நேர்மையை பறிகொடுத்து பெரும் லாபம்

உடம்பினில் ஒட்டாது ஒட்டினும் நிற்காது
விடமது நிச்சயம் அழித்திடும் சத்தியம்
கடமைக்கே வாழ்வா.. கருத்துடன் வாழ்வா..
உடமையைக் கொடுத்தவன் கற்பித்ததும் இதுவா?

நேர்மைக்கு மதிப்பு எப்போதும் உயரே
நேர்மையை மதிப்போருக்கு உண்மைதான் உயிரே
நேர்வழி நடந்திட குழப்பங்கள் இல்லை
நேர்வழி மறந்திட தொடர்ந்திடும் தொல்லை

கண்ணாடி உடைத்தே தடத்தினில் போட்டிருப்பர்
தாண்டிட‌ நினைத்தாலும் தர்மத்தின் காலுடைப்பர்
மோதிட இதயத்தை இரும்பாக மாற்றிடுவோம்
சாதிக்கும் நேரத்தினில் கரும்பாக இனித்திடுமே

மதிப்பின்றி போனதுவே உலகினில் நேர்மையே
வெட்கமின்றி போனதுவே மனித மனங்களே
தவறே செய்தாலும் சத்தியம் செய்கின்றர்
சாட்சியே சொன்னாலும் பொய்யென உரைக்கின்றர்

குறுக்குவழி வந்தவாழ்வு நிலைத்து நிற்காது
தெருக்குத்தெரு கையேந்த ஒருநாள் வைத்துவிடும்
மறுத்துப்பேச நூறுபேர் உலகினில் உண்டெனினும்
நேர்மையின்றி பெரும்லாபம் கானல்நீரே காட்சிப்பிழையே..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-Dec-17, 10:05 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 73

மேலே