தற்போதிய இளஞர்களிடம் சமுக வலை தளங்களின் தாக்கம்

இந்த நூற்றாண்டில் உலகளாவிய முறையில் எங்கெல்லாம் மனித சஞ்சாரம் இருக்குமோ அங்கெல்லாம் இலத்திரனியல் / மின்னனுவியல் (electronics) தகவல் சாதனங்கள் காணப்படுகின்றன.

தகவல் உச்சமமான தற்போதைய தசாப்தத்தில் தொழிநுட்ப முன்னேற்றங்கள் எவ்வாறு எமது அன்றாட வாழ்க்கையில் பலனையும், பாதகங்களையும் உண்டாக்கலாம் என ஒரு சில நிமிடங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது எமது குடும்பத்திற்கும் உடல் மற்றும் உள நலத்திற்குப் பயனாகவும், மன நிம்மதியைத் தரவும் வழிவகுக்கும்.

எம்மில்லங்களில் வளரும் பிள்ளைகளில் பெரும்பாலானோர் பாலகர்களாக இருக்கையிலேயே ஓடுபட கணனி விளையாட்டுக்கள் (video games), இசைப்பெட்டிகள் (iPods), இலத்திரனியல் சுவடிகள் (Tablets), பலகைகள் (IPads), மற்றும் பல்வேறு இணையதள உபகரணங்கள் Web Appliance என பல்வேறு சாதனங்களைச் சர்வசாதாரணமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இவற்றில் வளரும் பிள்ளைகளிடம், சமூகவலைகள், குறிப்பாக FaceBook (முகநூல்) பெரும் செல்வாக்கை வகிக்கின்றது. இது இலத்திரனியல் தகவல் நூற்றாண்டில் பிறக்காத பெற்றார்களுக்கு சில சமயம் தர்ம சங்கடமான விடயம்.

FaceBook – முகநூல், சமூகவலைச் சாதனங்கள், தற்போது கணினி, கைப்பேசி பயன்படுத்தத் தெரிந்த பருவத்திற்கு வராத பிள்ளைகளில் இருந்து வயோதிபர் வரை அனைவரையும் ஈர்க்கும் ஒரு தகவல் பரிமாற்று தளமாக இருந்து வருகிறது.

நம் வீடுகளில் இடைநிலை பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளும்,
பெற்றோரும் கைப்பேசி வைத்திருப்பதும், பாவிப்பதும் சுய பயன்பாட்டு
உரிமையென பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.

இத்தருணத்தில் சமூகவலைகளின் நன்மை, தீமைகளை அதைப் பயன்படுத்தும் அனைவரும் அறிந்திருப்பது அவசியம்.
நன்மைகள்

• சமூக ஈடுபாடு – Facebook போன்ற சமூகவலைகள் நிச்சயமாக பிள்ளைகளுக்குத் தமது நண்பர்களுடன் தொடர்பை வைத்திருக்கவும்,
மேலும் புதிய நட்புகளை உண்டு பண்ணவும் இன்னொரு மார்க்கமாக
உதவுகிறது. சரியான முறையில் இது பாவிக்கப்பட்டால் இயல்பான,
நேரடி அறிமுகங்கள் போன்று இதுவும் பிள்ளைகளுக்குத் ஒரு நல்ல சுற்றத்தை அமைத்து தரும்.

• சுய அபிப்பிராயங்கள் – சமூகவலை அனைவருக்கும் தமது சுய அபிப்பிராயங்களைத் தெரிவிக்க உறுதுணை வகிக்கும். உதாரணமாகத் தமக்கென இணையப் பக்கம் அமைக்கவும், அதில் தமது மன கருத்துக்களை தமது நண்பர்களுடனும், உலகத்தாருடனும் மனத்திடமாகப் பகிர உதவும்.

• மின்னியல் தகவல் உபயோகத்திறன் – பிள்ளைகள் என்றாலும் சரி, பெரியவர்கள் என்றாலும் சரி எவ்வாறு உடன்கருத்துப் பரிமாறல் செய்யலாம், தகவல் ஆராயலாம், திரட்டிப் பாவிக்கலாம் என்ற இக்கால அத்தியாவசியத் திறன்களைப் பெற வாய்ப்பளிக்கிறது. இதன் காரணமாகப் பிள்ளைகள் சுயமாக எழுத, படம் எடுத்துப் பரிமாற, கானொளி எடுத்துக்கதை சொல்ல, மின்வலையில் தகவல் தேடும் திறன்களைப் பயில வழிவகுக்கிறது.

• கல்வி மேம்பாடு – மின் இணைவு தளம், சமூகவியல் வலைகள் சிறந்த
அறிவுக் களஞ்சியங்கள் ஆகும். புதிய அறிவைப்பெற, கல்வி சம்பந்தமான அறிவைப் பெற, கேள்வி பதில்களை உடனுக்குடன் பரிமாற, சமூகவியல் வலை சிறப்பான சாதனமாகும்.
தீமைகள்

• நம்பகத்தன்மை – இதுப் போன்ற பொது வலைத்தலங்களில் யார் வேண்டுமானலும் தமது கருத்துக்களை வெளிப்படுத்த முடியும். ஆகையால் இத்தகவல்கள் உண்மையான தகவலாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. திசை திருப்பும் தகவல்களை ரசிக்கும் வகையில் கொடுத்து வாசிப்பவர்களை மூளைச் சலவை செய்யும் நபர்களும் உண்டு.

• கொடியவர்களின் கைவேலை – FaceBook போன்ற சமூகவலையில்
வரையறையின்றி யாரும் யாரிடமும் தொடர்பு கொள்ளலாம்.
குறிப்பாகப் பிள்ளைகள் பெற்றார், சுற்றார் மூலமே இயல்பாக
சமூகவரையறைகளைப் பெறுவர். ஆயினும் FaceBook போன்ற
சாதனங்களில் சிலர் தமது கொடிமைத்தனத்தை நேரடியாகவும்,
அனாமதேயமாகவும் காட்ட வழிவகுக்கும். ஒருத்தருக்கு ஒருவர்
அல்லது ஒரு குழுவாகப் பிள்ளைகளை உளவியல் ரீதியில் தாக்கவும்
வழியுண்டு. குறிப்பாக மற்றப் பிள்ளைகள் தொடர்பு சாதனங்கள் ஊடாக
நயவஞ்சகம் செய்தால் இதைப் பெற்றோரினால் தடுக்க முடியாது.

• கட்டுப்பாடின்மை – FaceBook தனித்துவமான ஒரு கட்டமைப்பு அல்ல, இது சிறிது சிறிதாகச் சிறார்களை ஆழ்ந்த கடல்போன்ற கட்டற்ற மின்வலைக்கு
எடுத்துச் செல்ல மிகுதியான வாய்ப்புக்கள் உண்டு. பிள்ளைகள் மின் வலயத்திற்குத் தாமாகவே செல்ல வயது குறைந்தவர்கள் எனப்
பெற்றோர் நினைத்தால், சமூகவலை உபயோகத்தைப் பற்றியும் சிந்திக்க
வேண்டும். குறிப்பாகத் தகாத தொடர்புகளை பிள்ளைகள் பெறாமால் காக்க வேண்டும்.

• அவதானம்தேவை – பிள்ளைகள் உடன் தொடர்பு கொள்வது அவர்கட்கும் குடும்பத்திற்குத் தெரிந்தவர்காளாக இருப்பினும், சமூகவலைகள் நண்பர்களிள் நண்பர்களை நம்பக்கூடிய நபர்களாகத் தாமாகவே இணைத்துவிடும். இது FaceBook போன்ற சமுகவலயங்கள் தமது வர்த்தக ஆதாயங்களிற்காகச் செய்யும் ஒரு கைவேலை. ஆயினும் இவ்வாறு தெரியாதவர்களைத் தொடுப்பது பிள்ளைகள் அறியாமல் வயதிற்கு ஏற்காத விடயங்களை எதிர்கொள்ளவும் வழிவகுக்கலாம்.

எனவே FaceBook போன்ற சமூகவலய தளங்களை பெற்றோர்கள், பிள்ளைகள்
ஒன்றாகக்கூடிச் சிந்தித்து உள, உடல் ஆரோக்கியத்தையும் பேணும்
வகையில் கையாளுதல் நன்மையே.

எழுதியவர் : (23-Jan-18, 4:59 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 560

மேலே