அழகாக இருக்க அளவாக உண்ணுங்கள்
எண் சாண் உடம்புக்கு வயிறும் பிரதானம்தான். நாக்குக்கு கீழே செல்வதைப் பற்றி நமக்கென்ன கவலை என்று இருப்பது, நோய்களை ரத்தினக் கம்பளமிட்டு வரவேற்பதற்குச் சமம். நோய்களுக்கு நோ என்ட்ரி சொல்ல ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் அவசியம். ஆரோக்கியமான குடும்பங்கள் சமையலறையில்தான் உருவாகின்றன.
1 சமச்சீரான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். சமச்சீரான உணவு என்பது கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து அடங்கியது. எனவே, உணவைக் காய்கறி, கீரை, அரிசி அல்லது கோதுமை என அனைத்தும் உள்ளதாகத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
2 செயற்கையான பழரச பானங்கள், குளிர்பானங்கள், சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட பாக்கெட் உணவுகள், அதிக மசாலா சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
3 மூன்று வேளை உண்ணாமல் உணவை ஆறு வேளையாகப் பிரித்துச் சாப்பிடுவது நல்லது. மூன்று வேளை உண்ணுவதாக இருந்தால், நான்கு மணி நேர இடைவேளையில் சாப்பிட வேண்டும். காலை உணவை அதிகமாகவும், மதியம் மிதமாகவும் இரவு குறைவாகவும் உட்கொள்ள வேண்டும்.
4 காலை மட்டும் அல்ல, எந்த வேளை உணவையும் எந்தக் காரணம் கொண்டும் தவிர்க்க வேண்டாம். காலை, மதியம், இரவு குறித்த நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.
5 காலை நான்கு இட்லிகள், காய்கறிகள் சேர்க்கப்பட்ட சாம்பார், ஒரு டம்ளர் பால் அருந்தலாம். காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் முன்பு, ஏதாவது ஒரு பழத்தை ஜூஸாகக் குடிக்காமல் அப்படியே மென்று சாப்பிட வேண்டும். அல்லது ஃபுரூட் சாலட்டாகச் சாப்பிட வேண்டும். இதனால், தாடை தசைக்கள் வலுவாகும். பழங்களின் நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கும்.
6 மதியம் அளவான சாப்பாட்டுடன் காய்கறிகள் நிறைய சேர்க்கப்பட்ட சாம்பார், கீரை, ரசம், தயிர் எனச் சாப்பிட வேண்டும்.
7 மாலை 4 மணி அளவில் முளைக்கட்டிய பயறை, வேகவைத்துச் சாப்பிடலாம். இரவு அளவாகச் சாப்பிடுவது நல்லது. இதனால், அஜீரணம், தூக்கம் கெடுதல் போன்ற சிக்கல்கள் ஏற்படாது. உடலும் தேவையற்ற கலோரி சேர்வதால் பருமனாகாமல் இருக்கும். இரவில் படுக்கப்போகும் முன்பு பால் அருந்த வேண்டும்.
8 டீ, காபி போன்றவற்றை ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட வேண்டும். அதாவது, காலை காபி என்றால் மாலை டீ என்றோ அல்லது காலை மாலை இருவேளையும் ஏதேனும் ஒன்றை மட்டுமோ சாப்பிட வேண்டும். அதற்கு மேல் சாப்பிடுவது, அந்தப் பழக்கத்துக்கு நம்மை அடிமையாக்கி நம் உணவுப்பழக்கத்தைச் சீர்குலைக்கும்.
9 குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை என்றால், வேறு வேறு வடிவங்களில் உணவுகளை செய்து தர வேண்டும். முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டாம். இதனால், பிற்காலத்தில் அவர்கள் அந்த உணவை உண்ணும் பழக்கம் இல்லாதவர்களாக மாறிவிட வாய்ப்பு உண்டு.
10 தினமும் ஒரு டீஸ்பூன் நட்ஸ் வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாதாம், பிஸ்தா, அக்ரூட், முந்திரி என அனைத்தும் கலந்த நட்ஸில் ஒரு டீஸ்பூன் சாப்பிடுவது உடலுக்குத் தேவையான சத்துக்கள் சேர்த்துப் பலத்தைக் கூட்டும்.