அன்னை இளையளாய் மூத்திலள் கொல்லோ – முத்தொள்ளாயிரம் 54
நேரிசை வெண்பா
வளையவாய் நீண்டதோள் வாட்கணாய்! அன்னை
இளையளாய் மூத்திலள் கொல்லோ - தளையவிழ்தார்
மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக்
கண்கொண்டு நோக்கல்என் பாள். 54 முத்தொள்ளாயிரம்
தெளிவுரை:
நீண்ட தோள்களையும், வளைந்த வாள் போன்ற ஒளிபொருந்திய கண்களையும் கொண்ட தோழியே!
கட்டவிழ்ந்து தளர்ந்த மாலையணிந்தவனும், பகைநாட்டினரை வென்று அந்நாட்டையும் கைப்பற்றிய படைகளையும், ஆண்மைத்தீக் கனலும் உடைய வேலையும் உடைய பாண்டியனை நோக்காதே என்கின்ற என்அன்னை என்னைப்போல் இளமையுடையவளாய் இருந்து முதுமையடைய வில்லையோ? என்கிறாள்.
விளக்கம்:
வாட்கணாய் – வாள் போன்ற கூர்மையான ஒளி பொருந்திய கண்களை உடையவளே,
மூத்திலள் கொல் – முதுமை அடையவில்லையோ,
தளையவிழ்தார் – கட்டவிழ்ந்த மாலை,
மண்கொண்ட தானை – பகைவர் நாட்டை வென்று கைக்கொண்ட படை,
மறங்கனல் – ஆண்மைத்தீ, கண்கொண்டு நோக்கல் – கண்களால் பார்க்காதே;