யம கண்டமே ஏறிப் பாடுவேன், அதற்குத் தயாரா புலவரின் சவால்

தமிழ் இன்பம்

அரிகண்டம் ஏறிப் பாடத் தயாரா? யம கண்டமே ஏறிப் பாடுவேன், அதற்குத் தயாரா? அதிசயத் தமிழ்ப் புலவரின் சவால்!



ச.நாகராஜன்



1

தமிழ் மொழியின் ஆற்றல் எல்லையற்றது என்றால் அதன் அருமை பெருமைகளை உணர்ந்து அந்த ஆற்றலின் மூழு வீச்சையும் தம் கவிதைகளிலே காட்டிய புலவர்களின் பெருமையும் எல்லையற்றது தான்.



அவ்வப்பொழுது காலத்திற்கேற்றவாறு தமிழன்னை கண்ட புதல்வர்கள் ஏராளம். அவர்கள் கவிதைகளின் அருமை ஒரு புறம் இருக்க, அதை அவர்கள் எப்படிப்பட்ட அபாயத்தையும் எதிர்கொண்டு பாட அஞ்சவில்லை என்பது உளத்தை உருக்க வைக்கும்; பிரமிக்க வைக்கும் ஒரு செய்தி.





இப்படிப்பட்ட அபாயகரமான சூழ்நிலையில் உலகில் வேறு எந்த ஒரு மொழியிலும் ஒரு கவிஞர் தன் திறமையைக் காட்டியிருக்காரா என்றால் இல்லை என்று தான் பதில் சொல்ல வேண்டும்.





கவி காளமேகம் என்று மிகவும் பிரபலம் அடைந்திருந்த புலவரைப் பற்றிய செய்திகளும், அவரது கவிதைகளும் நம்மை பிரமிக்க வைப்பவை.





கவி காளமேகப் புலவரின் 160 பாடல்கள் என் தொகுப்பில் உள்ளன. சுவை மிகுந்த பாடல்கள். புத்தி கூர்மையையும், தனக்கு விதிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் அந்த புத்தி சாதுரியத்தை இலக்கண வழு இல்லாமல், அனைவரும் வியக்கும் படி காட்டியும் அமைக்கப்பட்ட பாடல்கள்.





தமிழின் மேன்மைக்கும் தமிழ்ப் புலவர்களின் புத்தி கூர்மைக்கும் இன்னும் ஒரு சான்று அரிகண்டப் பாடல் பாடுவீரா என்று கேட்கப் போய் யமகண்டப் பாடல்களையே பாடுவேனே என்று கூறிப் பாடிய கவி காளமேகம் என்னும் அற்புதக் கவிஞர்!



2

அதிமதுரக் கவிராயர் என்பவர் 64 தண்டிகைகாரர்கள் புடைசூழ திருமலைராயன் பட்டிணத்தில் தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற இறுமாப்புடன் கவி அரசோச்சி வந்தார்.



காளமேகம் என்னும் ஒரு மாபெரும் கவி அவரையும் விஞ்சும் ஆற்றல் படைத்தவர் என்பதை அறிந்து அவருக்கு அதிர்ச்சி உண்டானது.



காளமேகம் அதிமதுரக் கவிராயருக்கு பராக்கு கூறுகின்றவனை நோக்கி, “ நீ கட்டியம் கூறுகிறாயே, அது முறையா? இவனை அதிமதுரம் என்று கூறுகின்றாயே, அப்படி என்ன புதுமை இவனிடம் இருக்கிறது? காட்டில் உண்டாகும் சரக்கு, காரமில்லாத சரக்கு. தனியே பிரயோகிக்க முடியாமல் வேறு சரக்குடனே கூட்டிப் பிரயோகிக்கும் சரக்காகிய மலைக்குன்றிமணி வேரை உலகத்தார் ஆதிகாலம் தொட்டு அதிமதுரம் என்று வழங்கி வருவது சகஜம். ஆகவே நீ கட்டியம் கூறுவது முறையல்ல” என்று கூறியவர் அதை ஒரு பாடலாகவும் அமைத்தார்.





‘அதி மதுரமென்றே யகிலமறியத்

துதி மதுரமா யெடுத்துச் சொல்லும் – புதுமையென்ன

காட்டுச் சரக்குலகிற் காரமில்லாச் சரக்குக்

கூட்டுச் சரக்கதனைக் கூறு”

என்ற பாடலை அவனிடம் கொடுத்து அனுப்பினார்.



அதைக் கண்ட அதிமதுரக் கவி இந்த பகிரங்க சவாலைக் கண்டு அயர்ந்து போனார்.



காளமேகம் யார் என்பதை விசாரிக்க ஒருவனை அனுப்பினார்.

அவனைக் கண்ட காளமேகம் தான் யார் என்பதை ஒரு பாடலாகவே தந்து அனுப்பி விட்டார்.



தூதைந்து நாழிகையி லாறுநாழிகைதனிற் சொற்சந்தமாலை சொல்லத் துகளிலா வந்தாதி யேழு நாழிகைதனிற் றொகைபட

விரித்துரைக்கப்,



பாதஞ்செய் மடல்கோவை பத்துநாழிகைதனிற் பரணியொரு நாண்முழுதுமே பாரகாவியமெலா மோரிரு தினத்திலே பகரக் கொடி கட்டினேன்,



சீதஞ்செயுந் திங்கண்மரபினோ னீடுபுகழ் செய்ய திருமலைராயன் முன் சீறுமாறாகவே தாறுமாறுகளசொல் திருட்டுக் கவிப்புலவரைக்,

காதறுத்துச் செருப்பிட்டடித்து கதுயபிற்புடைத்து வெற்றிக் கல்லணையினொடு கொடிய கடிவாளமிட்டேறு கவிகாளமேக நானே!”



இந்தப் பாடலைக் கண்ட அதிமதுர கவிராயர் திகைத்துப் போனார்.

“ஐந்து நாழிகையில் தூது பாட வல்லவன். (இரண்டரை நாழிகை ஒரு முகூர்த்தம் அதாவது ஒரு மணி நேரம். ஒரு நாழிகை என்பது 24 நிமிடம். ஐந்து நாழிகை என்றால் இரண்டு மணி நேரத்தில் ஒரு தூது நூல் முழுவதும் இயற்ற வல்லவன்!)

ஆறு நாழிகையில் சொற் சந்த மாலை ( அதாவது ஆறு x 24 நிமிடங்களில் சொற் சந்த மாலை ரெடி!)





அந்தாதி வேண்டுமா? ஏழு நாழிகையில் ரெடி!

மடல், கோவை பத்து நாழிகையில் ரெடி ஆகும்!

பரணி பாட தேவை ஒரு நாள் தான்!

பார காவியம் இயற்ற ஓரிரு நாள் போதும்.



திருமலைராயனை ஏமாற்றித் திருட்டுக் கவி புனைவோர் கவனிக்கவும்,

இதை எழுதுவது கவி காளமேகமாகிய நான் தான்!”

அதிமதுரகவி தனது 64 தண்டிகைகாரரையும் நோக்கி அந்தக் காளமேகம் இங்கு வந்தாலும் வரலாம். அவரை அரசனை நெருங்க வழி விடாதபடி சுற்றி அரண் அமைத்து அமருங்கள் என்று கட்டளையிட்டார்.



திருமலைராயன் அரசவையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கப் புயலென காளமேகம் அங்கு வந்தார்.

தன்னை அரசனிடம் போக விடாதபடி செய்யப்பட்ட சூழ்ச்சியைக் கண்டார்.



ஒரு எலுமிச்சம்பழத்தைக் கையில் வைத்துக் கொண்டு அதை மன்னனுக்கு நேரே நீட்டி ஸ்வஸ்தி சுலோகம் ஒன்றைக் கூறலானார்.



பிராமணர் ஒருவர் வாழ்த்திக் கூறும் ஸ்லோகத்தையும் அவர் தரும் எலுமிச்சையும் ஒரு மன்னன் நிச்சயம் வாங்க வேண்டும் என்ற விதிமுறையால் மன்னன் தானே வந்து அதை வாங்கிக் கொண்டான்.



ஆனால் கவிஞரை அமரச் சொல்லவில்லை.

நேராக மனதிற்குள்ளாகவே அகிலாண்டேஸ்வரி விமானத்தை தரிசித்து அன்னை சாரதை தேவியை மனக் கண்ணில் ஏற்றி, அவர் பாடினார்:



“வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப் பணி பூண்டு

வெள்ளைக் கமலத்து வீற்றி ருப்பாள் – வெள்ளை

அரியாசனத்தி னரசரோடென்னைச்,

சரியாசனத்து வைத்த தாய்”



இந்தப் பாடலைக் கூறியவுடன் அன்னை மனம் கனிந்தாள். அரசனது அரியாசனம் ஒரு பக்கமாக வளைந்து இடம் கொடுத்தது.



அதில் அமர்ந்தார் கவி காளமேகம்.





3

அங்கிருந்த அதிமதுரக் கவிராயர் திகைக்க காளமேகம் அவரை நோக்கி, “நீங்கள் யார்?” என்றார்.

‘நானா! என்னையா கேட்கிறாய்? நான் கவிராஜன்” என்று கர்வத்துடன் பதில் கூறினார் அதிமதுரக்கவிராயர்.

காளமேகம் கவி என்பதற்கு குரங்கு என்று பொருள் கொண்டு அவரைக் கிண்டலடித்தார்.



“கவி ராஜன் என்கிறாயே! உனது வால் எங்கே? நாலு கால் எங்கே? ஊன் வடிந்த கண்ணெங்கே” என்ற பொருள்பட பாடல் ஒன்றைப் பாடினார்:



“வாலெங்கே, நீண்டெழுந்த வல்லுயிரெங்கே நாலு

காலெங்கே யூன் வடிந்த கண்ணெங்கே – சால

புவிராயர் போற்றும் புலவீர்கா னீங்கள்

கவிராய ரென்றிருந்தக் கால்”





கோபம் கொண்ட அதிமதுரக் கவிராயர், “ நீர் கவி காளமேகம் என்றால், அரிகண்டம் பாடுவீரா?” என்று கேட்டார்.

“அரிகண்டம் என்றால் என்ன?” என்று எதிர்க்கேள்வி கேட்டார் காளமேகம்.



“கழுத்திலே கத்தியைக் கட்டிக் கொள்ள வேண்டும். எதிரி கொடுக்கும் சமிசைக்கு இணங்க உடனடியாகப் பாடவேண்டும். அப்படிப் பாடுவது தான அரிகண்டம். உன்னால் முடியுமா? பாடத் தயாரா?” என்றார் அதிமதுரக் கவி.



பயந்து ஓடி ஒளிவார் காளமேகம் என்று எதிர்பார்த்த அதிமதுரக் கவிக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.



“பூ! இவ்வளவு தானா! நான் யமகண்டமே பாடுவேன். நீங்கள் பாடத் தயாரா?”



யமகண்டம் என்றால் என்ன என்று தெரியாத அதிமதுரகவி யமகண்டம் என்றால் என்ன என்று கேட்டார்.



காளமேகம் யமகண்டத்தை விளக்கினார் இப்படி:



பூமியில் பதினாறு அடி நீளம், பதினாறு அடி அகலம், பதினாறு அடி ஆழம் கொண்ட ஒரு குழியை வெட்ட வேண்டும். அதன் நான்கு மூலைகளிலும் பதினாறு அடி இரும்புக் கம்பங்களை நாட்ட வேண்டும். கம்பத்தின் மேல் நான்கு பக்கத்திலும் இரும்பினால் செய்த நான்கு சட்டங்களை அமைக்க வேண்டும். அதன் நடுவிலே ஒரு சட்டம் பொருத்த வேண்டும். நடுச் சட்டத்தில் உறி கட்ட வேண்டும். குழிக்குள்ளே பருத்த புளியங்கொட்டைகளை நெருங்க அடுக்கி, கட்டைக்குள் நெருப்பு மூட்ட வேண்டும். அது கனன்று எழுந்து ஜுவாலையுடன் எரியும் போது, அந்த நெருப்பில் ஒரு ஆள் உயரமுள்ள இரும்புக் கொப்பரை ஒன்றை வைக்க வேண்டும். கொப்பரையை எண்ணெயால் நிரப்ப வேண்டும். அதில் அரக்கு, மெழுகு, குங்கிலியம், கந்தகம், சாம்பிராணி ஆகியவற்றை இட்டு நிரப்பி அவை நன்றாகக் காயும்படி செய்ய வேண்டும், அவை காய்ந்து உருகிக் கொதித்துக் கொண்டிருக்க, அப்போது,



நான்கு யானைகளை பாகர்கள் மதம் ஏற்ற வேண்டும். அவற்றை கம்பத்திற்கு ஒன்றாக மலைகளைப் போல நிறுத்தி வைத்திருக்க, பின்புறத்தில் வளையம் வைத்து , வளையத்தில் சங்கிலி கோர்த்து, எஃகினால் கூர்மையாக சமைக்கப்பட்ட பளபளவென்று மின்னும் படி சாணை பிடிக்கப்பட்ட எட்டுக் கத்திகளை, கழுத்தில் நான்கும், அரையில் நான்குமாகக் கட்டிக் கொண்டு , கத்திகளின் புறத்தில் உள்ள சங்கிலிகளை நான்கு யானைகளின் துதிக்கையில் கொடுத்து வைத்து, தான் கொப்பரைக்கு நேராகத் தொங்குகின்ற உறி நடுவில் ஏறி, எவரெவர் என்னென்ன சமிசை கொடுத்தாலும் அவற்றை அரை நொடிக்குள் தடையின்றி கேட்டவர் குறித்த கருத்து வரும்படி பாட வேண்டும், அப்படிப் பாடும்போது வழு ஏற்படுமானால், சமிசை கொடுத்தவர்கள் யானை மேலிருக்கும் பாகர்களுக்கு கண் சைகை காட்ட, அவர்கள் யானைகளின் மத்தகத்தில் அங்குசத்தால் குத்தி அதட்ட, அவைகள் தமது தும்பிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கும் சங்கிலிகளை விசையுடன் வேகமாக இழுக்க, அப்படி இழுத்தவுடன் புலவன் கழுத்தும், அரையும் கத்திகளால் துண்டிக்கப்பட்டு தலை ஒரு துண்டமாகவும், அரை முதல் கால் வரை ஒரு துண்டமுமாகி கொதிக்கின்ற எண்ணெய் கொப்ப்ரையில் விழும். இப்படி விழுந்து மாண்டு போவது தான் யமகண்டம்.





கோரமான இந்த யமகண்டத்தைக் கேட்ட அதிமதுரக் கவிராயரும், 64 தண்டிகைகாரர்களும், திருமலைராயனும், கூடியிருந்த மக்களும் திகைத்துப் போயினர்.



திடுக்குற்ற அதிமதுரக் கவி, “இதைச் சொன்ன நீரே செய்து காண்பியும்” என்று சவால் விட சவாலை ஏற்ற கவி காளமேகம் மேகமென கேட்ட கேள்விக்கெல்லாம் கவி மழையாகப் பதில் அளித்தார். கடினமாகக் கொடுக்கப்பட்ட கவிதைப் புதிர்களை எதிர் கொண்டார்.



64 தண்டிகைகாரர்களும் அயர்ந்து போக, மன்னன் பிரமிக்க, அதிமதுரக் கவி திகைக்க காளமேகம் பாடிய பாடல்கள் ஒரு தனி வரலாறையே படைத்தன.







4

சற்று எண்ணிப் பார்ப்போம். கற்பனைக்காகக் கூட உலகில் எந்த ஒரு நாட்டிலும் இப்படி ஒரு புலவர் பாடியதாக கற்பனை கதை கூடக் கிடையாது.



ஆனால் நம்மிடமோ கவி காளமேகத்தின் அற்புதமான பாடல்கள அனைத்தும் உள்ளன.



கொடுத்து வைத்தவர்கள் தமிழர்கள்.

இன்றளவும் அவை நிலைத்து நிற்கின்றன!

காளமேகம் யமகண்டம் பாடி அரங்கேறிய கவிதைகள் காலத்தை வென்றவை; அவை கவிஞரின் புகழை மட்டும் நிலை நிறுத்தவில்லை;

தண்டமிழின் பெருமையையும் உயரத்தில் ஏற்றிக் காத்து வருகின்றன, இன்றளவும்.





5

என்னிடம் இருக்கும் பழைய பிரதி ஒன்றில் உள்ள யமகண்டம் பற்றிய விளக்கத்தையும் காளமேகம் பற்றிய செய்தியையும் இன்றைய நாளுக்கு ஏற்றபடி எளிய தமிழில் தந்துள்ளேன்.

பாடல்களைத் தனியே பார்க்கலாம்.



இவை கால வெள்ளத்தில் அறியப்படாமலேயே போய்விடக் கூடாதென்று தான் இந்தக் கட்டுரையை அளிக்க முற்பட்டேன்.

.



இன்னும் இப்படி பல தமிழ் நாட்டிற்கென்றே உரித்தான பல விஷயங்கள் உள்ளன.

எழுதியவர் : (22-Dec-17, 4:51 pm)
பார்வை : 30

மேலே