மரமாபிமானம்-4

அது சரபேஸ்வரனின் வீடு. காவலாளிகள் இரண்டு பேர் வேகமாக ஓடிவந்து அந்த இரும்பு கதவை திறந்தபோது, கதவின் துருப்பிடித்த பாகங்கள் ஒன்றோடொன்று உராய்ந்துகொண்டு ஒருவகையான பயபுறுத்தும் ஓசையை எழுப்பிக்கொண்டே கதவை திறக்க ஒத்தாசை செய்துகொண்டிருந்தன. அந்த வீடு அமைந்திருக்கும் இடத்தை அபகரிப்பதற்க்காக கொல்லப்பட்ட உயிர்களின் அலறல் சத்தம் போல் இருந்தது அந்த ஓசை.

கதவு திறக்கப்பட்டவுடன் காவலாளிகள் காட்டிய கடமை வணக்கத்தை கவனத்தில் கொள்ளாது கப்பல் போன்று ஒரு மகிழுந்து கர்வமாக கதவைத்தாண்டி உள்ளே நுழைந்தது. அரண்மனை போன்றிருந்த அந்த வீட்டின் வாயிலுக்கு நேராக மகிழுந்து நின்றவுடன், இருசோடி கைகள் மகிழுந்தின் பின்பக்க கதவுகளை திறந்தன மறக்காமல் கடமை வணக்கத்தை செலுத்திய பிறகு. இருபக்க கதவுகளும் திறக்கப்பட்டாலும் தனக்கு அருகிலிருக்கும் கதவின் வழியாக மகிழுந்தைவிட்டு வெளியில் வந்தான் சரபேஸ்வரன்.

சட்டை, வேட்டி மற்றும் காலணிகள் என எல்லாவற்றையும் வெள்ளை நிறத்தில் ஒன்றுக்கு ஒன்று பொருத்தமாக அணிந்திருந்தாலும் கண்களுக்கு மட்டும் கருப்புநிற கண்ணாடி அணிந்திருந்தான் சரபேஸ்வரன் அவன் இதயத்தின் வண்ணத்திற்கு பொருத்தமாக.

மகிழுந்திலிருந்து வெளியேறி வீட்டிற்குள் சென்றுகொண்டிருந்தான் சரபேஸ்வரன், வழிநெடுக வேலையாட்கள் செலுத்திய, கடமை வணக்கத்தில் கரைந்திருந்த பய ரசத்தை கண்களால் பருகிக்கொண்டே.

வீட்டின் கூடத்தை அடைந்தவுடன் அங்கு அமர்ந்திருந்த இரு நபர்களை கண்டு சட்டென்று நின்றான் சரபேஸ்வரன். அவர்களும் சரபேஸ்வரனை கண்டவுடன் சடாரென்று எழுந்து நின்று வணக்கம் செலுத்தினர் கண்களில் பயத்தை சுமந்துகொண்டு. அடுத்தவர் பயத்தை புசித்து பிழைக்கும் சரபேஸ்வரனுக்கு அந்த இரு நபர்களின் கண்களில் காணப்பட்ட பயமும் பிடித்துத்தான் போயிருந்தது. கருப்பு கண்ணாடித் திரைக்குள் ஒளித்துவைக்கப் பட்டிருந்தாலும் அவன் கண்களில் தகித்துக்கொண்டிருந்த கோபக்கனலால் அவன் முகம் புகைந்து கொண்டிருந்தது. அதைக்கண்டு அந்த இருநபர்களின் கண்களில் காணப்பட்ட கலவர அலைகள் இன்னும் சீற்றமாகி சுனாமி அலைகளாய் விழிகளை தாண்டி விழுந்துகொண்டிருந்தது. அந்த இரு நபர்கள் கொடுத்த பய ரசத்தையும் திகட்ட திகட்ட பருகிவிட்டு தன அறை நோக்கி பயணித்தான் சரபேஸ்வரன்.

சரபேஸ்வரன் ஏதும் பேசாமல் தன் அறைக்குள் சென்று விட்டதால் பீதியில் கலங்கி போயிருந்த அந்த இருவரும் மேற்கொண்டு செய்வதறியாமல் குழம்பிக்கொண்டிருந்தனர். தன் அறையினுள்ளேயே இருக்கும் கழிப்பறைக்குள் சென்ற சரபேஸ்வரன் தன் இதயத்தின் கருணைக்கதவுகள் என்றும் திறவாது என்று சுட்டிக்காட்டுவதைப்போல படார் என்று கழிப்பறையின் கதவை மூடினான். எழுந்த ஓசையில் அந்த இருவரின் இதயங்கள் எக்குத்தப்பாக துடிக்கத் தொடங்கிவிட்டன. வாய் திறந்து பேசக்கூட முடியாத அந்த இடத்தில் இருவரும் தங்களுக்குள் இருக்கும் பய உணர்வை அவர்களின் வயிற்றில் பயத்தால் ஏற்பட்ட ரசாயன ஓசையின் மூலமும் மற்றும் வியர்வை தூரிகையால் முகத்தில் பயத்தை வரைந்துகொண்டும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர். சிறிது நேரம் கழித்து சரபேஸ்வரன் கழிப்பறையில் தண்ணீர் திறந்துவிடும் ஓசைகேட்டதும் இருவரும் அவசர அவசரமாக தங்கள் முகத்தை துடைத்துக்கொண்டு சரபேஸ்வரனின் வருகைக்காக காத்திருந்தனர். சுமாராக ஒரு ஐந்து நிமிடம் கழித்து தன் அறையிலிருந்து வெளியில் வந்தான் சரபேஸ்வரன் மறக்காமல் முகத்தில் கறுப்புக்கண்ணாடி அணிந்துகொண்டு.

வெளியில் வந்த சரபேஸ்வரன் நேராக சென்று தன் இருக்கையில் கம்பீரமாக கால்மேல் கால் போட்டு அமர்ந்ததும் அவன் பின்னால் உடனடியாக இரண்டு அடியாட்கள் வந்து நின்றனர். மெதுவாக தன் மீசையின் இருபுறத்தையும் தடவிக்கொண்டே சரபேஸ்வரன் பேசத்துவங்கினான்.

சரபேஸ்வரன்: என்னையா...கடைசியா என்ன சொல்றீங்க...?

இருவரில் ஒருவர்: ஐயா....அது..அது வந்து....

சரபேஸ்வரன்: என்னையா... வந்து போய்னுகிட்டு… சட்டுபுட்டுனு சரினு சொல்லிட்டு குடுக்கிற காசை வாங்கிட்டு போயிட்டே இருக்கனும்...

இருவரில் மற்றொருவர்: ஐயா....அது.. அந்த இடம் எங்க பூர்வீக சொத்துங்கய்யா...அதான்யா…. எங்களுக்கு விக்க விருப்பமில்லையா...

சரபேஸ்வரன் (கோபமாக): யோவ்…...உங்களோட விருப்பத்தை எவன்யா கேட்டான்....இதப்பாரு...இப்பவே ஒத்துக்கிட்டானா மார்க்கெட் ரேட்டாவது கொடுப்பேன்... இல்லனா நான் டீல் பண்ற விதமே வேற மாதிரி இருக்கும்...ஜாக்கிரதை...

சரபேஸ்வரன்: ஏய்...யார்ரா அவன்... கூப்புட்றா அந்த குமாஸ்தாவை...(என்று சரபேஸ்வரன் கோபமாக தன் செயலாளரை அழைத்தான்).

செயலாளர்: ஐயா சொல்லுங்கய்யா...

சரபேஸ்வரன்: நாளைக்கே ரெஜிஸ்டரேஷன் முடிச்சிடனும். இல்லனா......பாத்துக்க…
என்று சொல்லிவிட்டு.. சரபேஸ்வரன் அந்த இடத்திலிருந்து கிளம்பி மீண்டும் தன் அறைக்குள் சென்றுவிட்டான்.

செயலாளர்: எப்பா...பேசாம ஒழுங்கா நிலத்தை வித்துட்டு போய்டுங்க...நிலத்தை காப்பாத்துறணு சொல்லி உசுரை உட்றாதீங்கடா பாவிகளா...

அந்த இருவரும் வேறு வழியின்றி நிலத்தை விற்க ஒத்துக்கொண்டு அங்கிருந்து கவலை தோய்ந்த முகத்துடன் வெளியேறினர்.

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (30-Jan-18, 2:16 am)
பார்வை : 76

மேலே