பாரதி போற்றி ஆயிரம் – 10

பாரதி போற்றி ஆயிரம் – 10

பாடல்கள் 62 முதல் 74



கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பாடல்கள் 62 முதல் 74

பாரதி எனும் பெயர் !

பாரதி எனும்பெயரைச் சொல்லு–கெட்ட

பயமெனும் பகைவனை வெல்லு.
நேரினி உனக்குநிகர் இல்லை–உடன்

நீங்கும் அடிமைமனத் தொல்லை.

சுப்ரமண்ய பாரதியின் பாட்டு–பாடிச்

சோம்பல், மனச் சோர்வுகளை ஓட்டு.
ஒப்பரிய தன்மதிப்பை ஊட்டும்–அதுவே

உன்பலத்தை நீஉணரக் காட்டும்.

துள்ளிக் குதித்துவரும் சந்தம்–செயல்

தூண்டித் துணைபுரியச் சொந்தம்.
அள்ளிக் கொடுத்தபெரும் உறவோன்–நம்

அருமைப் பாரதியை மறவோம்.

அன்பு நிறைந்ததமிழ் மொழியில்–செயல்

ஆண்மை குறைந்ததெனும் வழியின்
தென்பு மறைந்துழன்ற போதில்–நல்ல

தீரம் கொடுக்கவந்த தூதன்.

அமைதி குலவும்தமிழ்ச் சொல்லில்–பல

ஆற்றல் புகுத்திவிட்ட வல்லன்
நமது பாரதியின் பாட்டே–தமிழ்

நலத்தைக் காக்கும்ஒரு கோட்டை.

இனிமை யான தமிழ்ப் பா¨–அதில்

‘இல்லை வேகம்’ எனும் ஓசை.
முணகிப் பேசும்ஒரு வகையை–வென்று

முழங்கும் பாரதியின் இசையே.

முன்னோர் பெருமைமட்டும் பேசிப்–புது

முயற்சி ஒன்றுமின்றிக் கூசிச்
சின்னா பின்னமுற்று வாடும்–நாம்

சீர்திருந்தக்கவி பாடும்.

அடிமைப் படுகுழியில் வீழ்ந்தோம்–வெறும்

அரிசிப் புழுக்களெனத் தாழ்ந்தோம்.
கொடுமை கண்டுமனம் கொதித்தான்–கவி

கொட்டி வீரியத்தை விதைத்தான்.

ஊனைப் பெரியதெனக் கொண்டோம்–ஆன்ம

உணர்வை விற்றுருசி கண்டோம்.
மானம் போகும்என்ற நிலமை–தனை

மாற்றும் பாரதியின் புலமை.

பண்டைச் சிறப்புகளைப் பாடிக்–கிழப்

பாட்டிகள் கூட்டமெனக் கூடி
அண்டிப் பதுங்கிவிட்ட நாட்டில்–நவ

ஆர்வம் வளர்த்தவன் பாட்டே.

தீரன் அறிவுரையை இகழ்ந்து–வெறும்
திவசம் நடத்திமட்டும் மகிழ்ந்து,
பேரைக் கெடுத்துவிட மாட்டோம்–எனும்
பிரதிக்ஞை பூண்டுவரம் கேட்போம்.

கவிஞன் வாக்குறுதி பலிக்கும்–நம்

கவலை தீர்ந்துநலம் ஜொலிக்கும்
புவியில் கீர்த்தியுடன் வாழ்வோம்–வெகு

புதுமை யாகஅர சாள்வோம்.

வாழ்க பாரதியின் அருமை–அதில்

வளர்க தாய்மொழியின் பெருமை.
வாழ்க வையகத்தில் யாரும்–பிணி

வறுமை அச்சமற்று வாழ்க.

***



நாமக்கல் கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****









Share this:

எழுதியவர் : (22-Dec-17, 5:02 pm)
பார்வை : 40

மேலே