மரமாபிமானம்-5

அது ஒரு அந்திப்பொழுது நேரம். மரநேசன் தன் குடிசையில் நன்கு உறங்கிக்கொண்டிருந்தான். மதிய உணவிற்கு பின் ஒரு தூக்கம் போட்டு எழுந்து பின் சூடாக தேநீர் அருந்துவது அவனது வழக்கம்.

பகலெல்லாம் பணிக்கு சென்று மாலையில் வீடு திரும்பும் மனிதர்கள் போல் எங்கெங்கோ பறந்து சென்ற பறவைகள் மரநேசனின் மாந்தோப்பில் குழுமிக்கொண்டிருந்தன. பல பறவைகள் ஒன்று கூடி மகிழ்ச்சியில் எழுப்பிய ஓசையானது… எங்கே தங்கள் எசமானான் மரநேசன் தான் வழக்கமாக மாலையில் அருந்தும் தேநீரை மறந்து தூங்கிவிடுவானோ என்ற வருத்தத்தில் அவனை எழுப்புவது போல் இருந்தது.

பறவைகள் எழுப்பிய சத்தத்தில் விழித்துக்கொண்ட மரநேசன் மெல்ல படுக்கையிலிருந்து எழுந்து சோம்பல் முறித்து தேநீர் அருந்த ஊருக்குள் செல்ல ஆயத்தமானான். தன் தோப்பை சுற்றிலும் அமைத்திருந்த முள்ளாலான வேலியின் கதவை திறந்து மரநேசன் தேநீர் பருகுவதற்காக ஊருக்குள் கிளம்பினான்.

அவன் குடிசையிலிருந்து ஒரு மூன்று தெருக்கள் கடந்துதான் தேநீர் கடைக்கு போகவேண்டும். சூரியன் மறையும் திசைக்கு எதிர்திசையில் மரநேசன் நடந்து கொண்டிருந்ததால் சூரியனின் ஒளி அவன் முதுகில் பட்டு அவனின் நிழல் அவனுக்கு முன்னே தெரிந்தது. தேனீர் குடிப்பதற்கு அவனை விட அவன் நிழல் முந்தியடித்து செல்வது போல் இருந்தது அந்த காட்சி. செல்லும் வழியில் அண்டைவீட்டுக்காரர்கள் இருவர் கடுமையாக சண்டைபோட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஒருவன்: இந்த முருங்கை மரத்தின் வேர்ப்பகுதி எங்க காம்பௌண்ட்லதான் இருக்கு. எனவே, இதில் காய்க்கும் முருங்கைக்காய் அனைத்தும் எங்களுக்கே சொந்தம். இதை எங்கள் அனுமதியின்றி நீ பறித்து திண்பது தவறு.

மற்றொருவன் (கோபமாக): எது சரி எது தவறு என்பது எங்களுக்கும் தெரியும்...நீ உன் வேலையை பார்த்துகிட்டு போயா...எங்க காம்பௌண்ட் பக்கம் இருக்கிற மரத்தின் பகுதி எல்லாம் எங்களுக்கு தான் சொந்தம்.

ஒருவன்: ஓ அப்படியா...! அப்ப நான் எங்கள் பக்கம் இருக்கிற வேர் பகுதியை வெட்டி தள்ளிவிடுகிறேன்..பிறகு நீ எப்படி முருங்கைக்காய் பறிக்கிறன்னு நானும் பார்க்கிறேன்.

மற்றொருவன்: உனக்கு மட்டுந்தான் வெட்ட தெரியும்னு நினச்சுக்கிட்ருக்கியா..? எங்களுக்கும் வெட்ட தெரியும். எங்க வீட்டு பக்கம் நீட்டிக்கிட்டு இருக்கிற மரத்தின் பகுதியை நானும் இப்பவே வெட்டி தள்ளறேன் பாரு.

அதுவரை அவர்களின் முட்டாள் தனமான சண்டையை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மரநேசன்...அவர்கள் இருவரும் மாறி மாறி மரத்தை வெட்டிவிடுகிறேன் என்று கூறியதும் கோபத்தை அடக்க முடியாமல் கீழே கிடந்த கற்களை எடுத்து அவர்கள் மேல் வேகமாக வீசினான். வீட்டுக்காரர்கள் இருவரும்..அய்யயோ...மர பைத்தியம் வந்திருச்சிடா என்று கூறிக்கொண்டு வீட்டிற்குள் ஓடி மறைந்தனர். மரநேசன் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தபோது அந்த முருங்கை மரத்தில் அருகருகே தொங்கிக்கொண்டிருந்த இரண்டு முருங்கைக்காய்கள் காற்றில் மெல்ல அசைந்து ஒன்றோடொன்று முட்டிக்கொண்டன. முருங்கை மரம் இரு கரம் கூப்பி வணங்கி நன்றி கூறுவது போல் இருந்தது அந்த காட்சி. மரநேசன் அதைப்பார்த்து மெல்ல சிரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (30-Jan-18, 2:17 am)
பார்வை : 142

மேலே