இன்பமாய் தான் வாழ்ந்தார் என்பது என் எண்ணம்.
ஏன் அப்படி ? அங்கு வெள்ளையர்கள் தொல்லை இல்லையா? பாண்டிச்சேரி வாசிகள் இல்லக்கிய ஆர்வம் கொண்டவர்களா ? என்ற கேள்விகள் மனதில் எழலாம். இல்லை. இங்கும் ஆங்கிலேய ஒற்றர்கள் தொல்லை இருக்க தான் செய்தது. ஆனால் பாரதியின் நண்பர்கள் வட்டம் அதற்க்கு காரணம்.
பாரதியின் பட்டாளம்:
பாரதி பாண்டிச்சேரியில் தான் சாக்தம் எனப்படும் சக்தி உபாசனை செய்ய ஆரம்பித்தார் என்று கேள்வி பட்டிருக்கிறேன். அதுவும் அரவிந்த் பாபு எனப்படும் அரவிந்தர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் .
பாண்டிச்சேரியில் அவருக்கு கிட்டிய நண்பர்கள் வட்டம் என்று பார்த்தால் அரவிந்தர், வ.வே.சு. அய்யர், பாரதிதாசன் என்று அடுக்கி கொண்டே செல்லலாம். இதில் பாரதிதாசனை தவிர்த்து மீதம் மூவரும் இந்திய விடுதலைக்காக போராடிய தீவிரவாததிகள் என்று திலகரின் பக்கம் நின்றவர்கள்.
இதில் வ.வே.சு. அய்யர் அவர்களை பற்றி சொல்லியே ஆக வேண்டும். இவர் மல்யுத்தம், களரிபயத்து, துப்பாக்கி சுடுதல் போன்றவைகளை தவிர்த்து இலக்கியத்தில் கரை தேர்ந்தவர் என்று கேள்வி பட்டிருக்கிறேன். இவர் ஆங்கில இலக்கியமும் தமிழ் இலக்கியத்திலும் நன்கு தேர்ச்சி பெற்றவர். எப்படி தமிழ் பத்திரிக்கை வரலாற்றில் கார்ட்டூன் என்னும் கேலி சித்திரத்தை முதன்முதலில் கொண்டுவந்தவர் பாரதி என்கிறோமோ அது போன்று தமிழ் இலக்கிய வரலாற்றில் விமர்சன ("Critic ") முறையை கொண்டு வந்தவர் வ.வே.சு. அய்யர். அவர் கம்பராமாயணத்துக்கு "கம்பரசம்" என்னும் உரை இன்னும் பெயர் பெற்று விளங்குகிறது.
பாண்டிச்சேரியில் வேதபுரிஸ்வரர் எனப்படும் ஈஸ்வர தர்மராஜர் ஆலயம் ஒன்று இருக்கிறது. அதற்கு ஒட்டினாற் போல் இருக்கும் தெருவுக்கு ஈஸ்வரன் கோயில் தெரு எனப்படும் ஈச்வர தர்மராஜர் தெரு உண்டு. நான் அடிக்கடி அந்த கோயிலிற்கு சென்றிருக்கிறேன். அந்த தெருவில் தான் பாரதியும் வாழ்ந்தார். இதனால் தான் என்னவோ பாரதி பாண்டிச்சேரியை பாண்டிச்சேரி என்று அழைக்காது வேதபுரம் என்று அழைப்பார். அவர் பாடல்களில் அடிக்கடி வேதபுரம் என்று வரும்.
அவர் அடிக்கடி முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு தோட்டத்தில் அவர் நண்பர்களோடு கூடுவார். அங்கு தான் கண்ணன் பாட்டு , குயில் பாட்டு போன்றவை இயற்றப்பெற்றது என்றும் கேள்வி பட்டிருக்கிறேன்.
பாரதியின் சரிதை:
பாரதி வெறும் கவியன்று. அவன் சிறந்த உரைநடை ஆசிரியன் கூட. அவர் வாழ்க்கை வரலாற்றை திரு. வா.ரா. என்று அழைக்கப்படும் வ.ராமஸ்வாமி ஐயங்கார் என்பவர் எழுதினார். அவை பாரதியுடன் அவர் நெருங்கி பழகிய அனுபவங்களையே எழுதினார். இதுவுமே பாரதி பாண்டிச்சேரியில் இருந்த வாழ்க்கையை விவரிப்பது.
சரிதை இப்படியாக ஆரம்பிக்கும். முதன் முதலில் வ. ரா. பாரதியார் பாண்டிச்சேரியில் இருக்கும் அவரது வீட்டிற்கு யாரோ நண்பர் அனுப்பி வைத்ததின் பெயரில் வருவார். பாரதி அவ்வீட்டின் மாடியில் தன் நண்பர்கள் புழை சூழ சம்பாஷணை நிகழ்த்த்திக் கொண்டு இருப்பார். உள்ளே வந்த வ.ரா. தன்னை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்துக் கொள்வார்.
தீடிர் என்று சினம் கொண்டு அங்கு கூடி இருந்த நண்பர்களிடம் வந்திருக்கும் புதிய நண்பர் ஆங்கிலத்தில் அருமையாக பேசுகிறார். அதனால் அவருடன் தனக்கு ஏதும் சம்மதம் இல்லை என்று சொல்லிவிடுவார்.
சொன்ன பின் அவர் இயற்றிய பாடல் தான் "மறவன் பாட்டு" என்பது.
அந்த கதை முழுவதும் எப்படி பிரெஞ்சு அரசின் உருதுணையில் ஆங்கிலேய ஒற்றர்கள் பாரதியை பின் தொடர்ந்தது, அரவிந்தர், வ.வே.சு. அய்யருடன் அவர் நடத்திய உரையாடல்கள், பத்திரிகைகளில் ஊழியம் செய்தது, பாரதிதாசன் உடனான நட்பு என்று அமையும். அவ்வபோது பாரதியின் குறும்பு, வீரம், சாதுர்யம் என பல தருணங்கள் வரும்.
பாரதிக்கு அஞ்சலி:
பாரதி இப்பூவுலகில் உதித்தது டிசம்பர் 11, 1882. நான் மேலே குறிபிட்டது போல் பாரதியின் பாதிப்பு இல்லாமல் எந்த படைப்பாளியும் இல்லை. இடது வலது பேதம் இல்லாமல் அனைவருடைய உள்ளத்திலும் பாரதி உறையத்தான் செய்கிறார். பாரதிதாசன், ஜீவானந்தம், ஜெயகாந்தன் என்று அடுக்கி கொண்டே போகலாம்.
எனக்கு இன்னும் மனதில் உருத்துவது என்னவென்றால், தமிழ்க்காக தன்னுயுயிரையே கொடுத்து வாழ்ந்த மனிதனுக்கு இன்னும் முறையான மதிப்பை தராது இருத்தல் தான். சாதிகளையும், குல பேதங்களையும் சாடி எழுதியும் அவரை இன்னும் தமிழராக பார்க்க மறுக்கும் மனப்பாங்கு இன்னும் இருக்க தான் செய்கிறது.