கிராம வளர்ச்சி திட்டம்

தமிழ்நாட்டிலுள்ள 12,524 ஊராட்சிகளிலும் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், கிராம மக்களுக்குக் குடிநீர் வழங்கும் மேநீர்த்தேக்க இயக்குநர்கள், கிராமங்களைத் தூய்மையாக வைத்திருக்கும் வகையில் தமிழக அரசு ஆணையிட்டு நியமித்த துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோரைக் கொண்டு ஊராட்சி நிர்வாகம் செயல்படுகிறது. பல்லாண்டுங்களாக மேநீர் தேக்க இயக்குநர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன. பல் வேறு திட்டங்களில் கட்டப்படும் மேநீர் தேக்கங்கள் மேநீர் தேக்க இயக்குநர் இன்றிசரியாக இயக்கப்படாமல் உள்ளன. இது யானை வாங்கி விட்டு அங்குசம் வாங்கத்தயங்கும் நிலையைப் போன்றது.

ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி நிர்வாகத்தைக் கண்காணித்து செம்மைப்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் நடத்தி திட்டங்களை வகுத்து அமல்படுத்தும் வகையில் வட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி) என இரு அலுவலர் களின் தலைமையில் துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், களப்பணியாளர்களான ஊர்நல அலுவலர்கள், பதிவறை எழுத்தர்கள், அலுவலக உதவியாளர்கள், பொறியியல் பிரிவின் பொறியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், சாலை ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு இத்துறை இயங்குகிறது. ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்பது பழமொழி. ‘ஊராட்சி செயலரின்றி ஊர்கள் இயங்காது’ என்பது புதுமொழி. எந்த திட்டமாக இருந்தாலும்; ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சித் தலைவர் மூலமாக சங்கிலித் தொடராய் மக்களை இறுதியில் சென்று சேர்கிறது எனில் மிகையன்று. ஊர்களின் வேராய் ஊராட்சி செய லாளர்கள் திகழ்கின்றனர்.வாராது வந்த மாமணியாய் ‘மகாத் மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், 02.02.2006 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இடதுசாரிக் கட்சிகளின் குரல் ஓங்கி ஒலித்த அக்கால கட்டத்தில் திட்டம் சட்டமாக்கப்பட்டு சிறப்பான உட்கூறுகள் இடம் பெற்றன. குடும்பம் ஒன்றுக்கு 100 நாள் வேலை உத்தரவாதம், மூன்றிலொரு பகுதி பெண்களுக்குக் கட்டாயம் வேலை வழங்குவது, வேலையில்லா காலத்துக்கு நிவாரணம், வேலை செய்யும்போது காயமேற்பட்டால் இலவச சிகிச்சை மற்றும் நிவாரணம், இறந்துவிட்டால் ரூ.25,000 என பல அம்சங்கள் இடம் பெற்றன.

மேலும் இத்திட்டத்தை அமல்படுத்த வட்டார வளர்ச்சிஅலுவலர் நிலையில் வட்டார திட்ட அலுவலர் நியமனத்துக்குச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது. மேலும் ஊழியர்கட்டமைப்பு உள்ளிட்ட நிர்வாக செலவிற்கென 6 சதவீத ஒதுக்கீடு உத்தரவாதப்படுத்தப்பட்ட நிலையிலும் தொடர்ந்துதமிழகத்தை மாறி மாறி ஆட்சிபுரிந்த அரசுகள், கிராம ஊராட்சி நிர்வாகத்தை கவனிக் கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமே இத்திட்டத்தைத் திணித்தன.

எனவே இத்திட்டத்திற்கு முக்கியத்துவம் தர இயலாமல் இத்திட்டம் நீர்த்துப்போக அரசுகளே காரணமாக இருந்தன. ஏரி, குளம், கண் மாய்களைத் தூர் வாருதல், வரத்துக்கால் வாய்களைச் சீர்படுத்துதல் மட்டுமின்றி வேளாண்மைப் பணிகளையும், நில மேம் பாட்டுப் பணிகளையும், பண்ணைக்குட் டைகள் அமைக்கும் பணிகளையும், கட்டு மானப் பணிகளையும் மேற்கொள்ள சட் டத்தில் இடமிருந்தது. ஆனால் 7 ஆண்டுகள் கழித்து 2013-ல் தான் தமிழக அரசு விழித்துக்கொண்டு இத்திட்டத்தில் புதிய நெறிமுறைகளை உருவாக்கியது. தற்போது கிராம சேவை மையங்கள், வட்டார சேவை மையங்கள், அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி மன்ற கட்டிடங்கள் என கட்டுமான பணிகள் விரிவடைந்துள்ளன. இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம் மற்றும் பசுமை வீடுகள் திட்டத் திற்கு 90 மனித நாட்களும் தனிநபர் கழிவறை திட்டத்திற்கு 15 மனித நாட்களும் 100 நாள் வேலை திட்டத்திலிருந்து பயனாளிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இரண்டும் சேர்த்தால் 105 மனித நாட்கள் தேவைப்படுகின்றன.

இதற்கே 100 நாட்கள் போக 5 மனித நாட்கள் குறைக்கப்படுகின்றன.வீடு பெறும் பயனாளிகளுக்கு அந்த நிதியாண்டில் வேலை கிடைக்காது. ஊராட்சி சாலை, ஊராட்சி ஒன்றிய சாலை நெடுஞ்சாலைகளில் மற்றும் ஊராட்சி புறம்போக்கு நிலங்களில் மரக்கன்றுகள் நடும்பணி நடைபெற்று சொத்துக்கள் உருவாக்கப்படுகின்றன. இவை சவால் மிக்க பணிகளாகவே உள்ளன. கட்டுமானப் பணிகளில் 60:40 என்ற விகிதத்தில் மனித உழைப்பும் கட்டுமானப் பொருட்களும் ஈடுபடுத்துவது என்பது சிரமம் மிக்க பணி.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித்திட்டப்பணிகளை மேற்கொண்டு வந்த மக்கள் நலப்பணியாளர்களை ஒருதுளி மையின் மூலமாகவீட்டுக்கனுப்பிவிட்டது அதிமுக அரசு. அவர்களுக்குப் பதிலாக பணிதள பொறுப்பாளர்களை நியமித்த தமிழக அரசுவிசாலப் பார்வையின்றி வீண் ஜம்பத்திற்காக மக்கள் நலப்பணியாளர்களை நீக்கிவிட்டு, வேலை அட்டை மட்டும் இருந்தால் போதுமென்ற ஒற்றைத் தகுதியுடன் பணிதளப் பொறுப் பாளர்களாக மக்கள் பிரதிநிதிகளான தலைவர், துணைத்தலைவர், ஒன்றியக் குழுத் தலைவர்உள்ளிட்டோரின் வாரிசுகளை நியமித் ததனால் இத்திட்டத்தை நேர்மையாக, பிழையின்றி, உரிய ஆவணங்களின் பராமரிப்புடன் அமல்படுத்த இயலவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இத்திட்டத்தின் பலன் பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கே நேரடியாக சென்று கொண்டிருக்கிறது. இத்திட் டத்தை ஒழித்துக் கட்ட மோடி அரசு நிதியை வெட்ட முனைந்தது.

மேலும், 60:40 எனும் விகிதத்தில் மனித உழைப்பு மற்றும் கட்டுமான பொருட்கள் பயன்படுத்தப்படும் நிலையையும் மாற்ற முயற்சித்தது.பலத்த எதிர்ப்பின் காரணமாக அம்முயற்சி முறியடிக்கப்பட்டது. மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வழங்குதல், தெருவிளக்கு வசதி வழங்குதல், சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், சுகாதார வசதியுடன் கழிவறைகளைக் கட்டிக் கொடுத்தல், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், விலையில்லா ஆடுகள், கறவைமாடுகள் போன்ற வற்றுக்குரிய பயனாளிகளைத் தேர்வு செய்தல் போன்றவற்றுக்கு ஊராட்சி மன்றக்கூட்டம், கிராம சபா கூட்டம் ஆகிய கூட்டங்களைக் கூட்டி ஏற்பாடு செய்யும் மகத்தான பணியிலிருந்து வரிவசூல் பணிகளுக்குரிய கேட்பு தயார் செய்து, வசூல் பணியில் ஈடுபட்டு ஊராட்சிக் கணக்கில்செலுத்துவது உள்ளிட்ட எண்ணற்றபணிகளை ஊராட்சி செயலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஊராட்சிக்கும் ஊராட்சி ஒன்றியத்திற்கும் பாலமாகசெயல்பட்டு வரும் ஊராட்சி செயலாளர்களே அனைத்து அலுவலர்களுக்கும் தொடர்பாளர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் 32 பதிவேடுகளை யும் 7 கணக்குகளையும் பராமரித்து வருகின்றனர்.

இளநிலை உதவியாளர்களை விட அதிக பணிச்சுமையுடனும் குறைந்த ஊதியத்துடனும் பணிபுரியும் இவர்களது ஊதிய மாற்ற கோரிக்கையை வலியுறுத்திதொடர் போராட்டங்களை நடத்தி மாதம் ஒன்றுக்கு ரூ.1000 சிறப்புப்படி மட்டுமே பெறமுடிந்தது. ஓய்வுபெறும்போது ரூ.700 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்பட்ட நிலையில் தொடர் போராட்டங்களுக்குப்பின் ரூ.300 மட்டுமே கூடுதலாக்கி ரூ.1000 ஒய்வூதியமாக வழங்கப்படுகிறது. இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியத்தை ஊராட்சி செயலாளர்களின் ஊதியமாக அறிவிக்க வேண்டி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் இடையறாது போராடிவருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டு புதியதாக பொறுப்பேற்கும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்களுக்கு ஒத்துவராத ஊராட்சி செயலாளர்களை நீக்கி விட்டுவேறு நபர்களை நியமிக்கும் போக்கு நிலவியது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் தொடர்ந்து போராடி அவர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கி பணி விதிகளை உருவாக்கும் அர சாணை பெற்றது. மின்னாளுமை நிர்வாகத்தை நோக்கிப் பயணித்துவரும் தமிழக அரசின் திட்டங்களும் மத்திய அரசின் திட்டங்களும் ஏராளமாக இத்துறை மூலம் அமல்படுத்தப் பட்டு வருகின்றன. அனைத்து திட்டங்களும் பயனாளிகள் பட்டியல் உட்பட ஆன்-லைன் மூலம் கணினியில்பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மட்டுமேதொகுப்பூதிய ஊதியத்தில் கணினி உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுப் பணியாற்றி வருகின்றனர். அவர்களைக்காலமுறை ஊதியத்தில் கொண்டு வரவேண்டு மெனத் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இவர்களுக்கு ரூ.11000 மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. அகவிலைப்படியும் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு காலமுறை ஊதியம் என் னும் கோரிக்கையை நிறைவேற்ற அரசு தயாரில்லை. இவர்கள் பணியிடை யிறந்தால் குடும்பநலநிதித் திட்டத்தின்கீழ் கொண்டு வரப்படாமல் அக்குடும்பங்கள் நிர்க்கதியாக விடப்படுகின்றன. அக்குடும்பங்களுக் குத் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் இல்லப் பாதுகாப்பு நிதி அளித்து காத்து வருகிறது.

“தூய்மை பாரத இயக்கம்” என்னும்மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கழிவறைகள் கட்டும் பணியைச் செய்துவருகிறது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை. சுவரொட்டிகள்’, சுவரெழுத்து, நாடகங்கள் ஆகியவற்றின் மூலம் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வட்டார, மாவட்ட முழு சுகாதார ஒருங் கிணைப்பாளர்கள் கடும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அரசு கழிவறைக்கான தொகையை ரூ.12,000 ஆக உயர்த்தியது. 2015ஆம் ஆண்டு தமிழகத்தைப் பொது இடங்களில் மலம், சிறுநீர் கழிக்காத மாநிலமாக தமிழக முதல்வர் அறிவிக்கும் முகத்தான் மிகப்பெரும் இலக்கான 45 இலட்சம் கழிவறைகளை கட்டிமுடிக்க நெருக்கடி தரப்பட்டது. ரூ.12,000 மதிப்பீட்டில் கழிவறை கட்டும் பணியில் ஈடுப்பட்டுள்ள வட்டார மாவட்ட முழு சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் பட்டதாரிகள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பிக்கையுடன் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணியிடை இறந்து விட்டால் கூட குடும்ப நலநிதி திட்டமில்லை.

எனவேவட்டார மாவட்ட முழு சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு முறையே ரூ.15000+ 2000, ரூ.20000+5000 மாத ஊதியம் வழங்கவும், இவர்களுக்கு குடும்ப நல நிதித் திட்டத்தை விரிவுபடுத்தவும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் போராடி வருகிறது. மாவட்டத்திற்கு மாவட்டம் வெவ்வேறான ஊதியம் பெற்றுவந்த நிலையில் பல போராட்டங்களுக்குப் பின் வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரூ.8000+1000 எனவும்மாவட்ட சுகாதார ஒருங்கிணைப் பாளர்களுக்கு ரூ.12000+2000 எனவும் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 11 மாவட்டங்களில் ஏற்க னவே பெற்று வந்த ஊதியத்தைவிட உயர்வுக்கு வழியில்லாமல் போனது. கழிவறைகட்டும் பணியில் இரவு, பகல் பாராது வட் டார மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களும் களப்பணியாளர்களும் கடுமையாக உழைத்து வருகின்றனர். அதன் விளைவாக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சில ஊராட்சிகளைத் தேர்வு செய்து கழிவறை கட்டும் பணி முடிக் கப்பட்டு கடந்த 02.10.2015 காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் பொது இடங்களில் மலம் கழிக்காத ஊராட்சிகளாக அறிவிக்கப் பட்டு பொது மக்கள் உறுதி ஏற்பும் நிகழ்த்தப்பட்டது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஊரக உட்கட்டமைப்புத் திட்டம், ஊரககட்டிடங்கள் கட்டமைப்பு பராமரிப்பு மேம்பாட்டுத் திட்டம், தன்னிறைவுத் திட் டம், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பொது நிதித் திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிகள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், பொது நிதித் திட்டம், தாய் திட்டம் போன்ற திட்டங்கள் டெண்டர் மூலம் அமல்படுத்தப் படுகின்றன. ஆனால் முந்தைய ஆட்சியிலும் நடப்பாட்சியிலும் பெயரளவுக்கே டெண்டர் என்றுள்ளது. அரசியலுக்குட்பட்டு இரண்டு பேர் மட்டுமே டெண்டருக்கு விண்ணப்பிக்கும் சூழல் உருவாக்கப்படுகிறது. வேலைகள் விலை போவதும் சதவீத அடிப்படையில் விற்கப்படுவதும் நிகழ்ந்துவரும் கசப்பான நிஜம்.

இதனால் இயல்பாகவே வேலையின் தரம்குறைகிறது. இதற்கு முடிவுகட்டும் வகையில் கணினி மூலம் மின்னாளுமைடெண்டர் அறிமுகப்படுத்தப்பட வேண்டியதும் கறாராக அமல்படுத்தப்பட வேண்டியதும் இன்றியமையாதது. அத்தகைய இலக்கு நோக்கிப் பயணிக்க வேண்டியதும் அனைவரின் அவசியக் கடமை. முந்தைய ஆட்சிக் காலத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் நூலகங்கள் கட்டப்பட்டன. விலை மதிப்பற்ற நூல்களும் வழங்கப்பட்டன. நூலகத்திற்குரிய நூலகர் பணியிடம் உருவாக்கப்பட்டு பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களையே நியமிக்க வேண்டுமென அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ரூ.750 மாத ஊதியமாக அறிவிக்கப்பட்டது. குறைவான ஊதியம் என்பதால் ஓய்வுபெற்றவர்கள் பணிக்கு வராமல் நூலகங்கள் திறக்கப்படாமலேயேகிடந்தன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் நூலகருக்கான கௌரவ ஊதியம் ரூ.750-லிருந்து ரூ.1500-ஆக உயர்த்தப்பட்டது. எனி னும் ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே நூலகர் களாக பணியாற்ற வேண்டும் எனும் அம்சம் மாற்றப்படவில்லை இதனால் இன்றள வும் பெரும்பான்மையான நூலகங்கள் இயங்காமலேயே உள்ளன. எனவே வேலையற்ற இளைஞர்கள் மற்றும் பெண் கள் மூலம் நூலகங்களை இயங்கச் செய்து அவர்களுக்கு குறைந்தபட்ச கௌரவ ஊதியத்தை ரூ.2000-ஆக உயர்த்தினால் அனைத்து நூலகங்களும் இயங்க வழி வகை ஏற்படும். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் திட்டங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டு அமல் படுத்தப்படும் ஊரக வளர்ச்சித் துறையில் திட்டங்களை அமல்படுத்த போதிய ஊழியர்கள் இல்லை. சுவரின்றி சித்திரம் எழுத அரசு கட்டாயப்படுத்துகிறது. திட்டஇலக்குகளை முடிக்க போதிய காலஅவகாசம் தரப்படுவதில்லை. இதனால்ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் திட்டப்பணிகளைத் தரமாக அமல்படுத்த இயலாத நிலையாக உள்ளது.

மனஉளைச்சல், மனஅழுத்தம் போன்றவை இத்துறை ஊழியர்களிடம் குடிகொண்டு விடுகிறது. உயர் அலுவலர்களின் எல்லை மீறிய தொல்லைகள் சங்கிலித் தொடராய் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களை அலைக்கழிக்கிறது. அதன் நீட்சியாக தற்கொலை, திடீர் மரணம், நோய்வாய்ப் படுதல், மனஉளைச்சல் அடைதல் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஊழியர்கள் பெறும் நெருக்கடியில் உள் ளனர். மேலும் மூன்றடுக்கு ஊராட்சி முறையில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அவர்களின் பினாமிகள் ஆங்காங்கே இத் துறை ஊழியர்களுக்குப் பலவிதங்களில் தொல்லைகள் கொடுத்து அச்சுறுத்தி வருவதும் அவற்றுக்கெதிராக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் போராடி ஊழியர்களை அரண்போல் காத்து வருவதும் கண்கூடு. இந்நிலையில் பணிச்சுமைக்கேற்ற பணியிடங்களை உருவாக்கவும் ஏற்கனவே உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பாமலும் அரசின் ஊழிய விரோதக் கொள்கை நீடிக்கவே செய்கிறது. எனினும்சங்கத்தின் முன் முயற்சியால் தற்போது உள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பணிநிரவல் ஏற்படுத்தி மண்டலதுணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களாக கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டு தற்போது அமலாக்கம் துவக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளை துணை வட்டார வளர்ச்சிஅலுவலர் நிலையில் உள்ள களப்பணியாளர்களுள் நான்கு பேருக்கு பகிர்ந்தளித்து திட்டப்பணிகள் அமலாக்கம் மற் றும் ஊராட்சி நிர்வாகம் ஆகியவற்றைப் பார்வையிட்டு அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களால் ஆய்வு செய்யப்படவுள்ளன.எனவே அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் திட்டப்பணிகளை மூன்றடுக்கு ஊராட்சி மூலம் கடையனுக்கும் கொண்டு சென்று கடைத் தேற்றும் வகையிலும் ஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் திட்டமிட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை 2015-அக்டோபர் 30,31 தேதிகளில் தர்மபுரியில் நடைபெறுகிறது.

தமிழக கிராமங்களின் முகத்தோற்றத்தை மாற்றும் மகத்தான பணியில் அர்ப்பணிப்புணர்வுடன் ஈடுபடவும் உரிமைகளுக்காக களமிறங்கி ஓரணியில் திரண்டுப் போராடவும் ஊராட்சி செயலாளர் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர் வரை பல நிலைகளிலான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஊழியர்கள் அனைவரையும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் அறைகூவி அழைக்கிறது

எழுதியவர் : (14-Dec-17, 5:57 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 2985

சிறந்த கட்டுரைகள்

மேலே