சமுதாய பணி

பந்தலுார்;'மாணவப்பருவத்தில் சமூக பணிகள் மேற்கொள்ள முன்வருவதன் மூலம், எதிர்காலத்தில் சமூகத்தின் மீதான அக்கறை பெருகும்' என, தெரிவிக்கப்பட்டது.பந்தலுார் அருகே, கரியசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கூடலுார் அரசு கலை அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. மூன்று நாட்கள் நடந்த பணியின் இறுதி நாள் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில், ஆசிரியர் செல்வநாயகம் வரவேற்றார்.

பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் தலைமை வகித்து பேசுகையில், ''அரசுப்பள்ளிகள் பொதுவாக பழமையான கட்டடம், புதர்சூழ்ந்த சூழல் என்ற நிலை இருந்தது தற்போது மாற்றம் பெற்று, தனியார் பள்ளி கட்டடங்களை மிஞ்சும் வகையில், அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. அவ்வாறு சிறப்பான முறையில் கட்டப்பட்ட கட்டடங்களை பராமரிக்க அரசு நிதி ஒதுக்கினாலும், அவற்றால் முழுமையான சீரமைப்பு பணி மேற்கொள்ள இயலாது.

''அதனால், நாட்டுநலப்பணி திட்டங்கள் மூலம் இதுபோன்ற சமூக பணிகள் மேற்கொள்வது பாராட்டுக்குரியது. படிக்கும் வயதில், பல்வேறு சிரமப்பட்டு, துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதும், பள்ளி வளாகங்களை சீரமைக்க முன்வருவதும் எதிர்காலத்தில் சமூகத்தின் மீதான அக்கறை பெருகிட ஏதுவாக அமையும்,'' என்றார்.
கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து பேசுகையில்,''கல்லுாரி படிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், தங்கள் வீடுகளுக்கு கூட செல்லாமல், தங்கி இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதும், கிராமங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துவதும் வரவேற்க கூடியது.இதன் மூலம், கெட்ட பழக்கங்கள் மறைந்து, நாட்டின் மீதான ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தும்,'' என்றார்.

மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,''நாட்டு நலப்பணித்திட்டம் மூலம், பள்ளி வளாகம், கிராமங்களை சீரமைத்துள்ளதும், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியதும் நல்ல செயலாகும். இதுபோன்ற நிகழ்வுகள் மூலம், அனைத்து தேவைகளுக்கும் அரசு நிர்வாகத்தை நம்பும் தன்மை மறைந்து, நமக்கு நாமே என்ற செயல் முழுவடிவம் பெறும்,'' என்றார்.தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய கல்லுாரி மாணவர்களை பாராட்டி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மகேஷ்வரனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆசிரியர் மார்கிரேட்மேரி, திட்ட அலுவலர் மகேஷ்வரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி மல்லிகா, செவிலியர் மாரியாய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் மணிவாசகம் நன்றி கூறினார்.

எழுதியவர் : (14-Dec-17, 5:51 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : samuthaaya panay
பார்வை : 1245

சிறந்த கட்டுரைகள்

மேலே