மூதுரைகொள் வாக்குக்கு அணி படிறு வாயாமை – அணியறுபது 17
நேரிசை வெண்பா
மூக்குக் கணிபொடியை மோவாமை; மூதுரைகொள்
வாக்குக் கணிபடிறு வாயாமை; - நோக்கிற்குக்
கூர்ந்து குறிப்பறிந்து கொள்ளலணி; உள்ளத்துக்(கு)
ஆர்ந்த அமைதி யணி. 17 அணியறுபது
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்
பொருளுரை:
மூக்குப் பொடியை நுகராமை மூக்குக்கு அணி; வஞ்சமும், பொய்யும் படியாமை வாக்குக்கு அணி;
கூர்ந்து குறிப்பறிந்து கொள்ளுதல் நோக்குக்கு அணி; உயர்ந்த அமைதி உள்ளத்துக்கு நல்ல அணி.
படிறு – வஞ்சம், பொய்; படிறு படியாமல் வாக்கைப் பாதுகாத்து வருபவர் ஆக்கம் பல அடைவர்;
வாழ்க்கைக்கு இதத்தையும், உயிர்க்குச் சுகத்தையும் நாடி நயந்து கொள்ளவே மனிதனுடைய உறுப்புகள் கூடியிருக்கின்றன;
அங்கங்களைப் பழுதாகப் பங்கப்படுத்தாமல் பாதுகாத்து வருபவரே நயமாய்ப் பயனடைந்து வருகின்றனர்.
தூய வாழ்வு வாழ எண்ணுபவர் புகையிலை, பொடி, சுருட்டு, மது முதலிய மருளான தீய பழக்கங்களைப் பழகார். தம்மை ஒருமுறை பழகியவரை அவை விடாமல் பற்றிக் கொள்ளும்.
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பது பழமொழி. இளமையில் பழகியது சாகும் வரையில் விடாமல் பற்றிக் கொள்கிறது.
எல்லாம் துறந்த துறவிகளும் கூட மூக்குப் பொடியைத் துறக்க முடியாமல் மடியில் சுமந்து மருவி மகிழ்கின்றனர்.
மூக்கிலே பொடியேற மூளையிலே மிடியேறும்;
வாக்கிலே பொய்யேற வாழ்க்கையிலே புலையேறும்;
நோக்கிலே பிழைகளைநேர் நோக்காமல் மனம்போன
போக்கிலே போவதெல்லாம் பொல்லாத புரையாமே!
புறத்தே காணுகின்ற காட்சிகளாலும், வாய்மொழியாலும் பிறருடைய உண்மை நிலைகளை ஓர்ந்து தேர்ந்து கொள்வது குறிப்பு அறிதலாம். இந்த அறிவு மெய்யானதும், மேலான சிறப்புடையதுமாகும்.
ஐயப் படாஅ(து) அகத்த(து) உணர்வானைத்
தெய்வத்தோ(டு) ஒப்பக் கொளல். 702 குறிப்பறிதல்
புறக்குறிப்பால் அகத்தின் இயல்புகளைத் தெளிவாக உனர்பவனைத் தெய்வமாகப் பேணிக் கொள்ல வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
அமைதி என்பது ஆருயிர்க்குப் பேரமுதம். அரிய யோகிகளும், பெரிய ஞானிகளும் பெற்வுரிய பேரின்ப நிலை சித்த சாந்தியே;
புலையான பொறிவெறிகள் நீங்கித் தலையான மெய்யறிவு சார்ந்தவரிடமே நிலையான சாந்திநிலை நிலவ நேர்கிறது; இதையே உள்ளத்துக்கு ஆர்ந்த அமைதி யணி என்கிறார் கவிராஜ பண்டிதர்.