ஓ அந்த நாட்கள்

ஓ அந்த நாட்கள் ….
சக்கரம் உருட்டி விளையாடினோம்
சப்பரம் செய்து மகிழ்ந்தோம்
பிள்ளையாரை சுற்றி வந்து
பிழையை மன்னிக்க வேண்டினோம்
வயல்வெளியில் பட்டம் விட்டோம்
வாயுவின் வேகத்திற்கு ஈடாக
அரசமரம் வேப்பமரம் சுற்றி
அசராமல் ஓடி விளையாடினோம்
வேகாத வெயிலில் வியர்க்க
வெறியாய் கிட்டிப்புள் விளையாட்டு
திண்ணையில் மதியம் அமர்ந்து
திளைக்காமல் சீட்டு விளையாடினோம்
கீரை பாத்தியில் குழுசேர்த்து
கிரிக்கெட் விளையாடினோம் குதூஹலமாக
இருட்டறையில் சூரியஒளி சேர்த்து
இனிய படம் காட்டினோம்
மயங்கும் மாலை வேளையில்
மணற்பரப்பில் கபடியின் உற்சாகம்
பனி நிறைந்த மார்கழியில்
பஜனை செய்தோம் அபசுரமாக
சினிமா கொட்டகையில் மணலில்
சிங்காசனம் அமைத்து அகமகிழ்ந்தோம்
வாடகை சைக்கிள் எடுத்து
வீதியை சுற்றி வந்தோம்
தென்னந் தோப்பில் இளநீர்
திருடி தாகம் தீர்த்தோம்
பாலத்தில் நிலவொளியில் அமர்ந்து
பல்லாயிரம் கதை பேசினோம்
ஓ இனிய நினைவுகள் ...
வாழ்க்கைக்கு ரீவைண்ட் பட்டன் இருந்தால் …….
வாழ்ந்து பார்க்கலாம் இன்னொருமுறை ,,,,

எழுதியவர் : (30-Jan-18, 1:04 pm)
சேர்த்தது : ராமகிருஷ்ணன்
Tanglish : o antha nadkal
பார்வை : 51

மேலே