எங்கே கிராமிய கலைகள் எங்கே ?
அழகுக் கலைகளை ஈன்ற தாய் தமிழ்நாட்டில்-இன்று
கிராமக் கலைகளோ கரைதேடி அலைகின்றது
கரகாட்டம் மயிலாட்டம் ஒயிலாட்டம் எல்லாம்
கோவில் திருவிழாவில் கூட கண்ணில் தெரிவதில்லை,
தமிழனின் வீரம் சொல்லும் சிலம்பாட்டமோ - இன்று
எடுப்பார் கைப்பிள்ளையாய்க் கிடக்கின்றதே.
கராத்தே,குங்க்பு,கோபுடோ எல்லாம் நமது
சிலம்பத்தை செயலிழக்க செய்ததுவோ ?
அந்நிய மோகத்தில் அழகு கலைகள் எல்லாம்
நம் கண்ணுக்கு கழிவாக தெரிகின்றதோ ?
தமிழகம் தந்த அந்த வர்மக்கலையை இன்று
கண்ணில் காண்பது என்பது எளிதானதா ?
சப்பானும் சீனமும் இன்று வரையில் தன்
கலைகளை பொக்கிஷமாய் காத்து நிற்க
பண்பாட்டில் ஊறி நிற்கும் நமது நாடோ
கிராமக் கலைகளை வளர்த்தெடுக்க தயங்குவதா
கரகம் என்றொரு கலையும் உண்டா - என
நாளை குழந்தை நம்மிடம் கேள்வி கேட்க்கும்
நாளைய சந்ததியின் கேள்விக்கு நமது பதில் தான்
என்ன என்பதை நாம் முதலில் சிந்திப்போம்
நாம் பார்த்த கலைகளை நம் சந்ததிகளும்
காண காரியம் செய்வது நம் கடமையன்றோ .
கலைநயம் கொண்ட கிராமியக் கலைகளை
நாளும் வளரச்செய்வது நம் பெருமையன்றோ .......